கவிஞர் இஸட் ஜபருல்லாஹ்வை கவிதை பாட அழைப்பவர்கள் மடியில் வெடிகுண்டை வைத்து கட்டிக் கொண்டிருப்பவர்களைப் போலத்தான் காட்சியளிப்பார்கள். காரணம் மனுஷன் எந்த நேரத்தில் எந்த குண்டை எடுத்துப் போடுவார் என்று யாருக்குமே தெரியாது. ஒரு காலத்தில் இவரே நல்ல குண்டாகத்தான் இருந்தார். இப்போதுதான் சற்று மெலிந்து விட்டார்.
நாகூரில் நடந்த “தேவை மனித நேயம்” என்ற நூல் வெளியீட்டு விழாவின்போது நம் குசும்புக் கவிஞர் எழுதி வாசித்த கவிதையின் தலைப்பு “தேவை ஒரு குண்டு” . குறும்பான தலைப்பு கொடுக்கும் இவரை “Naughty வெடி” என்று கூட அழைக்கலாமோ?
தேவை ஒரு குண்டு
- கவிஞர் இஸட் ஜபருல்லாஹ்ஆண்டுகள்
முன்னோட்டி நடக்க
இந்த -
மனிதர்கள் மட்டும் ஏன்
பின்னோக்கியே
ஓடுகிறார்கள் .,?
பொற்காலம்
முன்னிற்க
தற்காலம் ஏன்
கற்காலம் ஆகிறது..?
மதம் பிடித்தவர்களின்
மூளைச் சலவைக்குள்
மாட்டிக் கொண்ட
இவர்கள் -
தன் மனஅழுக்குகளை
எப்படி -
சலவை செய்யப்
போகிறார்கள்..?
ஹிட்லரின் -
கில்லட்டின் அழிந்தது
என -
மகிழ்ந்தால்
ஜெல்லட்டின் வந்து
அலைக்கழிக்கிறதே ?
‘நாட்டு வெடி’ என
பெயர் வைத்ததால்
நாட்டையே அழிக்கிறதோ?
வகை வகையாய்
வெடிகுண்டு
செய்யும்
வல்லுநர்களே..!
சாதி – மத – இன
வேற்றுமை
சுவர்களை
தகர்த்து
தரைமட்டமாக்கும்
ஒரு
நல்லவெடிகுண்டு
தயார் செய்யுங்களேன் !!!
(தலைப்பைப் பார்த்து பயந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கவிதையை முழுதும் கேட்ட பிறகுதான் ‘அப்பாடா.. என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள்)
கவிஞரின் “இறைவா!” கவிதைகள்
கவிஞரைப் பற்றிய அறிமுகம்
நன்றி :http://nagoori.wordpress.com
No comments:
Post a Comment