Friday, February 5, 2010

இஸ்லாமியச் சட்டம் (6)

நீடூர்.ஏ.எம்.சயீத்
வழக்கறிஞர்.



இஸ்லாமியச் சட்டம் (6)
[ உயிலும் மரண சாசனமும் (வஸிய்யத்தும்),

உயில் எழுதும் முறை,

வக்ஃபு சட்டங்கள் - ஒரு பார்வை - 1,

இந்திய வக்ஃப் சட்டம் ]

உயிலும் மரண சாசனமும்(வஸிய்யத்தும்)-1

இஸ்லாம் அனுமதிக்கின்ற வஸிய்யத் என்ற மரண சாசனத்திற்கு உயில் என்று விளக்கம் அளித்தாலும், இரண்டுக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உண்டு. (LAW OF WILLS) தன்னாணை, அல்லது விருப்புறுதிச் சட்டத்தைத் தான் உயில் என்கிறோம். இங்கிலாந்தில் உயில்களுக்கான சட்டம் கி.பி.1837ல் இயற்றப்பட்டது. இந்து சாஸ்திரங்களில் உயில் என்பதே தெரியாத ஒன்று. அதை ஒரு புதிராகக் கருதினார்கள். கூட்டுக் குடும்பத்திட்டம், தத்து எடுக்கும் பழக்கம் ஆகியவற்றால் பழங்கால இந்தியாவில் உயில் மூலம் சொத்துரிமை வழங்கும் பழக்கம் அறவே இல்லாமல் இருந்தது. ஆனால் உயிலுக்கு மாற்றாக, அல்லது நெருக்கமாக அன்பளிப்பு அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்து விருப்புறுதிகளின் சட்டம், இந்து வழியுரிமை மற்றும் வாரிசு சட்டத்தின் ஒரு பாகமே. நீதிமன்றங்களும் கூடுமானவரை இந்து விருப்புறுதிகளுக்கு கொடையளிப்பதற்கான சட்டத்தையே பயன்படுத்தி வந்தன. 1870-ம் ஆண்டில் தான் இந்து உயில் சட்டம் ஏற்படுத்தப்பட்டது.
 உயில் என்றால் என்ன ? ஒரு மனிதன், தான் இறக்கும் தருவாயில் தன் எண்ணங்களை ஒரு சாசனம் மூலம் தெரிவிப்பதே உயில் எனப்படுகிறது. இதனை இஸ்லாத்தில் வஸிய்யத் என்போம். 1.உயில், அதை எழுதியவரின் எண்ணத்தைச் சட்டப்படி வெளிப்படுத்தியதாகவும், அவரது சொத்துக்களைப் பற்றியதாகவும் இருக்க வேண்டும். இதை விடுத்து வேறுவகையான எண்ணங்களை வெளிப்படுத்தினால் அது செல்லாது. உதாரணமாக, தான் இறந்த பிறகு தன் மனைவி தத்து எடுக்கலாம் என்று எழுதினால் அது உயில் ஆகாது.2. சொத்து மாற்ற ஏற்பாடு (DISPOSITION) அவசியம் இருத்தல் வேண்டும். அப்போதுதான் உயில் செல்லும்.

3. உயில், ஆவணத்தில், அதை எழுதுபவரின் எண்ணத்தை தெளிவான சொற்களால் குறிப்பிட்டாக வேண்டும்.
இந்தியாவில் உயில் ஆவணம் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. புருஷோத்தம் - ஏ.கே.ஷேதாஸ் வழக்கில் இது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. சாசனங்கள் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதற்கும், உயிலைப் பதிவு செய்வது கட்டாயமல்ல என்பதற்கும் வித்தியாசம் இருக்கலாம் என அந்த வழக்கில் கருத்து தெரிவிக்கப்பட்டது. உயில் என்பது, மிகவும் அமைதியான, அவசியமான நேரங்களில் தயாரிக்க வேண்டிய ஆவணங்களில் ஒன்றாகும். எனவே, இறப்பின் பிடியில் இருக்கும் ஒரு மனிதன் உயிருடன் இருப்பவரிடம் தன் விருப்பங்களை நிறைவேற்றுமாறு தெரிவித்தால், உயில் எழுதக்கூடியவர் புத்தி சுவாதீனம் உள்ளவராகவும்,தகுதி படைத்தவராகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். லச்சோபிலி(எ) கோபிநாராயன் என்கிற வழக்கில் உயில் எழுதியவர் நீரழிவு நோய் காரணமாக உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில் தன் ஒரே மகனின் இறப்பால் பெரும் அதிர்ச்சி அடைந்திருந்தார். மனநோயாளி போல காணப்பட்டார். இந்நிலையில் மேல்முறையீட்டாளர்கள் சார்பில் மோதிலால் நேரு என்பவர் வாதிடும் போது, உயிலை உறுதி செய்து கூறுபவர்கள் தாம் அதை நிரூபிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

ஒருவர் தனக்குச் சொந்தமான சொத்தை, தன் இறப்பிற்குப் பிறகு யார் அடைய வேண்டும் என்பது குறித்து எழுதும் சாசனமே உயிலாகும். உயில் எழுதுவதற்கு கீழ்க்கண்ட ரத்துக்கள் பின்பற்றப்பட வேண்டும். 1. அது எழுத்து மூலமாக இருக்க வேண்டும். 2.உயில் எழுதுபவரால் கையயழுத்திடப்பட்டிருக்க வேண்டும். 3. குறைந்த பட்சம் இரு சாட்சிகளின் கையயழுத்து இருக்க வேண்டும். ஆனால், முஸ்லிம்களின் மரண சாசனத்திற்கு (வஸிய்யத்) இந்த நிபந்தனைகள் தேவையில்லை. உயிலுக்கும், வஸிய்யத்திற்கும் உள்ள ஒரு முக்கியமான வேறுபாடு என்னவென்றால், சொத்துரிமை பெறும் வாரிசுகளுக்கு வஸிய்யத் மூலம் சொத்து கொடுக்க முடியாது. இதை அறியாமல் அவர் வஸிய்யத் செய்திருந்தால், மற்ற வாரிசுதாரர்கள் இசைவு தெரிவித்தால் மட்டுமே அது செல்லபடியாகும்.

முஸ்லிமல்லாதோர் உயில் எழுதினால், யாருக்கு வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் தன் இறப்புக்குப் பின் சொத்துக்கள் அடையுமாறு எழுதி வைக்கலாம். ஆனால் இஸ்லாமியச் சட்டப்படி உயில் (வஸிய்யத்) எழுதும் போது, உயில் அளிப்பவர் தன் மொத்த சொத்தில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே உயில் வழிக்கொடை அளிக்க முடியும். இறந்த பின் ஏற்படும் செலவுகள், முன்புள்ள கடன்கள் ஆகியவை போக மீதி இருப்பதே உயில் எழுதியவரின் சொத்தாகக் கருதப்படும், ஹிபா என்னும் அன்பளிப்பு சாசனத்தில் உடைமையளித்தல் பொருளுக்கு உரியவர் இறந்த பின்பே உடைமையளித்தல் நிகழும்.

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் அண்ணலின் தோழர்களில் ஒருவரான ச அது பின் அபீவக்காஸ் (ரளி) அவர்கள் தமது சொத்துக்களை வஸிய்யத் மூலம் தானம் செய்ய விரும்பினார். தனக்கு ஆண் வாரிசு இல்லை; ஒரே ஒரு மகள் மட்டுமே உண்டு எனவும், தன் சொத்து முழுவதையும் தர்மமாக வஸிய்யத் செய்துவிட விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். அதனை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏற்கவில்லை. பாதியை தானம் செய்வதாக அவர் கூறிய போதும் அண்ணலார் ஏற்க மறுத்துவிட்டார்கள் மூன்றில் ஒரு பங்கு வேண்டுமானால் தானம் செய்யுங்கள்; அது கூட அதிகம் தான் என்று அண்ணலார் அறிவுறுத்தினார்கள். (புகாரி)
அப்துர் கபூர்-அப்துர் ரஸ்ஸாக்(1959) என்ற வழக்கில், ஒரு தந்தையும் அவரது மகன்களும் சேர்ந்து ஒரு பாகப்பிரிவினைப் பத்திரம் எழுதினார்கள். தந்தை இறந்த பின்னர் அவருடைய இரு புதல்வர்கள் பத்திரத்தில் குறிப்பிடப்படாத சொத்துக்களின் உரிமை கொண்டாட முடியாது என்றும், அந்தச் சொத்துக்களை பத்திரத்தில் பார்ட்டிகளாக இல்லாத அவருடைய மற்ற மூன்று புதல்வர்களும் அடைவார்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. தந்தையின் மறைவுக்குப் பிறகு மேற்சொன்ன வாரிசுதாரர்களான இரு புதல்வர்களும் இதற்கு ஒப்புதல் அளிக்காததால் இந்த ஆவணம் செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால், வாரிசுதாரர்கள் ஒரு முறை தங்கள் ஒப்புதலை அளித்து விட்ட பிறகு அதை வாபஸ் பெற முடியாது. (ஹனபி).



உயிலும் மரண சாசனமும் (வஸியத்தும்) - 2

ஒரு முஸ்லிம் மூன்றில் ஒரு பங்குக்கு மேல், வாரிசு அல்லாத ஒருவருக்கு எழுதினாலும் வாரிசுதாரர்கள் ஒப்புதல் தந்தால் அந்த உயில் ஆவணம் செல்லும். ஒரு முஸ்லிம், இஸ்லாமிய பிரார்த்தனை தலங்களுக்கு அல்லாமல் மற்ற சமய பிரார்த்தனைக் கூடங்களுக்கு உயில் மூலம் சொத்துகள் எழுத முடியாது. பள்ளிவாசல் கட்டுவதற்காக சொத்தில் மூன்றில் ஒரு பகுதியைச் செலவிடலாம் என்று ஒருவர் உயில் எழுதலாம்.

வயது வந்தவர்களே உயில் எழுத முடியும். உயில் மூலம் எந்தச் சொத்துக்களைக் கொடுக்க விரும்புகிறாரோ அந்தச் சொத்துக்களுக்கு அவர் உரிமை பெற்றவராக இருக்க வேண்டும். உயில் எழுதும் போது அந்தச் சொத்துக்கு அவர் உரிமை பெற்றவராக இல்லாவிட்டாலும், அவர் இறந்த பிறகாவது அந்தச் சொத்தின் உரிமையை அவர் பெற்றாக வேண்டும்.

ரீ அத் சட்டப்படி ஒரு முஸ்லிம் தற்கொலை செய்வது கூடாது. எனவே, தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் உயில் எழுதப்பட்டிருந்தால் அது செல்லாது. உதாரணமாக, உயில் எழுதுவதற்கு முன் வித்தை வாங்கி வந்து, பின்னர் உயில் எழுதினார் என நிரூபிக்கப்பட்டால் அந்த உயில் செல்லாது. உயில் எழுதிய பிறகே விம் வாங்கி வந்தார் என நிரூபிக்கப்பட்டால் உயில் செல்லும்.

உயில் சாசனத்தின் வாசகம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. வாய்மொழியாகவோ, எழுத்துமூலமாகவோ அவருடைய எண்ணங்கள் தெளிவாகத் தெரிவிக்கப்பட வேண்டும் என்பதே முக்கியம். முத்திரைத்தாளில் தான் எழுத வேண்டும் என்றோ, பத்திரப் பதிவு செய்துதான் ஆக வேண்டும் என்றோ அவசியமில்லை. கடிதங்களும், குறிப்புகளும் கூட சில சந்தர்ப்பங்களில் உயிலாக ஏற்கப்பட்டிருந்தது.

உயில் சாசனத்தை யார் எழுதினாரோ அவரது கொலைக்குக் காரணமாக இருந்தவருக்கு உயில் வழிச் சொத்து கிடையாது. அவரது பெயர் உயிலில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் சரியே. பிறக்காத குழந்தைக்கு உயில் வழிக்கொடை அளிக்க முடியாது. கருவில் உள்ள குழந்தைக்கு எழுதி வைக்கலாம். ஆனால், எழுதி வைத்த அந்தச் சொத்து அந்த குழந்தைக்கு கிடைக்கும்.

உயில் எழுதியவர் இறந்த பிறகு உடனடியாக உடைமை மாற்றம் ஏற்படாது போனால் செல்லுபடியாகாது. எனவே, தன்னுடைய புதல்வரின் வாழ்நாளைக்கு பின் சொத்தில் மூன்றில் ஒரு பங்கை வேறு ஒருவர் எடுத்துக் கொள்ளலாம் என்று உயிலில் குறிப்பிட்டிருந்தால், அது செல்லாது. இரண்டில் ஒன்று என்ற முறையில் விருப்புறுதி வாயிலாக அளித்தால் அது செல்லும். எடுத்துக்காட்டாக முபாரக்கிற்கோ, அல்லது அபூயூசுப்பிற்கோ என்று உயில் எழுதப்பட்டிருந்தால், உயில் எழுதியவர் இறந்த சமயத்தில் (முதலில் குறிப்பிட்ட) முபாரக் உயிரோடு இருந்தால் அவருக்கே சொத்து கிடைக்கும். உயில் எழுதியவருக்கு முன்னரே முபாரக் என்பவர் இறந்து விட்டால் உயில் வழிச் சொத்தை அபூயூசுப் அடைவார்.
ஒயா முஸ்லிம்கள் சட்டப்படி மற்ற வாரிசுகளின் ஒப்புதல் இல்லாமலேயே, தான் விரும்பிய எவருக்கும் ஒருவர் உயில் எழுதலாம். அது வாரிசுதாரராகவே இருந்தாலும் கூட செல்லும். ஆனால் மூன்றில் ஒரு பங்குக்கு மிகாமல் இருக்க வேண்டும். இதே போல் கருவில் இருக்கும் குழந்தைக்கு உயில் எழுதி வைத்தால் 10 சந்திர மாதங்களுக்குள் குழந்தை பிறந்தாலும் உயில் செல்லும் என்பது ஒயாக்களின் சட்டமாகும்.

மர்ளுல் மவ்த் எனப்படும் மரணப்படுக்கையில் உள்ள ஒருவர் அன்பளிப்பு கொடுக்க இஸ்லாமியச் சட்டத்தில் அனுமதி உண்டு. ஆனால் அது வரம்புக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். வாதநோயா, நாட்பட நீடிக்கும் எந்த நோயுமோ மரண நோயாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மாறாக, மரணப்பிணியின் காலக்கெடு ஓராண்டுக்காலம் என வரையறுக்கப்பட்டுள்ளது. (ஹிதாயா). இறந்து விடுவோம் என்ற நிலையில், பிரதிபலன் எதிர்ப்பார்க்காமல் அளிக்கும் அன்பளிப்பிற்கே மரணப் பிணியின் தாக்கத்தால் அளிக்கும் அன்பளிப்புக்குள்ள கட்டுப்பாடுகளும், விதிகளும் பொருந்தும்.



உயில் எழுதும் முறை

பொதுவாக உயில் பத்திரம் பின்வருமாறு அமையலாம்...

......... ஊரில் வசிக்கும் முஸ்லிமான .... என்பவரின் மகன், மகள் ........... என்பவரான நான் உடல் நலத்துடனும், சுய நினைவுடனும் என்னுடைய இறுதி விருப்புறுதியாக (உயிலாக) அல்லது மரணசாசனமாக இதை எழுதுகிறேன்.

இப்படி ஆரம்பித்து, அவர் விரும்பக் கூடிய விதத்தில் உயில் வாசகத்தை எழுதலாம். உதாரணமாக ....

நான் இதன் மூலம் இதற்கு முன்னால் எழுதியிருக்கும் எல்லா சாசனங்களையும் ரத்துச் செய்கிறேன். எனக்கு ஆண் வாரிசுகள் இல்லை. ஆனால் என்னுடைய மகள் .............. என்பவருக்கு ஆண் குழந்தை உண்டு. அவரது பெயர் ................... இவர் என்னுடைய காரியங்களை மிகவும் பொறுப்புடன் என் அன்புக் கட்டளையை ஏற்று செயல்பட்டு வருகிறார். என்னைக் கவனிப்பதற்காகவே வெளிநாட்டில் நல்ல வேலை கிடைத்தும் செல்லாமல், என் பொறுப்பில் இருந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இஸ்லாமியச் சட்டப்படி நான் இறந்து விட்டால் என் மகளும மற்றவர்களும் உயிரோடு இருக்கும் போது என் பேரன் என் சொத்துக்கு வாரிசாக முடியாது. எனவே, என் பேரன் ........... பேரில் எனக்குள்ள பாசத்தின் காரணமாகவும், மனநிறைவுக்காகவும் என்னை அவன் பொறுப்புடன் கவனித்து வருவதாலும் என் சொத்துக்களில் மூன்றில் ஒரு பங்கை கீழ்கண்ட இரு சாட்சிகள் முன்னிலையில் இந்த உயில் மூலம் என் பேரன் .............க்கு நான் அன்பளிப்பாக அனுபவிக்கும்படி எழுதி வைக்கிறேன். இந்த உயில் ஆவணத்தில் குறிப்பிட்டிருக்கும் என் மொத்த சொத்துக்களில் மூன்றில் ஒரு பாகச் சொத்துக்கள் என் வாழ்நாளுக்குப் பின்னால் மேற்சொன்னபடி அமலுக்கு வரவேண்டியதாகும். என் ஆயுளுக்குள் இதை மாற்றவும், ரத்துச் செய்யவும் எனக்கு அதிகாரம் உண்டு.



சாட்சிகள் ஒப்பம் ...

1. ....................

2. ..................

இருப்பினும், இஸ்லாமியச் சட்டப்படி விருப்புறுதி ஆவணத்தில், ஒருவர் தன்னுடைய விருப்பத்தை திட்டவட்டமாக வெளிப்படுத்தியிருந்தால் அந்த ஆவணத்தில் அவர் கையயழுத்து இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. இதேபோல அவர் கையயழுத்து போட்டிருந்தாலும் சாட்சிகள் கையயழுத்திட்டு உறுதி செய்ய வேண்டுமென்ற கட்டாயமுமில்லை. கடிதம் கூட உயிலாக ஏற்கப்படலாம். ஒரு முஸ்லிம் தன் ஏஜண்டுக்கு கடிதம் எழுதி, தன் வாழ்நாளுக்குப் பிறகு தன்னுடைய சொத்துக்களை எப்படி கையாள வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தால் அந்தக் கடிதமே உயிலாக ஏற்கப்படும்.
கோடிஸில்(CODICIL) என்பது மரண சாசன ஒப்பந்தத்தைக் குறிக்கும். ஒரு வழக்குரைஞர் தன் கட்சிக்காரரின் வேண்டுகோளுக்கிணங்க உயில் எழுதி அஞ்சல் மூலம் அனுப்பி வைத்தார். அஞ்சலில் வந்த உயிலைப் படித்துப்பார்த்த அந்த நபர் சில திருத்தங்களைக் குறிப்பிட்டு தந்தி மூலம் தெரிவித்தார். அதையடுத்து ஒரு விவரமான கடிதமுமம் எழுதி அனுப்பினார். தந்திச் செய்தியும், விளக்க மடலும் உயிலின் ஒரு பகுதியாகக் கருதப்படும்.

இந்துச் சட்டத்தில் இருப்பதைப் போல, முழு சொத்துக்களையும் உயில் மூலம் ஒரு முஸ்லிம் கொடுக்க முடியாது. மூன்றில் ஒரு பங்கு தான் எழுதி வைக்க முடியும். அதுவும் வாரிசு அல்லாதவர்களுக்குத்தான் எழுத முடியும். அப்படியே வாரிசுகளில் ஒருவருக்கு உயில் எழுதினால் மற்ற வாரிசுகளின் அனுமதி கிடைத்தால் மட்டுமே அது செல்லும் என்பது இஸ்லாத்தின் தனிச்சிறப்பான சட்டமாகும்.



===============================

வக்ஃபு சட்டங்கள்-ஒரு பார்வை-1

===============================

அறச் செயல்களான தர்மங்களில் பலவகை உண்டு. மனிதன், தன் குடும்பத்திற்காகவும், உறவினர்களுக்காகவும், ஏழை எளிய மக்களுக்காகவும், சமுதாயத்திற்காகவும் இன்னோரன்ன பல காரணங்களுக்காகவும் பல்வேறு வகைகளில் தர்மம் செய்கிறான். நன்மையையும், இறைவனின் அன்பையும் பெறுவதற்காக தர்மக் காரியங்களில் மனிதன் ஈடுபட்டாலும், அவற்றின் மதிப்பும் தரமும் உயர்ந்து விடுகிறது.

ஒரு முஸ்லிம் தன்னுடைய சொத்துக்களை இறைவனுக்காக வக்ஃபு என்ற அறம் செய்து விட்ட பிறகு அவரோ, அவருடைய வாரிசுகளோ அந்தச் சொத்துக்களின் நிர்வாகிகளாக இருக்க முடியுமே தவிர, உரிமையாளர்களோ இருக்க முடியாது.

வக்ஃபு என்றால் என்ன? அதன் பொருள் என்ன என்பதை முதலில் பார்ப்போம். நிறுத்துதல், நிலைநாட்டுதல் என்பன இதன் சொற்பொருளாகும். இறைவன் பெயரால் ஒருவர் தன் சொத்துக்களை அர்ப்பணித்து நிலை நாட்டும் போது அது வக்ஃபு சொத்து என்னும் நிலையை அடைந்து விடுகிறது. கைமாறும் தன்மையுடைய சொத்தை ஒரு நிலைக்குக் கொண்டு வருவதை வக்ஃபு என்று இஸ்லாமியச் சட்டம் அடையாளம் காட்டுகிறது. ஒரு சொத்தை வக்ஃபு செய்வதன் மூலம் அந்தச் சொத்தின் உரிமையை இறைவனுக்கு அர்ப்பணித்து, அதன் வருமானத்தையும், பலனையும் மக்களின் நலனுக்காக செலவிடுவதே நோக்கமாகும்.
வக்ஃபு என்பதற்கான விளக்கத்தைத் தருகின்ற போது இமாம்களிடையே கருத்து வேறுபாடு காணப்பட்டாலும், இமாம் அபூயூசுஃப் (ரஹ்) அவர்களின் கூற்றே பெரும்பாலோரால் ஏற்கப்பட்டு வருகிறது. 'வக்ஃபு செய்பவர், வக்ஃபு செய்யும் தன் எண்ணத்தை வெளிப்படுத்தினாலே போதும்' என்பது இமாம் அபூயூசுப் (ரஹ்) அவர்களின் கருத்தாகும். வக்ஃபு செய்பவர்தன் எண்ணத்தை வெளிப்படுத்திய பிறகு காஜி (நீதிபதி) அதை வக்ஃப் என ஒப்புக் கொண்டு ஆணைப்பிறப்பிக்க வேண்டும் என்றும், வக்ஃப் சொத்தை அர்ப்பணித்த பின்னும் அவரது உரிமை தொடர்கிறது என்றும் கடன் அளித்ததைப் போலவே அந்த தர்மங்கள் இருக்கின்றன என்றும் இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்கள் கருதுகிறார்கள்.

வக்ஃப் சொத்தை முத்தவல்லியிடமோ, காப்பாளரிடமோ ஒப்படைத்த பிறகே வக்ஃப் முழுமை பெறும் என்பது இமாம் முஹம்மது (ரஹ்) அவர்களின் கருத்தாகும்.

ஆனால், இமாம் அபூயூசுஃப் (ரஹ்) அவர்கள் சமுதாய நலனுக்காகவே வக்ஃப் சொத்து கொடுக்கப்பட்டாலும், அல்லாஹ் மட்டுமே அதற்கு உரிமையாளனாகி விடுகின்றான். எனவே காஜியின் ஆணை தேவையில்லை என்று விளக்கமளிக்கிறார்கள்.
காசிமியாசோடீஸ் - Vs - செயலாளர், மெட்ராஸ் ஸ்டேட் வக்ஃபு போர்டு (1964) என்ற வழக்கின் தீர்ப்பில் வக்ஃப் என்பதற்கு முக்கியமான மூன்று விளக்கங்கள் தரப்பட்டன.



1. வக்ஃப் சொத்தின் அர்ப்பணிப்பு சமய நோக்கு கொண்டதாக இருக்க வேண்டும்; சமய

சார்பற்ற நோக்கைக் கொண்ட அன்பளிப்பு அர்ப்பணம், டிரஸ்ட் எனப்படும்

பொறுப்புரிமை அமைப்பு என்றாகுமே தவிர வக்ஃப் ஆக முடியாது.

2. வக்ஃப் நிரந்தரத் தன்மை உடையதாக இருக்க வேண்டும். அப்படி நிரந்தரத்தன்மை

இல்லாதவை ஸதகா என்னும் அறச்செயலாக அமையுமே தவிர, இஸ்லாமியச் சட்டப்படி

வக்ஃப் என அழைக்க முடியாது.

3. வக்ஃபின்நுகர் உரிமை மனிதநலனுக்குப் பயன்படுவதாக இருக்க வேண்டும்.



இந்திய வக்ஃப் சட்டம்
இந்தியாவில் வக்ஃப் செல்லுபடியாகும் சட்டம் 1913-ல் இயற்றப்பட்டது. தன் தேவைக்கு அதிகமான சொத்தை வைத்துக் கொண்டிருக்கும் ஒருவர் அதை மனித நலனுக்காகப் பயன்படுத்துவது கடமையாகும். இந்த அடிப்படையிலேயே வக்ஃப் மற்றும் டிரஸ்ட் ஆகியவை உருவாகின. ரீஅத் அடையாளம் காட்டுகிற நபி வழி, இறையச்சம், தர்மம் ஆகிய நோக்கங்களுக்காக நிரந்தரத் தன்மையுடன் அல்லாஹ்ளக்காக சொத்தை அர்ப்பணிக்கும் போது அது வக்ஃப் என அழைக்கப்படுகிறது.

டிரஸ்ட் என்பது அப்படியல்ல. சொத்துரிமை ஒருவருக்கு தரப்படுவதோடு, வேறு ஒருவருக்கும் அதை மாற்றம் செய்யலாம்.

வக்ஃப் முழுமை பெறுவதற்கு கீழ்க்கண்ட நிபந்தனைகள் தேவை. 1.நிலையான அர்ப்பணம் 2. வக்ஃபை அறிவித்தல் 3. உயில் மூலம் வக்ஃப் (உயில் வாயிலாக வக்ஃப் செய்தால் சொத்தின் மூன்றில் ஒரு பாகம் மட்டுமே வக்ஃப் செய்ய முடியும்) 4. நிரந்தரத் தன்மை உடையது.

5. இடம் பெயராச் சொத்து. ஹிதாயா என்னும் சட்டப்புத்தகத்தின் கருத்துப்படி இடம்பெயரும் பொருள்களை வக்ஃப் செய்தல் பொருந்தாது. எனினும் ஹிதாயாவின் காலத்துக்கு முன்பிருந்தே இத்தகைய பொருள்களை வக்ஃப் செய்வது நடைமுறையில் இருந்து வருகிறது.

வக்ஃபின் வகைகள்

வக்ஃப் அளிப்பவருக்கு வாகிஃப் என்று பெயர். பொது வக்ஃப், தனி வக்ஃப் என இருவகைப்படும். எனினும், பொது வக்ஃப், பாதி பொது, தனி வக்ஃப் என மூன்று வகையான பிரிவுகள் அதிகமாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன.
பாலம், கிணறு, சாலை போன்ற தர்மங்களை அர்ப்பணிக்கும் போது அவை பொது வக்ஃப் ஆகிவிடும். குடும்ப நலனுக்காகப் பாதியும், பொது நலனுக்காகப் பாதியும் அர்ப்பணிக்கப்படும் போது பாதி பொது வக்ஃப் ஆகும். வக்ஃப் அளிப்பவரின் குடும்ப நலனுக்கும், உறவினருக்கும் மட்டுமே நன்மை அளிப்பது தனி வக்ஃப் ஆகும். இதனை 'வக்ஃபுன் அலல் அவ்லாத்' என்பர். ஒரு முஸ்லிம் வக்ஃப் ஏற்படுத்தி, அதன் பயனை உற்றார் உறவினர் நலனுக்கு உடனடியாகத் தந்து, அவர்கள் காலத்துக்குப் பிறகு மார்க்கம் அனுமதிக்கும் அறச் செயல்களுக்குப் பயன்படுத்துமாறு அறிவிப்பதே 'வக்ஃபுன் அலல் அவ்லாத்' ஆகும்.இஸ்லாமியச் சட்டப்படி, ஏழை எளிய குடும்பத்தார்க்கு வக்ஃப் சொத்தின் வருமானங்களைக் கொடுத்து குடும்பத்தார்க்ள இல்லாது போனால் முஸ்லிம் சமுதாயத்திற்கு கொடுக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தாலும் அந்த வக்ஃப் செல்லும். ஆனால் மேற்கத்திய தத்துவப்படி குடும்பத்தினருக்கு கொடுப்பது தர்மமாகாது. இந்தத் தத்துவம் இந்திய நீதிமன்றங்கள் சில வழக்குகளில் வழங்கிய தீர்ப்பில் எதிரொலித்தது குறிப்பிடத்தக்கதாகும். 'அப்துல் பத்தாஹ் Vவி ரசமையா (1894)' என்ற வழக்கில், வக்ஃப் சொத்தின் வருமானம் குடும்பத்திற்கு என்றும், அவர்களுக்குப் பிறகு சந்ததிகள் இல்லாது போனால் பொது மக்களுக்கு என்றும் ஏற்படுத்தப்பட்ட வக்ஃப் செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது ரீஅத் சட்டத்திற்கு மாறானதாக இருந்தால் முஸ்லிம் வக்ஃப் சட்டம் இயற்றுமாறு முஸ்லிம்கள் அரசைக் கேட்டுக் கொண்டனர். இதன் விளைவாகவே 1913ல் முஸ்லிம் வக்ஃப் சட்டம் ஏற்பட்டது.

இந்தச் சட்டத்தின்படி குடும்பத்தின் நலனை முற்படுத்தி ஏற்படுத்தப்படும் வக்ஃப் செல்லும் என்றானது. வக்ஃப் செய்தவர் தன் வாழ்க்கை முழுவதும் தன்னுடைய பராமரிப்புக்கும், பாதுகாப்புக்கும் நிபந்தனையிட்டிருந்தாலும், வாழ்நாளில் பட்ட கடனைத் தீர்க்க வகை செய்திருந்தாலும் வக்ஃப் செல்லும் என்பது ஹனபி மத்ஹபுச் சட்டமாகும். அசையும் சொத்து, அசையாச் சொத்து, பணம் ஆகியவற்றை வக்ஃப் செய்தாலும் ரீஅத் சட்ட வரம்புக்கு உட்பட்டிருப்பின் செல்லும்.
1913ம் ஆண்டு வக்ஃப் சட்டத்தின் ரத்துக்கள் அந்த ஆண்டுக்குப் பின்னர் ஏற்படுத்தப்பட்ட குடும்ப வக்ஃப்களை மட்டுமே செல்லுபடியாக்கியது. அதற்கு முந்தைய வக்ஃப் களை அல்ல என்று நீதிமன்றங்கள் தீர்ப்பளித்து வந்தன. பின்னர் 1933-ல் முஸ்லிம் வக்ஃப் சட்டம் அமலுக்கு வந்தது. இதன் மூலம் 1913க்கு முந்தைய வக்ஃபுகளுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டது.  (இன்ஷா அல்லாஹ் மேலும் வரும்)

www.nidur.info

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails