Saturday, June 23, 2012

படிக்கட்டுகள்... ஏற்றம் - 15

இறைவழிபாடு Vs  பணம் சம்பாதித்தல்

மனிதனின் சறுக்கல் அவன் இந்த உலகத்தில் எதை முக்கியம் என்று நினைக்கிறானோ அதில்தான் பெரும்பாலும் அமைந்திருக்கிறது. ஒரு பாக்டீரியா பேரன் பேத்தியோடு குடியிருக்கும் உணவை சாப்பிட்டுவிட்டு ஏன் வயிற்றை இப்படி வலிக்கிறது எனும் ஒரு நோயாளியின் கேள்விபோல்தான் , பிரச்சினைகளை சொந்தமாக தேடி தன் வாழ்க்கையில் பிரச்சினைகளை அதிகமாக்கிவிட்டு பிறகு "எனக்கு ஏன் இறைவன் இப்படி சோதிக்கிறான்" என்று புலம்புவது ஒரு ரகம்.

வாழ்க்கையில் முன்னேறுவது என்பது முக்கியம் என நினைக்கும் சூடு சுரணை  உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு காலம் வரும் அதில் பணம் வசப்படும், வாக்குக்கு மரியாதை இருக்கும் அப்போதுதான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தன்னை சுற்றி ஒரு ஒளிவட்டம் வந்து விட்டதாக கற்பனை செய்து கொண்டு தான் சொல்வதெல்லாம் சரி, தான் செய்வதெல்லாம் சரி என்று ஆட்டம் போட்டால் சறுக்கும் காலம் வந்தால் முதலில் ப்ரூட்டஸ்களை சந்திக்க தயாராக வேண்டியதுதான். அதற்கு பிறகு வளர்த்த கிடா, நெஞ்சில் பாய்ந்துவிட்டது என புலம்பி புண்ணியமில்லை. [ கிடா நெஞ்சில பாயும் அளவுக்கு அவ்வளவு குள்ளமாவா இருக்கீங்கனு யாரும் கேட்டமாதிரி தெரியவில்லை]

இன்றைய நவீன சூழல் மனிதனை தடம்புரளச்செய்யும் எல்லா வசதிகளையும் அவன் கையில் வந்து கொடுத்து விட்டு போயிருக்கிறது.


ஆண்களைப்பொருத்தவரை விபரீத உறவுகளாலும், பண ஆசையில் என்ன செய்கிறோம் என்பதை மறந்த சயன நிலைதான் அவர்களை பாதாளத்துக்கு கொண்டு செல்கிறது. இதை நெறிப்படுத்த எந்த சட்டமும் செய்யாததை இறைஅச்சம் வெற்றிகரமாக செய்யும். இத்தனை நாள் இல்லாத பொருளாதார வளர்ச்சி சமயங்களில் தவறையும் சரி என்று பேசச்சொல்லும். தேவையில்லாத ஹராமான உறவுகளைக்கூட ஞாயப்படுத்த சொல்லும். மார்க்கம் சரியாக கற்றிருந்தால் / தொழுகை ஒழுங்குடன் கடைபிடிக்கப்பட்டிருந்தால் அந்த குடும்பம் மானக்கேடுகளை விட்டு தப்பிக்க முடியும்.
வாழ்க்கையில் ஒரளவு வெற்றியடைந்தவர்கள் தான் இதுவரை சம்பாதித்ததை தக்க வைத்துக் கொள்ள மார்க்கத்துக்கு மீறிய இறைவன் வெறுக்கும் இணைவைத்தல், இறைவன் அல்லாதவர்களை வணங்கவும் முற்படுதல் போன்ற விசயங்களில் இறங்கும்போது அதன் “தண்டனைத் தீவிரம்” தெரிவதில்லை. பிள்ளைகளை வைத்து பெருமை அடிப்பது,  பணம் இருப்பதை வைத்து பெருமையடிக்கும் முன் இரண்டையும் இறைவன் நம்மை சோதிக்கத்தான் கொடுத்திருக்கிறான் எனும் அவன் வேத வாக்கை நினைத்தால் அகந்தைகள் அடங்கும். நாம் வாழும் இந்த நூற்றாண்டில் இந்த பரந்த பூமி எத்தனையோ கோடீஸ்வர்களை தனக்குள் புதைத்து சிதைத்திருக்கிறது. பூமி தன் வயதுக்கு எத்தனையோ கோடி மக்கள் மரணித்ததை தனது பொறுமையுடன் பார்த்திருக்கும்.

நாம் வாழும் காலம் , சம்பாதிப்பது எல்லாம் ஒரு மேகம் மாதிரி மாற்றங்களுக்கு உட்பட்டது. நமக்கு அள்ளித்தருபவன் இறைவன் தான் என்பது சரியாக புரிந்தால் மனது நிச்சயம் சாந்தப்படும். இந்த உலகத்தில் எத்தனையோ நீர் வளத்தை தந்தவன் தாகத்துக்காக ஒரு டம்ளர் தண்ணீர் கிடைக்காமல் மரணிக்கும் சூழ்நிலையை எத்தனையோ மனிதர்களுக்கு கொடுத்திருக்கிறான்.

அதே சமயம் பணம் சம்பாதிப்பதை ஏதோ பாவச்செயல் மாதிரி பேசும் முல்லாக்கள் சில இளைஞர்கள் மனதில் தனது ரப்பர் ஸ்டாம்பை ஆழமாக குத்திவிடுவதால் சில இளைஞர்கள் தான் செய்வது தவறு என்று தெரியும்போது தனது மகள் கல்யாண வயதுக்கு வந்துவிடுகிறது. இனிமேல் கிடைத்த குறுகிய காலத்துக்குள் தனது தேவைகளை பார்த்துக்கொள்ள அந்த இளைஞர்கள் அழையும்போது அந்த முல்லாக்கள் எந்த உதவியும் அந்த பாதிக்கப்பட்ட மனிதனுக்கு செய்வதில்லை. ஆரம்பத்திலேயே இந்த முல்லாக்கள் தனது கையாளாகாத தனத்தை மறைக்கத்தான் இப்படி போதிக்கிறார்கள் என்பதை உணர்ந்தால் இவ்வளவு பிரச்சினைகள் இருக்காது. எம்பெருமானார் முஹம்மது நபி [ஸல்] அவர்களின் எளிமையான வாழ்க்கையையும் தனது மகளுக்கு சீதனம் கொடுக்கும்போது இருந்த கஷ்டமான சூழ்நிலையை சொல்லும் அவர்கள் ஒருபோதும் நபி [ஸல்] “சம்பாதித்து வசதியாக வாழ்வதை” ஒருபோதும் தடை சொன்னதில்லை என்று சொல்வதே இல்லை.

 சிலர் எளிமையாக இருப்பதை போதிக்கிறேன் என்று வறுமையாக இருப்பதற்கு போதனை செய்கிறார்கள். சில பெரியவர்கள் செய்யும் தவறு தனது வாழ்க்கையை அப்படியே கார்பன் காப்பி எடுத்ததுபோல்தான் தன் வீட்டு பிள்ளைகளுக்கும் நடக்கும் என்று தன்னாலேயே கற்பனை செய்துகொண்டு சமயங்களில் பிள்ளைகளின் முன்னேற்றத்துகான முடிவுகளுக்கும் தடையாக இருக்கிறார்கள்.

ஆக சுபிட்சத்தை தருவது இறைவன் தான். முயற்சிகள் தோல்வியடையலாம் முயற்சிக்க தயங்களாமா?. நீங்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் இறைவனிடம் மனமார மன்றாடிகேட்டு ஆரம்பியுங்கள்..அதற்கு பிறகு பாருங்கள் உங்களின் வெற்றிப்பாதையை.

நாம் இறைவனிடம் சரணடைய தயங்குகிறோம். இதுவரை இறைவன் நமக்கு தந்த எத்தனையோ வசதிகளுக்கு நாம் நன்றி சொல்லி விட்டோமா? என் வாழ்க்கையில் மிக கஷ்டமான சூழ்நிலையில் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். நான் என் கஸ்டத்தை அவரிடம் சொல்லி புலம்பிக் கொண்டிருக்கும்போது அவர் கேட்டது ' உன் துஆ வில் இறைவனுக்கு நன்றி சொல்வதை அதிகமாக்கு' என்றார்.  “இறைவனின் ரஹ்மத் உனக்கு நிறைய கிடைக்கும், அவன் அள்ளித் தருவதை உன்னால் கணக்கிட முடியாது” என்றார். என் வாழ்க்கையில் அவரின் அறிவுரைக்கு பிறகு மிகப்பெரிய மாற்றமும் சுபிட்சமும் ஏற்பட்டது. எல்லாம் அந்த வல்ல இறைவனின் செயல்.

தொழில்/ வேலை செய்து நல்லபடியாக சம்பாதிப்பவர்கள் இறை வழிபாட்டுக்கான நேரத்தை ஒதுக்குவதில் மெத்தனம் காட்டுவது அல்லது "ரொம்ப பிசி" என்று ஒரு வார்த்தையில் இறை வணக்கத்தை செயல்படுத்த சிரமம் காட்டுவது அவ்வளவு நல்லதல்ல. உங்களுக்கு தரப்பட்டிருக்கும் அனைத்து வசதிகளும் சோதிக்கத்தான் என தெரிந்தால் அதன்மீது இந்த அளவு அடிமைத்தனம் இருக்காது.

இஸ்லாத்தில் வழிபடுதலும் , கீழ்படிதலும் என்ற விசயம் இருக்கிறது. இங்கு கீழ்படிதல் என்பது இறைவனின் கட்டளைக்கு. சிலர் வழிபடுகிறார்கள், ஆனால் கீழ் படிய மறுக்கிறார்கள். நமது மன இச்சைக்கு தகுந்த மாதிரி இறைவனின் கட்டளைகளை மாற்றி அமைக்க நாம் யார்?. சரி இது போன்ற சமயங்களில் குர்ஆன், ஹதீஸ், மார்க்க அறிஞர்கள் என்று நமது சந்தேகத்தை தீர்க்க முடியும். ஆனால் கடைசியில் உள்ள மார்க்க அறிஞர்களை முதன்மை படுத்தி குர்ஆனை கடைசியாக்கி விட்டதால் பல குழப்பங்கள். நாம் இறைவனிடம் சரண் அடையும் நிலையை உருவாக்கி கொண்டால் அவனது ஆட்சியில் நாம் சுபிட்சமாக இருப்போம். நமக்கு தேவைப்பட்டதை கொடுக்கவும் , தேவையற்றதை நம்மிடமிருந்து எடுக்கவும் அவன் ஒருவனே அறிந்தவன்.

இன்றைக்கு நமக்கு வருமானம் குறைவாக இருக்கலாம். ஆனால் அந்த குறைந்த வருமானத்திலும் நிம்மதியை தந்திருந்தால் அதுவே பெரிய விசயம். நான் எழுதியிருப்பதை படித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு இறைவன் உங்கள் கண்பார்வையை குறைவின்றி கொடுத்திருக்கிறான், ஒருமுறை உங்கள் கண்களை மூடி படிக்க ஆசைப்பட்டாலே அந்த வல்லோனின் கருணை எவ்வளவு விசாலமானது என்பது தெரியும். எத்தனையோ மக்கள் தங்கள் குடும்பத்திற்கு அன்றாடம் சாப்பாட்டுக்கு கூலி வேலை பார்க்கும் சூழ்நிலையிலிருந்தும் கண் பார்வையற்றவர்களாக இருந்து கஷ்டப்படுகிறார்கள். இறைவன் நம்மை அது போன்ற சோதனைக்கு உட்படுத்தாமல் இருப்பதற்கே நாம் எவ்வளவு நாள் நன்றி செலுத்த வேண்டும்.


வாழ்க்கையில் கிடைக்கும் வெற்றிகள் அனைத்திற்கும் நாம் மட்டும் பொறுப்பல்ல. நம்மை நெறிப்படுத்திய ஆசிரியர்கள், நம்மை கண்டித்த பெற்றோர், தவறு செய்தால் தண்டிக்கப்படுவாய் என்று சொன்ன பெரியவர்கள் எல்லோரும் சேர்ந்து மோல்ட் செய்யப்பட்டுதான் நாம் இப்போது வெற்றிபெற தகுதியுடையவானாகிறோம்.

இவையனைத்தையும் நமக்கு சரியாக தந்து நம்மை காப்பாற்றி வரும் அந்த இறைவனை வழிபடுதல் மிக முக்கியம் என்பதற்கு மறுமொழி இருக்க முடியாது.

பல வருடங்களுக்கு முன் என்னிடம் ஒரு இந்தோனேசிய கூலித்தொழிலாளி சொன்னது

நாளைக்கே நமது மரணம் என்று உன் வணக்கத்தை / நல் அமல்களை செய். இன்னும் நூறு வருடம் வாழப்போவதை போல் உன் பொருளாதாரத்தை உயர்த்த  உழை.

-ZAKIR HUSSAIN
Source : http://adirainirubar.blogspot.in

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails