Sunday, February 20, 2011

கலீஃபா உமர் வரலாற்றை தமிழில் மொழிபெயர்த்தவருக்கு சாகித்ய அகாடமி விருது

தூரநாடு ஹனீப் என்பவர், மலையாளத்தில்  உமர் கலீபாவின் வாழ்க்கை வரலாற்றினை ஒரு நாவல் வடிவில் எழுதிப் பிரபலம் பெற்றிருந்தார். அந்த  நாவலை "செங்கோல் இல்லாமல், கிரீடம் இல்லாமல்' என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்த்திருந்தார் நிர்மால்யா (பரிசுத்தம்)  என்னும் ஒரு புதுமுகத் தமிழ் எழுத்தாளர் . அதற்காக அந்த மொழி பெயர்ப்பாளருக்கு  சிறந்த மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி  விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுமுக எழுத்தாளர் நிர்மால்யாவின் இயற்பெயர் மணி என்பதாகும். கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்.  ஊட்டியில் எழுதுபொருள் விற்பனை கடை வைத்திருக்கும் மணியின் சிந்தையில் எழுதுபொருளாக முஸ்லிம்களின் இரண்டாம் கலீபாவுடைய வாழ்க்கை இடம்பிடித்தது வியப்பிற்குரியதே.

மணி என்கிற எழுத்தாளர் நிமால்யா இதுவரை 11 மலையாள நாவல்களைத் தமிழில் மொழிபெயர்த்து அளித்துள்ளார்.

நீலகிரியைச் சேர்ந்த ஓர் இலக்கியவாதிக்கு சாகித்ய விருது கிடைப்பது இதுவே முதன் முறை. நிர்மால்யா என்கிற மணி கூறுகையில், ""தேசிய அளவிலான இலக்கிய தளத்தில் எனது எழுத்துக்கும் அங்கீகாரம் கிடைத்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி; கலை, இலக்கிய உணர்வு அற்றுப்போன நீலகிரி மண்ணில் இருக்கும் எனக்கு கிடைத்திருக்கும் இந்த விருது, இங்குள்ள இளைஞர்கள மத்தியில் இலக்கிய தாகத்தை ஏற்படுத்தினால் இன்னும் மகிழ்ச்சியடைவேன்,'' என்றார்.

நீலகிரிக்கு அடுத்துள்ள கோவையைச் சேர்ந்த கவிஞர்கள் புவியரசு, சிற்பி ஆகியோர் ஏற்கனவே, சிறந்த மொழி பெயர்ப்பு மற்றும் படைப்பிலக்கியங்களுக்காக தலா 2 முறை சாகித்ய அகாடமி  விருதுகளைப் பெற்றுள்ளனர்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails