
இன்று (Jan 6) தன் 44-வது பிறந்த தினத்தைக் கொண்டாடும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம்.
ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் பரிசைப் பெறுவதற்கு முன்னரே, அவர் ஆஸ்கார் பரிசைப் பெற வேண்டும் என்ற அவாவில் நான் எழுதிய கவிதை “ஆபிதீன் பக்கங்களில்” பிப்ரவரி 7, 2009 அன்று பிரசுரமாகியிருந்தது. அந்தக் கவிதையை இங்கே அவருக்காக அர்ப்பணம் செய்கிறேன்.
‘ரோஜா’ ஈன்ற ராஜா
——————
அமைதியான ‘இசைப்புயல்’
இச் சின்னப் பயல்
உருவம் சிறியது;
இவனுக்கு
உலகமும் சிறியது
சிறு வயதிலேயே
விறுவிறுவென்று
உலகை வலம் வந்தவன்
நமக்கெல்லாம்
உள்ளங்கையில் ரேகை
இவனுக்கோ
உள்ளங்கையில் உலகம்
சிந்தசைஸரினால்
சிந்தனைச் செய்யும்
சிந்தனைச் சிற்பியிவன்
இசையில் எதை கலக்கின்றான்
இந்த லாகிரி வஸ்தாது?
கேட்டதும்
கிறுகிறுத்துப் போகின்றோமே?
(ஆர்மோனியக்)
கட்டையைப் பிடித்து
பட்டையைக் கிளப்பும்
கெட்டிக்காரன் இவன்
இவனை
‘நம்மவன்’ என்று
பீற்றிக் கொள்ளுகையில்
உதடுகள் கூட
ஒட்டிக் கொள்கிறது
சாந்தமான இவனின்
காந்த இசை
வடதுருவம்
தென்துருவம்
இரண்டையும் இணைக்கும்
பரிகாசம் செய்தவர்களெல்லாம்
இவன்
பிரகாசத்தைக் கண்டு
வாயடைத்து
வனவாசம் போய்விட்டனர்.
பாவேந்தன் – புரட்சிக் கவிஞன் என்றால்
இவ்விசை வேந்தன் – புரட்சிக் கலைஞன்
இசையுலக வரை படத்தில்
இந்தியாவை இணைத்த
இசைத் தூதுவன் இந்த
நவீன தான்சேன்
ரகுமானுக்கு இதுபோன்ற
வெகுமானமெல்லாம்
தொலைவானம் அல்ல
தொடுவானம்தான்
இவன்
‘ஆஸ்கார்’ வாங்கட்டும்
அப்புறம் பாருங்கள்
‘ரோஜா’ தந்த ரோஜாவை
சட்டைப் பையில் குத்திக்கொள்வான்
ஒவ்வொரு இந்தியனும் .
- அப்துல் கையூம்
நன்றி :http://nagoori.wordpress.com/
No comments:
Post a Comment