Wednesday, November 11, 2009

நன்மை பயக்கும் நபிமொழி

அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்;
"(நபிமொழிகளை) அதிகமாக அபூ ஹுரைரா (ரளியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறாரே" என்று மக்கள் (என்னைப் பற்றிக் குறை) கூறிக் கொண்டிருந்தார்கள். நான் என் பசி அடங்கினால் போதும் என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடனேயே எப்போதும் இருந்து வந்தேன்.
புளித்து உப்பிய (உயர்தரமான) ரொட்டியை நான் உண்பதுமில்லை; கோடுபோட்ட அழகிய (உயர்ந்த) துணியை அணிவதுமில்லை. இன்னவனோ, இன்னவளோ எனக்குப் பணிவிடை செய்வதுமில்லை.
பசியின் காரணத்தால் நான் என் வயிற்றில் கூழாங்கற்களை வைத்துக் கட்டிக் கொண்டிருந்தேன். என்னை ஒருவர் (தன் இல்லத்திற்கு) அழைத்துச் சென்று, எனக்கு அவர் உணவளிக்க வேண்டும் என்ப(தை உணர்த்துவ)தற்காக ('எனக்கு விருந்தளியுங்கள்' என்ற பொருள் கொண்ட 'அக்ரினீ' என்னும் சொல்லை சற்று மாற்றி)' அக்ரிஃனீ' எனக்கு ஓர் இறை வசனத்தை ஓதிக்காட்டுங்கள் - என்பேன். அவ்வசனம் என்னுடன் (முன்பே மனப்பாடமாக) இருக்கும்.
ஜஅஃபர் இப்னு அபீ தாலிப் ரளியல்லாஹு அன்ஹு ஏழைகளுக்கு மிகவும் உதவுபவராயிருந்தார். அவர் எங்களை அழைத்துச் சென்று தம் வீட்டில் இருக்கும் உணவை எங்களுக்கு அளிப்பார். எந்த அளவிற்கென்றால் அவர் எதுவுமில்லாத (காலியான) நெய்ப் பையை எங்களிடம் கொண்டு வந்து அதைப் பிளந்து விடுவார். நாங்கள் அதில் (ஒட்டிக் கொண்டு) இருப்பதை நக்கி உண்போம். (ஆதாரம்;புகாரி எண் 3708)

நபிமொழிகளில் பெரும்பான்மையான செய்திகளை மனனம் செய்து அதை வருங்கால சமூகத்திற்கு தந்த சிறப்பிற்குரிய அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் வறுமைநிலையை நினைத்தாலே கல்நெஞ்சமும் கண்ணீர் வடிக்கும். 

இந்த நிலையிலும் எனக்கு உணவளியுங்கள் என்று வாய்திறந்து கேட்காத அவர்களின் தன்மான உணர்வு மெய்சிலிர்க்கவைக்கிறது.
இந்த தியாக சீலரின் அந்தஸ்தை பெற நாம் கோடிகளை கொட்டினாலும் எட்டமுடியுமோ..?

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails