Monday, February 8, 2010

கணவன் - மனைவி - ஆடை!

கடந்த வாரம் கணவனா மனைவியா என்ற தலைப்பில் ரியாத்-தில் நடந்த நகைச்சுவையான பட்டிமன்றத்தில் கணவனே என்று பேச "நேர்ந்தது".

'நேர்ந்தது' என்று சொல்லக்காரணம், ஏற்றுக்கொண்ட தலைப்புக்கேற்ப பேசினேன் என்பதைத்தான். இல்லாவிட்டால், எல்லாக் கணவர்களையும் போல நானும் மனைவியே! கட்சி தான் என்பது இங்கு கேடயக்குறிப்பு. (Disclaimer).

பேசி முடித்ததும், நிறையவே பாராட்டுக்கள் கிடைத்தன என்றாலும் ஒரு சகோதரியின் பாராட்டு புன்னகைக்க வைத்தது. "நல்லாயிருந்துச்சுங்க! - இன்னும் கொஞ்சம் சிரிச்சிக்கிட்டே பேசி இருக்கலாம்!"

உண்மையைச்சொன்னால், மேடை அனுபவம் அதிகமில்லாத நிலையில், மேடைக்கூச்சத்தை சரிசெய்துக்கொள்ள கிடைத்த வாய்ப்பை தவறு செய்யாமல் பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். நிறைய பேசும் எண்ணமும், குறிப்புகளும் வைத்திருந்தும், பதவிக்காலத்தில் அரசியல்வாதிகள் நினைவுபடுத்திக்கொள்ளும் வாக்குறுதிகளைப் போலாகிவிட்டிருந்தன என் மேடைநேரத்துச் சிந்தனைகள்.
மேடையை விட்டு இறங்கியதும் தான், தேர்வு முடிந்த மாணவனுக்கு ஞாபகம் வருவது போல, வரிசையாக நினைவுகளில் அலைமோதின குறிப்புகள்."அட, அந்த ஒரு சிரிப்பையும் சொல்லியிருக்கலாமே...?"
அன்றைய இரவில் எனக்கு இதே தலைப்பினையொட்டி ஒரு மின்னல் கீற்று ஞாபக அ(இ)டுக்குகளிலிருந்து கண்விழித்தது.

கிட்டத்தட்ட பதினைந்து, பதினாறு ஆண்டுகளேனும் இருக்கலாம், ஆடை என்கிற தலைப்பில் கவிக்கோ அப்துல்ரகுமான் எழுதிய ஒரு ஆன்மீகக் கட்டுரை வாசித்து!

ஜூனியர் விகடனோ, ஜூனியர் போஸ்ட்டோ, நினைவில்லை, ஆறாவது விரல் என்கிற தொடரில் எழுதியிருந்தார். நினைவிலிருக்கும்வரை எழுதுகிறேன், தவறாக ஏதும் இருப்பின், அறிந்தவர்கள் சுட்டினால் திருத்திக்கொள்வேன்.

ஆன்மீகம் என்று வரும்போது, இலக்கியவாதிகளைப் பொருட்படுத்த வேண்டியதில்லை என்பது என் பொதுவான கொள்கை! காரணம், இலக்கியம் என்பது என்னதான் காலக்கண்ணாடியாக கருதப்பட்டாலும், குவிஆடியாகவோ, குழி ஆடியாகவோ-எதையும் மிகைப்படுத்தவோ, குறைப்படுத்தவோ-செய்கிறது என்பதென் எண்ணம்.

ஆயினும்,யோசித்துப்பார்த்தவரை 'ஆடை' என்கிற கவிக்கோவின் கட்டுரை இயல்பாக இருப்பதாகவே உணர்கிறேன். எனவே, நினைவிலிருந்து இங்கு பதிவிறக்கம் செய்துவைக்கிறேன். ஏதும் தவறாக எழுதி இருப்பதாக அறிந்தவர் சுட்டினால் திருத்திக்கொள்கிறேன்.

குர்ஆனில் கணவன் மனைவி குறித்து சொல்லப்படும் ஒரு உவமைக்கு அப்துல்ரகுமான் அதில் விளக்கமளித்திருந்தார்:

சூரத்துல் பகரா என்கிற அத்தியாயத்தில் 187ம் வசனத்தில் "அவர்கள் உங்களுக்கு ஆடை; நீங்கள் அவர்களுக்கு ஆடை!" என்று சொல்லப்பட்டுள்ளது! அதாவது, கணவன் மனைவிக்கு ஆடை! மனைவி கணவனுக்கு ஆடை!

மணவாழ்க்கையில் யார் உயர்ந்தவர்கள் என்பதில் கணவன், மனைவி இடையே தான்மை (Ego) விளையும் நிலையில் இவ்வசனம் தீர்வாய் நிற்கிறது.இருவரும் ஒருவருக்கொருவர் ஆடை. எனவே, இப்பதவிகளைப் பொறுத்த அளவில் இருவரும் சமமே!

அதி முக்கியத் தேவைகள் மூன்றில், உணவை, உறைவிடத்தை உவமையாகக் கூறாமல், உடையைச் சொன்னதில் ஆழமான பொருள் இருக்கிறது.ஏனெனில், உயிரினங்களில் மனிதன் மட்டும் தான் ஆடை அணிகிறான். பாலுணர்வையும், அழகாக, திருமணம் என்கிற வரம்புக்குட்பட்டு வெளிப்படுத்துவது மனித இனம் மட்டுமே.அதனால் தான் அவன் 'மண'க்கிறான்.

திருமணம் என்பதை ஆணும் பெண்ணும் 'ஆடை' அணியும் நிகழ்வாகச் சொல்லப்பட்டிருப்பது சிந்தனைக்குரியது!

அவரவர் அணியும் ஆடையை அவரவரே தேர்ந்தெடுக்க வேண்டும். தன் விருப்பம் போல் தேர்ந்தெடுத்ததை உடுத்தும் போது தான் மனமகிழ்வு இருக்கும். திருமண உறவு என்பதும் அப்படித்தான்.விரும்பியதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையென்றால் விருப்பத்தோடு உடுத்த முடியாது.

அடுத்து, ஆடை நமக்குப் பொருத்தமானதாக இருக்க வேண்டும். இவ்வுலகின் சூழ்நிலைகள், காரணங்களில் ஒவ்வொருவரும் ஆயத்த ஆடைகளே! அதில் அவரவர் தம் விருப்பத்துக்கும், பொருத்தத்துக்கும் ஏற்ப தேர்ந்தெடுத்துக் கொள்வதே நலம் பயக்கும்.

ஆடையானது பாலுறுப்புகளை மறைப்பதைப் போல கணவன் என்கிற ஆடை கட்டிக்கொண்டிருக்கும் ஒரு பெண் தவறான பார்வைகளிலிருந்து மறைக்கப்படுகிறாள். மனைவி என்கிற ஆடை அணிந்துக்கொண்டிருக்கும் ஒரு ஆணும், அவ்விதமே மறைக்கப்படுகிறான்,

தட்ப வெப்பங்களிலிருந்து நம்மை ஆடையானது காப்பது போல, இன்ப துன்பம் தாக்காமல், கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் பாதுகாப்பு தருகிறார்கள்.

ஆடையானது அழுக்குப்படாமல் உடலைக் காப்பது போல, தீய பழக்கங்கள் என்ற அழுக்குப்படாமல் கணவனும், மனைவியும் ஒருவரையொருவர் காத்துக்கொள்ள வேண்டும்.

உடற்குறைகளை வெளித்தெரியாமல் ஆடை மறைப்பது போல், கணவனின் குறைகளை மனைவியும், மனைவியின் குறைகளை கணவனும் மறைக்க வேண்டும்.

சமூகத்தில்,ஆடை என்பது கெளரவத்துக்காக அணியப்படுகிறது, கணவனும், மனைவியும் ஒருவர் மற்றவரின் கெளரவமாய் அமைய வேண்டும்.


அதுபோலவே, ஆடை அடையாளத்துக்காகவும் அணியப்படுகிறது. கணவனும் மனைவியும் ஒருவர் மற்றவரின் அடையாளமாய் இருக்க வேண்டும்.


ஆடை அழகுக்காக அணியப்படுகிறது. அதுபோல கணவனும் மனைவியும் அழகுப்படுத்துபவர்களாக இருக்கவேண்டும். சிறந்த அழகு தூய்மை தான்.எனவே, ஒருவருக்கொருவர் ஆடையாக இருவரும் தூய்மையாக இருக்க வேண்டும்.

ஆடை, நாகரீகத்துக்கான குறியீடு. ஆடை இல்லாதவன் அரை மனிதன். திருமணத்தில் தான் ஆணும் பெண்ணும் முழுமையடைகிறார்கள்.

ஆடையில் ஒரு சமூகத்தின் பண்பாடு வெளிப்படும். கணவன் மனைவி என்கிற ஆடையிலும்!

ஆடை அழுக்காகி விட்டால், தூக்கி எறிந்துவிடக்கூடாது. சலவை செய்து அணிந்துக்கொள்கிறோம்.சற்றே கிழிந்து விட்டாலும், தைத்து அணிந்துக்கொள்கிறோம். கணவனிடமோ, மனைவியிடமோ, குறைகள், கோபதாபங்கள் ஏற்பட்டால், பிரிந்து விடக்கூடாது. சமாதானமாகி விட வேண்டும்.

ஆயின், அணியவே முடியாத அளவுக்கு அழுக்கடைந்தாலோ, தைக்கவே இயலாத அளவுக்கு கிழிந்துப் போனாலோ, ஆடை என்பது அதன் பொருளை இழந்து விடும் நிலையில் தூக்கி எறிந்து விட்டு புதிய ஆடையைத் தைத்துக்கொள்ள வேண்டியது தான்.

'அறிவு'க்கனி உண்டவுடன் ஆதாமும் ஏவாளும் செய்த முதல் வேலை ஆடை அணிந்ததாகத்தான் இருக்கும். அறிவிழந்து பைத்தியம் முற்றியவர் செய்யும் முதல் வேலையோ 'ஆடை'யைக் கிழிப்பது தான். காரணமின்றி, தத்தம் "ஆடை"யை கிழிக்கிற கணவனோ, மனைவியோ பைத்தியக்காரர்கள் தான்!

(கவிக்கோவின் குர்ஆன் சார்ந்த சிந்தனைகளை, நினைவிலிருந்தவரை என் எழுத்துக்களில் தந்திருக்கிறேன். தவறுகள் காணுமிடத்து, தயங்காமல் சுட்டும் படி மறுபடி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.நன்றி).

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails