Monday, June 18, 2012

நல்லவனின் முடிவும் தீயவனின் முடிவும் ஒன்று தானா?

(நம்பிக்கையில் உறுதி)

மரணத்துக்குப் பின்பு வரும் வாழ்க்கையைப் பொறுத்தவரை, உலகில் மூன்று கோட்பாடுகள் நிலவுகின்றன.

1. மரணத்துக்குப் பின்பு வாழ்க்கை என்று ஒன்று கிடையாது. மரணத்தோடு எல்லாம் முடிந்து விடுகிறது என்பது ஒரு கோட்பாடு.

2. மனிதன் செய்கின்ற நன்மைகள், பாவங்களைப் பொறுத்து – மீண்டும் மீண்டும் அவன் பிறவி எடுக்கின்றான் என்பது மற்றொரு கோட்பாடு.

3. ‘உலக முடிவு நாள்’ அன்று – மரணித்து விட்ட எல்லார்க்கும் உயிர் கொடுத்து எழுப்பப் பட்டு, விசாரிக்கப் பட்டு – சுவர்க்கத்தையோ, நரகத்தையோ அடைந்து அங்கே நிரந்தரமாக மனிதன் தங்கி விடுகிறான் என்பது இன்னும் ஒரு கோட்பாடு.


இறைவனை மறுக்கும் பிரிவினர் – மரணத்துக்குப் பின் வரும் வாழ்க்கையையும் மறுக்கின்றார்கள். அப்படி ஒரு வாழ்க்கை கிடையாது, இருக்கவும் முடியாது என்பது அவர்கள் வாதம். மரணத்துக்குப் பின் வாழ்வு உண்டு என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்றும். யாராவது போய் பார்த்து விட்டு வந்தார்களா என்றும் கேள்விகள் எழுப்புகிறார்கள் அவர்கள்.

‘மரணத்தோடு மனித வாழ்வு முடிந்து விடுகிறது என்பதற்கு .என்ன ஆதாரம் என்றும், யார் போய் பார்த்து விட்டு வந்து இவர்களுக்குச் சொன்னார்கள்’ என்றும் – நாமும் திருப்பிக் கேட்கலாம்.

மேலும் இவர்களோடு விவாதத்தைத் தொடரும் முன்பு ஒரு விஷயம்.
‘மரணத்துக்குப் பின்பு வாழ்க்கை இல்லை, மரணத்தோடு எல்லாமே க்லோஸ் (உடழளந) – என்ற நம்பிக்கை என்ன விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதை இங்கே பார்ப்போம்.

இந்தக் கொள்கை ஏற்படுத்திய மிக முக்கியமான விளைவு – விரக்திக்கு இட்டுச் செல்லும் உலக வாழ்க்கையை நவீன மனிதர்களுக்கு வழங்கியது தான்!

நிரந்தரமான ஒரு வாழ்வைத் தான் – மனிதன் விரும்புகிறான். ‘மரணத்தோடு நாம் அழிந்து விடுகிறோம்’ என்ற ஒலி நாராச ஒலியாகவே மனிதனுக்குப் படுகிறது.

மனோ தத்துவ மருத்துவர் ஒருவர் கூறுகிறார்:

‘என்னிடம் வரும் நோயாளிகளில் மூன்றில் இரண்டு பங்கு பேர் படித்தவர்கள், பட்டதாரிகள், வாழ்வில் பல வெற்றிகளை அள்ளிக் குவித்தவர்கள். அவர்கள் ஏன் மனோ வியாதிக்கு ஆளானார்கள்? திடீரென்று வருகின்ற மரணத்தோடு எல்லாமே முடிந்து போய் விடுகின்ற இந்த வாழ்க்கையில் எதைச் சாதித்து என்ன பயன் என்ற விரக்தி மனப்பான்மை அவர்களை திருப்தியற்ற வாழ்க்கைக்கு இட்டுச் சென்றுள்ளது.’

இவ்வுலக வாழ்க்கை என்பது என்ன?

- தொடர்ந்து வருகின்ற துயரங்கள், சோகங்கள், கவலைகள்,

- முடிவே இல்லாத அநியாயங்கள், அக்கிரமங்கள், ஏமாற்று வேலைகள், மோசடிகள்,

- நீக்கிட முடியாத பசி, பட்டினி, நோய், வறுமை

- இவைகளைக் கொண்டது தான் மனித வாழ்வா? மனிதனுக்கு நிரந்தர அமைதியையோ, மகிழ்ச்சியையோ, தராத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா – என்ற சிந்தனை, உயிர்த் துடிப்புள்ள ஒரு மனிதனை செயலற்றவனாக ஆக்கி விடுகிறது. ஒரு கொள்கை வெற்றிடத்தை அவனுக்கு வழங்கி விடுகிறது!

அடுத்து – மனிதன் தனது செயலுக்கேற்ப பிறவி எடுக்கின்றான் என்ற கோட்பாடும் மனிதனுக்குத் தெளிவான சிந்தனையைத் தருவதில்லை! ஏனெனில் நமது பயணம் எங்கே துவங்கியது, எங்கே நாம் நிற்கிறோம், நாம் எங்கே செல்ல இருக்கிறோம் என்பது குறித்த தெளிவை இக்கொள்கை தந்து விட இயலாது.

தமிழில் வெளியாகும் ஒரு வார இதழில் படித்ததாக நினைவு:

ஒரு வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். அப்போது ஒரு மாணவன் ஒரு ‘ஈ’ யைப் பிடித்துக் கொன்று விட்டான்.

ஆசிரியர் சொன்னார்: ‘இப்போது அந்த ஈயை நீ அடித்துக் கொன்று விட்டாய். அடுத்த பிறவியில் அந்த ஈ, மனிதனாக வரும். நீ ஒரு ஈயாகப் பிறவி எடுப்பாய். அப்போது அது உன்னைக் கொன்று விடும்.’

மாணவன் எழுந்து சொன்னான்: ‘இல்லை சார்! சென்ற பிறவியில் நான் ஈயாக இருந்தேன். இந்த ஈ மனிதனாக இருந்தது. அப்போது அது என்னைக் கொன்று விட்டது. இப்போது அதனை நான் கொன்று விட்டேன். இத்துடன் பிரச்னை தீர்ந்து விட்டது!’

இப்போது சொல்லுங்கள்: மறு பிறவிக் கொள்கை மனிதனுக்குத் தெளிவைத் தருமா?

நல்லவனாகவோ, தீயவனாகவோ வாழ்ந்து விட்டு ஒவ்வொரு மனிதனும் மரணமடைகின்றான். மரணம் தான் ஒரு மனிதனின் முடிவு என்றால் – நல்லவனின் முடிவும் தீயவனின் முடிவும் ஒன்று தானா?

மக்கள் மீது அக்கிரமம் புரிந்தவனும், அக்கிரமத்துக்கு ஆளானவனும் மரணமடைகின்றார்கள்!

ஒடுக்குபவனும் ஒடுக்கப்பட்டவனும் மரணமடைகின்றார்கள்!

மக்களின் செல்வத்தைச் சுரண்டி ஆடம்பர வாழ்வை அனுபவித்தவனும், சுரண்டப்பட்ட ஏழையும் மரணமடைகின்றார்கள்!

அப்பாவிப் பெண் சிசுக்களும், அவர்களை உயிரோடு புதைத்தவர்களும் மரணமடைகின்றார்கள்!

பாவம் செய்தவனும், பாவங்களை ஏறெடுத்தும் பார்க்காதவனும் மரணத்தைச் சுவைக்கிறார்கள்!

தீயவன் தண்டனை அனுபவிப்பதில்லை!

நல்லவன் துன்பங்கள் நீங்கி வாழ்வதும் இல்லை!

இது உங்களுக்கு நியாயமாகப் படுகின்றதா?

மரணத்தோடு எல்லாம் முடிந்து போய் விடும் என்றால் ‘நான் ஏன் நல்லவனாக வாழ்ந்திட வேண்டும் என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்வீர்கள்?

அரசு தண்டிக்கும் – சட்டம் அதன் கடமையைச் செய்யும் என்பார்கள். சட்டங்கள் எல்லாக் குற்றவாளிகளையும் தண்டித்து விட்டதா? அரசே குற்றம் செய்தால் அவர்களைத் தண்டிப்பது எப்படி? அரசுக்குத் தெரியாமல் நடக்கின்ற குற்றங்களுக்கு எப்படி தண்டனை தர முடியும்?

சரி! இறைவனை நம்பி, நல்லவனாக வாழ்ந்து, ஒழுக்கங்களைப் பேணி, தீமைகளை எதிர்த்துப் போராடி உயிர் விட்டவனுக்கு என்ன பரிசை இந்த உலகம் தந்து விட முடியும்? (பார்க்க: அல் குர் ஆன் 45: 21-22)

நீதி வழங்கப் பட வேண்டும், நியாயம் கிடைக்க வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் உள்ளுணர்விலும் ஆழமாகப் பதிந்துள்ள வேட்கை! அதனால் தான் அநீதிக்கெதிரான போராட்டங்களை நாம் மனித வாழ்வில் சந்திக்கின்றோம். ஆனால் அந்தப் போராட்டங்கள் எல்லாம் வெற்றியைச் சந்தித்ததா என்றால் அது தான் இல்லை!அது இந்த உலகத்தில் சாத்தியப் பட்டதே இல்லை!

எனவே தான், நீதிபதிக்கெல்லாம் மேலான நீதிபதியாகிய இறைவன் – மனிதர்களுக்கு மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பி நீதியை நிலை நிறுத்துகிறான்!

‘உங்களுக்கு உயிர் கொடுத்து எழுப்புவேன்’ என்று இறைவன் சொல்லும்போது மனிதன் கேட்கிறான்:

‘இது வியப்புக்குரிய விஷயம் தான்! நாங்கள் மரணமடைந்து மண்ணோடு மண்ணாகி விட்டாலுமா மீண்டும் எழுப்பப் படுவோம்?’ இவ்வாறு எழுப்பப் படுவது என்பது அறிவுக்குப் புறம்பான விஷயமாகும்.’ (50: 3)

மறுமையை மறுக்கும் மனிதன் எடுத்து வைக்கும் இந்த வாதத்துக்கு இறைவன் எப்படி பதில் தருகிறான் பார்ப்போமா?

மனிதன் கேட்கிறான்: ‘நான் இறந்து விட்டால் உண்மையிலேயே மீண்டும் உயிர் கொடுக்கப் பட்டு எழுப்பப் படுவேனா? முன்பு அவன் எந்த ஒரு பொருளாகவும் இல்லாதிருந்த போது, நாம் தான் அவனைப் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா?’ (19: 66-67)

எழுதப் பட்ட ஏடு சுருட்டப் படுவதைப் போல நாம் வானத்தைச் சுருட்டும் அந்நாளில், நாம் முதலில் எவ்வாறு படைக்கத் துவங்கினோமோ அவ்வாறேநாம் மீண்டும் படைப்போம். இது நம்முடைய பொறுப்பில் உள்ள ஒரு வாக்குறுதியாகும்! (21: 104)

பூமி வரண்டு கிடப்பதையும் நீர் காண்கின்றீர். அதில் நாம் மழையைப் பொழிந்தவுடன் அது சட்டென்று உயிர் பெறுவதையும் தழைத்தோங்குவதையும் நீர் காண்கின்றீர். இது அல்லாஹ்வின் சான்றுகளீல் ஒன்றாகும். திண்ணமாக இறந்து விட்ட இப்பூமிக்கு எந்த இறைவன் உயிர் ஊட்டுகின்றானோ, அந்த இறைவன் இறந்தவர்களுக்கும் உயிரூட்டக் கூடியவன் ஆவான். (41: 39)

இந்த வானங்களையும், பூமியையும் படைத்தவனும், அவற்றைப் படைப்பதனால் சோர்வு அடையாதவனுமாகிய அல்லாஹ், இறந்தவர்களை உயிர்ப்பித்து எழுப்புவதற்கு ஆற்றல் உடையவனே என்பது இவர்களுக்குப் புலப்படவில்லையா? (46:33)

அவனுடைய எலும்புகளை நம்மால் ஒன்று திரட்ட முடியாது என்று மனிதன் எண்ணிக் கொண்டிருக்கின்றானா? ஏன் முடியாது? நாமோ அவனுடைய விரல்களின் நுனியைக் கூட மிகத் துள்ளியமாக அமைப்பதற்கு ஆற்றல் பெற்றுள்ளோம். (75:3-4)

ஆம்! மறுமை ஒரு சத்தியம் மட்டுமல்ல! சாத்தியமும் கூட!

by S.A. மன்சூர்  அலி .M.A., B.Ed.,

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails