Monday, February 1, 2010

ட்யூஷன் ஆசிரியரின் கவிதை

இன்றொரு கவிதை எழுதவேண்டும்
சொல்லும்பொழுதே தாளொன்று
பாதி நிறுத்தப்பட்ட ட்யூட்டொன்று
உம்மென்றிருந்தன எடுக்கும்வரைக்கும்

விடிகாலையில் பாடங்களை மீட்டும் வகுப்பு
ஒன்பது மணிக்கு குழு வகுப்பு
இரவில் விடைதிருத்தும் வேலை
சிவப்புப் பேனையிலிருந்து வழிவது
மனைவியின் முறைப்பு

செஞ்சாயத் தேனீரருந்தியபடி சிற்றுண்டிச் சாலையில்
எழுதிய எளிய கவிதைப் புத்தகத்தின்
கவிதைத் தலைப்புகளே இங்கு
சுவர் முழுதுமிருந்து என்னைப் பார்த்துச் சிரிப்பவை

கரும்பலகையில் வெண்கட்டி போல
தேய்ந்துபோகும் வாழ்விடையே
கவிதைகள் கைவிட்டு நழுவி
எனக்கே மிதிபட்டு அலறும்

சாகித்திய வானிலே கவிதையொன்றைக் கற்பனை செய்கிறேன்
இரவில் வந்து அரை மயக்கத்தில் நித்திரை கொள்கிறேன்
கண்களில் வீழ்கின்றன சந்திரனின் கிரணங்கள்
எவ்வாறு நாளை கவிதையொன்றை எழுதுவேன்

மூலம் - திலீப் குமார லியனகே ( சிங்களமொழியில்)
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,  இலங்கை


நன்றி  # சொல்வனம் இதழ் 14, 11-12-2009   # நவீன விருட்சம்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails