Wednesday, November 11, 2009

ஆடம்பரத்தின் முடிவு அழிவு!

“எந்த ஊரையாவது நாம் அழிக்க நினைத்தால் சுகபோக வாழ்க்கை வாழும் அதன் மக்களுக்கு கட்டளைகள் அனுப்புகிறோம் அவர்கள் அதில் மாறுசெய்கிறார்கள் அவர்களுக்கெதிரான வார்த்தை மெய்ப்பிக்கப்பட்டுவிடுகிறது.  அதற்கு மேல அதை நாம் அடியோடு அழித்து விடுகிறோம்.                    - அல்குர்ஆன் 17 : 16
இறைவனின் இந்தததிருவசனத்தை படிக்கும் போதெல்லாம் எத்தகைய பேருண்மை அதில் அடங்கியிருக்கிறது என்பதை நாம் உணரலாம்.
உலகெங்கும் பரந்துகிடக்கிற சமுதாயத்தினரின் வாழ்க்கையை உன்னிப்பாக ஆராய்ந்து பார்க்கின்ற போது இறையச்சத்தை மறந்து இம்மையின் தற்கால சுகபோகங்களில் சிக்கி வாழ்க்கைப் பாதையில் நடந்தவர்களெல்லாம் பரிதாபத்துக்குரியவர்களாக வாழ்ந்து மடிந்ததை வரலாறு படம்பிடித்துக் காட்டுகிறது.
இஸ்லாத்தின் ஆரம்பகாலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய வாழ்க்கையையும் நான்கு கலிபாக்களின் வாழ்க்கைகளையும் படிக்கின்றபோதெல்லாம் இலட்சியத்திற்காக இறையச்சத்துடன்.  எளிமையுடன் அவர்கள் வாழ்ந்த முறைகள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன.  ஏத்தகைய கட்டுப்பாடுமின்றி எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற அளவுக்கு அவர்களின் பதவிகள் இருந்தாலும் ஆடம்பர வாழ்வு முறைகள் அவர்களை அணுக அஞ்சின.
வறுமையில் வாடுபவர்களும், ஏழைகளும் வேறுவழியின்றி அவசியத்தின் காரணமாக எளிமையுடன் வாழ வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள்.  நல்ல வசதிகளும், வாய்ப்புகளும், அதிகாரபலமும் இருப்பவர்கள் தான் எளிமையான வாழ்க்கைக்கு தங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
யாரும் பெறமுடியாத இணையற்ற பதவியடைந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மண்சுவர்களைக் கொண்ட சிறிய வீட்டில் வாழ்ந்தார்கள்! கயிற்றுக்கட்டிலும், தண்ணீர்வைக்கும் தோல் பையும் தான் அவர்கள் இல்லத்தில் காணப்பட்டன.  அவர்கள் தம் அருமை புதல்வியார் பாத்திமா நாயகம் அவர்களை திருமணம் செய்து கொடுத்த போது சீதனமாகக் கொடுத்த பொருள்களை கைக்கூலி வாங்கும் கோழைகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பாரத நாட்டின் பிதா என்று வர்ணிக்கப்படுகிற மகாத்மா காந்தியடிகள் கலிபாக்களின் வாழ்க்கை வரலாற்றைப் படித்து கண்ணீர் வடித்து “நமது நாட்டு வாழ்க்கை வரலாற்றைப் படித்து கண்ணீர் வடித்து “நமது நாட்டு அமைச்சர்கள் நபி பெருமான் வகுத்த அரசியல் சீர்திருத்தங்களைப் பின்பற்றி நடக்க வேண்டும்” என்று கூறினார்! இப்போது நம் நாட்டின் அமைச்சர்களும், அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் பாதயாத்திரை மேற்கொண்டு மக்களின் பிரச்சனைகளை நேரில் அறிந்து கொள்ள எளிமையான முறைகளைப் பின்பற்றுவது பாராட்டுக்குறியதாகும்.  இத்தகைய செய்திகளை பத்திரிகைகளில் படிக்கின்ற போதெல்லாம் ஜெருசலம் நகரிலே கலிபா உமர் (ரலி) அவர்கள் வெற்றி வீரராக நுழைந்த போது கால்களாலேயே நடந்து சென்ற காட்சியை நம் மனக்கண்களால் காண்கிறோம்.
காட்டுத் தீ போல் மின்னல் வேகத்தில் விரைவாகப் பரவிய இஸ்லா, இந்தியாவிலும் தன் ஆட்சியை நிறுவியது.  முகலாய மன்னர்களில் ஒளங்கசீப் (ரஹ்) அவர்களைத் தவிர மற்றவர்களெல்லாம் இறையச்சத்தை மறந்து ஆடம்பர வாழ்க்கைக்கு தங்களை பலிகொடுத்ததன் காரணமாக நிரந்தர ஆட்சியை நிறுவ முடியாத நிலை ஏற்பட்டது.
தமிழக முஸ்லிம்கள் தங்கள் முன்னோர்களின் வாழ்க்கை முறைகளை ஆராய்ந்து பார்த்தால் இன்று சமுதாயத்திலே புறையோடிப்போயிருக்கும் சீர்கேடுகளைத் துரத்தியடிக்கக் கங்கணம் கட்டிக்கொள்வார்கள்.
பணம் வருகின்ற போது நற்குணம் மேலோங்கிச் செல்ல வேண்டும்.  அதிகாரம் கிடைக்கின்ற போது பணிவை மேற்கொள்ள வளர்பிறை வேண்டும், ஆடம்பரம் நம்மை அழிவுப்பாதையில் தள்ளி விடும் என்ற பயம் எப்போதும் இருக்க வேண்டும் பண ஆசை வெறித் தாண்டவம் ஆட ஆரம்பித்துவிட்டால் உயர்வும், பெருந்தன்மையும் மலர்வதற்கு வழியே இல்லை.
எல்லோரும் நம்மைப் புகழ வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை.  ஆனால் அந்தப்புகழ்ச்சி நம்முடைய மார்க்க அறிவுக்காகவும், செயல் திறனுக்காகவும், சேவை உணர்ச்சிக்காகவும் இருக்க வேண்டும், நமது ஆடம்பரவ hழ்க்கை முறைகளை, சுகபோகங்களைக் கண்டு நம்மைப் பலர் புகழ வேண்டும் என நினைப்போமேயானால் அந்த வாழ்வு நிலைக்காது.  ஆத்தகைய சுக போக வாழ்க்கையை மேற்கொள்ளும மக்களைத்தான் இறைவன் எச்சரிக்கிறான். அந்த எச்சரிக்கைகளைக் கண்டும் திருந்தாதவர்களை அல்குர் ஆனில் அவன் அறிவித்திருப்பது போல அவர்களை அழித்து விடுகிறான்.  இதை மனதில் நிறுத்தி நம்முடைய பண பலமோ, அதிகார பலமோ வேறு எந்த சக்தியோ நம்மை அடிமைப்படுத்த விடாமல் இறையச்சத்தோடு எந்நாளும் வாழ நம் மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்,
“அல்லாஹ்வின் உடையதான நேர்வழியிலல்லாமல் தன் சரீர இச்சையைப் பின்பற்றுபவனைக் காட்டிலும் வழிகெட்டவன் எவனும் உண்டோ?
-(அல்குரஆன் 28:50)
சரீர இச்சைக்குப் பலியாகாமல் இறையச்சத்தில் நெறியுடன் வாழ அல்லாஹ் அருள்புரிவானாக!
 நீடூர் அல்ஹாஜ் ஏ.எம்.சயீத்
  வழக்கறிஞர்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails