Friday, February 5, 2010

சகபயணி அமைவதெல்லாம் .. .. ..

by Abdul Qaiyum 

“மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்” என்று சொல்லுவதைப் போல பஸ்ஸிலோ, விமானத்திலோ பிரயாணம் செய்யும் போது நமக்கு பக்கத்தில் உட்காரப் போவது யார் என்பதை நிர்ணயிப்பது நாம் செய்த புண்ணியம்தான் என்று நினைக்கிறேன்.
ஒல்லியான மனிதர் நம் பக்கத்துச் சீட்டு ஆசாமியாக வாய்த்து விட்டால் அது நாம் செய்த புண்ணியம். துரதிர்ஷ்டவசமாக நுஸ்ரத் பதே அலிகான் அல்லது (பழைய உருவம் ) அத்னான் சாமி மாதிரி ஆசாமிகள் வந்து நம் பக்கத்தில் அமர்ந்து விட்டாலோ அதோ கதிதான்.
ஒரு சமயம் ஊரில், பஸ்ஸில் கைப்பிடி இல்லாத இரட்டை இருக்கையில் தடிமனான ஆசாமியோடு நான் உட்காரப் போக, லெதர் சீட்டிலிருந்து வழுக்கி, வழுக்கி பலமுறை கீழே விழுந்து முட்டியை உரசிக் கொண்டது நன்றாக நினைவிருக்கிறது.
அண்மையில் என் உடன்பிறவாத் தங்கை, எமர்ஜென்ஸியாக தாயகம் போய் வர நேர்ந்தது. துணையின்றி தனியாக விமானத்தில் பயணம் செய்ய நேர்ந்ததால், கால் வைக்க விஸ்தாரமான, வசதியான இருக்கை கொண்ட, Emergency Exit-யை ஒட்டி இருக்கும் இருக்கையை, Boarding Pass வாங்கும்போது வற்புறுத்தி வாங்கியிருக்கிறார் முன் ஜாக்கிரதை முத்தண்ணாவான அவரது கணவர். போராடிப் பெற்ற பிறகு அவர் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. காலரை வேறு தூக்கி விட்டுக் கொண்டாராம். பார்த்தவர்கள் சொல்கிறார்கள்.
பாவம் அவரது கணிப்பு இப்படி ‘உல்டா’வாகும் என்று அவர் கனவிலும் நினைத்து பார்த்திருக்க மாட்டார். ‘புள்ளையார் புடிக்க குரங்கான கதை’தான்.
இவர் நினைத்ததைப் போலவே இன்னொரு ஓவர்வெயிட் ஆசாமி வசதியான இருக்கை வேண்டும் என்று மன்றாடி பெற, அவருக்கு வந்து வாய்த்ததோ நம் கதை ஹீரோயினின் பக்கத்து இருக்கை.
ஆசாமி குண்டு என்றால் குண்டு அப்படியொரு குண்டு. சாயம் போகாத கியாரண்டி கொண்ட கறுப்பு நிறம் வேறு. வந்து படக்கென்று உட்கார்ந்த போதே இருக்கை சற்று குடைச் சாய்ந்தது போலிருந்ததாம்.
ஊரிலே குதிரை வண்டியில் ஏறிப் போகையில் ‘பின்பாரம் அதிகமா இருக்கும்மா. முன்பாரம் வேணும். கொஞ்சம் முன்னாடி தள்ளி வாங்கம்மா” என்று குதிரை வண்டிக்காரன் ஆழி எச்சரிக்கை விடுப்பான்.
இங்கே பிளேனில் முன்பாரம், பின்பாரம் என்று யாரிடம் போய் சொல்லுவது? கை வைப்பதற்காக இருப்பதோ ஒண்ணரை அல்லது இரண்டு இஞ்ச் Hand Rest கைப்பிடி. அதில் ஹாயாக இந்த ஆசாமி தன் 30 கிலோ கையை வைத்து ஆக்கிரமிக்க, இந்தப் பெண்மணி கடுங்குளிரில் அடிப்பட்ட  பூனைக்குட்டி போல் உடலைச் சுருக்கிக் கொண்டு, இருக்கையோடு இருக்கையாக, பல்லிபோன்று ஒட்டிக்கொண்டு, ஒருக்களித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்.
பட்டி மன்றம் ஒன்றில் லியோனி கூறிய கதை ஒன்று இப்போது நினைவுக்கு வந்தது. பஸ்ஸில் பக்கத்து பக்கத்துச் சீட்டில் உட்கார்ந்து இருந்தவர்களுக்கு இடையை சண்டை வந்து விட்டது. ‘ஜன்னலை மூடு’ என்று ஒருவர் சொல்ல, ‘ஜன்னலைத் திற’ என்று மற்றவர் சொல்ல, போட்டா போட்டி நடந்துக் கொண்டிருந்தது. சண்டையைத் தீர்த்து வைக்க கண்டக்டர் வந்திருகிறார்.
“எனக்கு குளிர்காத்து  ஒத்துக்காது. தொறந்து வச்சா நான் செத்துப் போயிடுவேன்” என்று ஒருவர் முறையிட,
“எனக்கு காத்து வேணும். மூடி வச்சா மூச்சு முட்டியே நான் செத்துப் போயிடுவேன்” என்று மற்றவர் கூற
“இப்படிச் செய்யலாம். கொஞ்ச நேரம் ஜன்னலைத் தொறந்து வை. இந்த ஆளு செத்து போயிடுவான். ஒரு பிரச்சனை சால்வ் ஆயிடுவோம். கொஞ்ச நேரம் ஜன்னலை மூடி வச்சா, இந்த ஆளும் செத்துப் போயிடுவான். அடுத்த பிரச்சினையும் சால்வ் ஆயிடும் என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறார்.
இது போன்ற புத்திசாலித்தனமாக நாட்டாமை செய்யவும் Gulf Air விமானப் பணிபெண்களுக்கு பயிற்சி அளித்தால் தேவலாம். நல்லவேளை விமானத்தில் ஜன்னலைத் திறந்து மூடும் சண்டை சச்சரவுக்கு வாய்ப்பே இல்லை.
‘பெண்ணின் மனது பெண்ணுக்குத்தான் புரியும்’ என்ற முதுமொழி விமானப் பணிப்பெண்களுக்குப் பொருந்தாது போலும். நம் கதாநாயகி, பணிப்பெண்ணிடம் சென்று இருக்கையை வேறு பெண் பயணியின் பக்கத்தில் மாற்றித் தருமாறு வேண்டுகோள் விடுக்க, அவர் தனது லிப்ஸ்டிக் உதட்டை பிதுக்கி, ‘சாரி’ என்ற குட்டி வார்த்தையோடு கையை விரித்து விட்டார்.
சாப்பாடு முடிந்ததும் ஒரு கடுமையான ஏப்பம் பெரும் சப்தத்துடன் குண்டு ஆசாமி விட, நம் கதாநாயகி மேலும் அதிர்ந்துப் போயிருக்கிறார். சாப்பாட்டுக்கு பிறகு.. ..? வேறன்ன தூக்கம்தான், அதுவும் Sterophonic டிராக்கில் Woofer வைத்ததுபோல் ஒரு குறட்டைச் சத்தம் வேறாம். ரஜினி பாஷையில் சொன்னால் “சும்மா அதிருதில்லே”.
குறட்டை விட்டுத் தூங்கும் ஆசாமி எங்கே தன் மீது சரிந்து விடுவாரோ என்ற பயம் வேறு. பிரயாணம் முழுதும் ஹிட்ச்காக் படம் பார்ப்பதைப் போன்று ஒரு விதமான திகில் உணர்வோடு பிரயாணம் செய்திருக்கிறார் இந்த பெண்மணி.
சக பிரயாணி அமைவதெல்லாம் இறைவன் கொடுக்கும் வரம்.
 (நம் கதையின் வில்லன், படத்தில் காணப்படும் நபரைப் போல் அவ்வளவு குண்டாக இல்லாவிட்டால் கூட, சற்றே இளைத்தவராக வாசகர்கள் கற்பனை செய்துக் கொள்ளலாம்)

நன்றி : http://nagoori.wordpress.com

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails