Wednesday, November 11, 2009

சபலம்---: (கதை)

மாலை நேரம்…
தங்களை அலங்கரித்துக் கொண்டு அருகே கணவன் வர மழலைச் செல்வங்களுடன் பெருமிதத்தோடு நடந்து சென்ற பெண்களைத் தன் வீட்டு மொட்டை மாடியிலிருந்து பார்த்த மாதவி ஏக்கப் பெருமூச்சு விட்டாள்.  அவளை அறியாது அவளது கண்கள் பொல பொலவென கண்ணீரைச் சிந்தின.
“ஏம்மா! அழறே”
“ஒண்ணுமில்லேடா கண்ணு!
தான் அழுவதைக் குழந்தை பார்த்துவிட்டதைக் கண்டு புடவைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக்கொண்டாள்.
“அழாதேம்மா… எனக்கும் அழ வருது…” குழந்தையின் கண்கள் கலங்கின.
“இல்லேடா கண்ணு. நான் அழமாட்டேன்”.
குழந்தை தனது அரும்பு விரலை தாயின் கண்ணீரைத் துடைக்க நீட்டியது.
மாதவி குழந்தையை அள்ளி அணைத்து கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டாள்.
இன்று அவள் முழு உரிமையுடன் தன் குழந்தைக்கு முத்தமிடுகிறாள்.  ஆனால் அவள் கணவன் இருந்தபோது அவர்களுக்குள் அடிக்கடி போட்டி தான்.
“நான் தான் என் கண்ணுக்கு முதலில் முத்தம் கொடுப்பேன்” அது அவள் கணவன்.
“முடியாது நான் தான்…” இது அவள்.
“ம்மாவுக்குத்தான்” என்று குழந்தை முடிவில்லாத போட்டியைத் தீர்த்து வைப்பான்.  அவள் கணவனுக்கு உடனே பொய்க் கோபம் வரும்.  குழந்தையைச் செல்லமாகக் கடிந்து கொள்வான்.  “சும்மா இருங்க! குழந்தை கிட்டே போய் உங்க கோபத்தையெல்லாம் காட்டாதீங்க.”
தாய் தனக்காகப் பரிவதைக் கண்ட குழந்தை அவளோடு ஒட்ழக்கொள்வான்.
“நாளையிலிருந்து உனக்கு பிஸ்கெட் வாங்கி தரமாட்டேன் போ” குழந்தை தனக்குச் சாதகமாக இல்லாததைக் கண்ட அவன் செல்லமாக மிரட்டுவான்.
“ம்மா வாங்கித் தருமே” இது குழந்தை.
“நான் உனக்கு பிஸ்கெட், பொம்மை எல்லாம் வாங்கித் தரேண்டா கண்ணு அப்பா பேச்சு “கா விட்டுடுடா” மாதவி கணவனை அழகு காட்டிக்கொண்டே குழந்தையிடம் கூறுவாள்.
“நீ அவனுக்கு சப்போர்ட் பண்ணி அவனைக் கெடுத்துடு” அவன் கோபத்தோடு ஆனால் செல்லமாக மாதவியின் கன்னத்தைத் தட்டுவான்.
அந்த நாட்கள்-இனிய நாட்கள் இனி இல்லாத நாட்களாகி விட்டன மாதவிக்கு.
கணவனோடு எப்படியெல்லாம் வாழவேண்டும் என்று கனவு கண்டாள் அவள்? இளமைக் காலத்துக் கனவுகள் அவளது இதயத் திரையில் அடிக்கடி தோன்றி மறையத் தான் செய்தன.  பாழும் சாவு இளமையிலேயே அவளது கணவனைக் கொத்திச் சென்றுவிடும் என்று அவளுக்குத் தான் தெரியுமா?
இன்று அவள் விதவை.  ஆம் ப+விழந்து, பொட்டியிழந்து புன்னகையிழந்து வாழ்கிறாள்.  அவள் இதழ் கடையோரத்தில் என்றாவது புன்னகை இழையோடுகிறது என்றால் அதற்குக் காரணமாக இருப்பவன் ரவி.  அவளது இரண்டு வயதுக் குழந்தை.  அவனது மழலை அவளது துயருக்கு ஆறுதல் வழங்கியது.  கணவனோடு வாழ்ந்த வரை கொடுத்து வைத்தவளாகத் தான் இருந்தாள்.  இப்போது அவன் கொடுத்ததை வைத்து வாழ்கிறாள்.
“ம்மா… அதோ பாரும்மா” மொட்டை மாடியின் கைப்பிடிச் சுவரில் தாயின் அரவணைப்போடு உட்கார்ந்திருந்த ரவி கீழே கை காட்டிக் கொண்டிருந்தான்.  அந்தப் பிஞ்சு விரல் சுட்டிக் காட்டிய திசை நோக்கி மாதவி பார்த்தாள்.  பலூன் விற்றுக்கொண்டு நின்று கொண்டிருந்த ஒருவன்.  அவனுக்கருகில் நின்று, வைத்த கண் வாங்காது அவளையே பார்த்துக் கொண்டிருந்த உருவத்தைப் பார்த்ததும்’ விருட்டென அவளையே பார்த்துக் கொண்டிருந்த உருவத்தைப் பார்த்ததும்’ விருட்டென ‘குழந்தையைத் தூக்கிகொண்டு உள்ளே சென்றுவிட்டாள் மாதவி!
அவள் கல்லூரி மாணவன் போல் தோற்றத்திற்குக் காட்சியளித்தான்.  மாலை நேரத்தில் மாதவி சிறிது மன ஆறுதலாக மொட்டை மாடியில் நிற்பதற்கும் ஆபத்தாக வந்தான் அவன்.  அந்தி மயங்கும் நேரத்தில் தனது குழந்தையை மாடியின் கைப்பிடிச் சுவரில் வைத்து வெளியே செல்லும் கார்களையும், வண்டிகளையும் காண்பிக்கும் போது அவன் முகத்தில் தோன்றும் புன்னகையை ரசிப்பதற்காக அவள் தினம் மொட்டை மாடிக்கு வருவது வழக்கம் அவனும் திடீரென எதிரேயுள்ள மரத்தடியில் தோன்றுவான்.  சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு யாரும் இல்லாவிடில் அவளை நோக்கி மெதுவாகக் கையாட்டுவான்.  மாதவி அவனைக் கண்டதும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு உள்ளே சென்று விடுவாள்.
மாதவி வழக்கம் போல் அன்றும் மாடிக்கு வந்தாள்.  குழந்தைக்கு வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தாள்.  இளம் ஜோடி ஒன்று உலகை மறந்து ஒருவர் இடுப்பை ஒருவர் அணைத்துக் கொண்டு சென்றது.  மாதவி அதைப் பார்த்தாள்; அவள் உள்ளத்தில் ஏதோ ஒரு கிளுகிளுப்பு எழுந்தோடியது.  வுழக்கம் போல் திடீரென அந்த வாலிபன் மரத்தடியில் தோன்றினான், மாதவிக்கு வழக்கம் போல் இன்று உள்ளே செல்ல மனம் வரவில்லை அவனையே பார்த்தாள்.  அவனுக்கு வெற்றி மெதுவாக அவளை நோக்கிக் கையை ஆட்டினான்.  மாதவி தன்னை மறந்தாள்.  இல்லை அவளது இளமை அவளை மறக்கச் செய்தது.  மெதுவாக அவனை நோக்கிக் கையை ஆட்ட கையைத் தூக்கினாள்.
“வீல்…….
அலறல் ஒலி! அவளது கையின் அரவணைப்போடு கைப்பிடிச் சுவரில் இருந்த ரவி தலைகீழாகக் கீழே சென்று கொண்டிருந்தான்.
“ஐயோ ரவி” கூச்சலிட்டுக் கொண்டே மாடியிலிருந்து ஓடி வந்தாள்.  சாலையில் குழந்தையைச் சுற்றிக் கூட்டம் கூடிவிட்டது.  கோபம் கொண்ட குழந்தையால் பிய்த்தெறியப் பட்ட பொம்மையைப் போல் ரவியின் உடல் சிதைந்து கிடந்தது.
“ரவி..” மாதவி கத்தினாள்.  அவளது குழந்தை – அவளது ஒரே ஆறுதல்… சாலையிலே இரத்த மெத்தை விரித்து அதிலே தூங்கிக் கொண்டிருந்தது.  நிம்மதியான தூக்கம்.
மாதவி மயங்கி விழுந்தாள்.  அவள் உள்ளத்தில் தோன்றிய ஏதோ ஒரு சபலம் அவளைக் கொல்லாமல் கொன்றுவிட்டது.
- நீடூர் அலி

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails