சகோதரர் PJ அவர்களுக்காக துஆச் செய்யுங்கள்!
உளமார்ந்த பிரார்த்தனைகள் வேண்டி ...
எண்பதுகளின் மத்தியில் தமிழகத்தில் ஏற்பட்ட ஏகத்துவ விழிப்புணர்வுப் புரட்சிக்கு வித்திட்டவர்களுள், "PJ" என்று அன்புடன் அழைக்கப்படும் சகோ. P. ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் தலையானவர். இஸ்லாமியப் பேரவை, அஹ்லுல் குர்ஆன் வல் ஹதீஸ், ஜம்யிய்த்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா, அனைத்துத் தவ்ஹீது ஜமாஅத் கூட்டமைப்பு, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆகிய சன்மார்க்க-சமுதாய அமைப்புகளில் பெரும் பங்காற்றியவர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் நிறுவனர். நாவன்மை மிக்க பிரச்சாரகர். அரபு மொழியில் தேர்ந்தவர். மறை விளக்கம், வரலாறு, ஹதீஸ் கலை, ஃபிக்ஹுச் சட்டம் ஆகியவற்றில் ஆய்வுரை வழங்கத்தக்க நம் சமகாலத் தமிழறிஞர்; பன்னூலாசிரியர். அந்நஜாத், அல்ஜன்னத் ஆகிய மாத இதழ்களில் ஆசிரியராக இருந்தபோது, இவர் எழுதிய தலையங்கங்கள் மாற்றுக் கருத்துடையோராலும் விரும்பிப் படிக்கப்பட்டவை.
பிற மதத்தவருக்கு இஸ்லாத்தை, அதன் தூய வடிவில் அறிமுகப்படுத்துவதற்காகத் தமிழகமெங்கும் 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' எனும் உயிரோட்டமான பிரச்சாரம் மேற்கொண்டவர். எல்லாருக்கும் விளங்கும் எளிமையான பேச்சுக்கும் எழுத்துக்கும் சொந்தக்காரர்.
சகோதரர் PJ அவர்களது அரபு மொழி அறிவு ஆய்வுத்திறன், எழுத்தாற்றல், சொல்லாற்றல், ஷிர்க் மற்றும் பித்-அத்துக்கு எதிரான முப்பதாண்டுப் போராட்டம், வரதட்சணை எனும் கொடிய நோய்க்கு எதிராக முஸ்லிம்களிடத்தில் ஏற்படுத்திய விழிப்புணர்வு, மக்களிடம் ஏற்பட்ட சிந்தனை மாற்றம், பிற சமயத்தாருக்கு இஸ்லாமை எளிமையாக அறிமுகப்படுத்தியமை போன்ற அவரது சேவைகள் உலகெங்கும் வாழும் தமிழறிந்த முஸ்லிம்களுக்குத் தேவை.
அன்னாருக்கு மார்பின் வலப்புறத்தில் தோலுக்கடியில் சிறிய கட்டி ஒன்று ஏற்பட்டு, அது கேன்ஸர் வகைக் கட்டி என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ் சிகிச்சையும் தொடங்கப்படவுள்ளது. "பிரார்த்தனையைவிட சக்திமிக்க மருந்தில்லை" என்று உறுதியுடன் நம்புகின்ற நாம் அனைவரும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் "சகோ. PJ அவர்களுடைய நோயை முற்றிலும் நீக்கி, நிறைவான உடல்நலத்தை அவருக்கு வழங்க வேண்டும்" என உளமாரப் பிரார்த்தனைகள் செய்ய வேண்டுமாய் அன்புடன் கோருகிறோம் - சத்தியமார்க்கம்.காம்
இது பற்றி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலத் தலைமை வெளியிட்டிருக்கும் முக்கிய அறிவிப்பு:
சகோதரர் பி.ஜே. அவர்களுக்கு வலதுபுற மார்பின் மேற்பகுதியில் (Skin) தோலுக்கடியில் சிறிய அளவில் ஒரு கேன்சர் கட்டி உள்ளதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் முற்றிலும் குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.மேலும் இதுவல்லாத மாற்று மருத்துவ முறைகளிலும் சிகிச்சைகள் உள்ளதாக சிலர் ஆலோசனை கூறுகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக படைத்தவனின் அருள் கொண்டே தவிர நிவாரணம் இல்லை என்பதே நமது நம்பிக்கை.
வழக்கம் போல் அவர்கள் தமது பணிகளைச் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
எனவே அவர்களுக்காக வல்ல அல்லாஹ்விடம் அதிகமதிகம் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நேரிலோ அல்லது தொலைபேசியிலோ அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்திவிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். இது குறித்து சகோதரர் பி.ஜே. அவர்கள் மாநில நிர்வாகத்திற்கு அனுப்பிய கடிதத்தை கீழே தருகிறோம்.
இப்படிக்கு
மாநில நிர்வாகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
10.10.2012
சகோதரர் பி.ஜே. அவர்களின் கடிதம்
மாநில நிர்வாகிகள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும். எனது உடல் நிலை குறித்து உங்களுக்கு இருக்கும் அக்கரையை நான் அறிவேன். ஆனாலும் என்ன சிகிச்சை செய்ய வேண்டி வந்தாலும் என் சக்திக்கு உட்பட்டு என்ன செய்ய இயலுமோ அதை இன்ஷா அல்லாஹ் நான் செய்து கொள்வேன். ஜமாஅத் மூலமோ தனிப்பட்ட நபர்கள் மூலமோ எனது சிகிச்சைக்காக செலவு செய்வதை நான் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.
எனது நோய் தனிப்பட்ட மனிதன் என்ற முறையில் எனக்கு ஏற்பட்டுள்ளது. ஜமாஅத் பணிகளால் ஏற்படும் இழப்புகளைத் தான் ஜமாஅத் செய்யும் கடமை உண்டு.
ஒருவேளை என்னால் செலவு செய்ய இயலாத அளவுக்கு பெரும் செலவு ஏற்படும் நிலை வந்தால் நான் அழகிய பொறுமையை மேற்கொள்வேனே தவிர யாருடைய உதவியையும் நான் பெற்று சிகிச்சை மேற்கொள்ள நான் தயாராக இல்லை. இதற்காக யாரிடமும் கடனாகக் கூட வாங்கி செலவிடவும் நான் தயாராக இல்லை. என் சக்திக்கு உட்பட்ட வகையில் நான் முடிவு செய்யும் வகையில் என்னை விட்டுவிடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
என் மருத்துவ செலவு தொடர்பாக எந்த ஆலோசனையும் செய்ய வேண்டாம் என்று கண்டிப்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் சில நிர்வாகிகள் இதை தமக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்திருப்பதாகக் கேள்விப்படுகிறேன். இது மறைக்க வேண்டிய விஷயம் அல்ல. மறைப்பதால் எந்த நன்மையும் இல்லை. நோய் வந்தால் ஃபித்னா செய்வார்கள் என்று நீங்கள் நினைப்பது முற்றிலும் தவறாகும். எந்த ஃபித்னா வந்தாலும் அதற்கு மார்க்க அடிபடையில் பதில் இருக்கும் போது பித்னாக்களுக்குப் பயந்து மறைப்பது ஏற்புடையதாக இல்லை. மறைக்கவும் முடியாது.
நான் மருத்துவமனையில் சேர்க்கப்படும் போது அடுத்த நிமிடம் உளவுத்துறைக்கு தெரிந்து எதிரிகளின் இயக்கங்களுக்கும் உடனே தெரிந்து விடும். அவர்கள் வழியாக நம் நிர்வாகிகளுக்குத் தெரியவரும் போது அது ஜமாஅத்தைப் பாதிக்கும். மனிதனுக்கு நோய் வருவது இயல்பானது தான். அல்லாஹ் இதுவரை எந்தப் பெரிய நோயும் இல்லாமல் எனக்கு பேருதவி புரிந்துள்ளான். இதுதான் ஆச்சரியமானது. இப்போது நோய் வந்துள்ளது ஆச்சரியமானது அல்ல. ஏதோ கொலைக் குற்றத்தை மறைப்பது போல் நோயை நீங்கள் மறைப்பதாக நான் கருதுகிறேன்.
புற்றுநோய் என்பது ஆபத்தான நோய் என்றாலும் மருத்துவ சிகிச்சை பெரும்பாலும் பயனளிப்பதில்லை என்றாலும் அல்லாஹ்வின் அருளால் குணமாக வாய்ப்பு உள்ளது. எனவே இதை நிர்வாகிகளுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் சொல்வதால் பலருடைய துஆக்கள் எனக்குக் கிடைக்கும். அதை நீங்கள் தடுக்கத் தேவை இல்லை.
அன்புடன்
பி.ஜைனுல் ஆபிதீன்
10.10.2012
Source : http://www.satyamargam.com/
1 comment:
Almighty Allah is Hakkeem much much more most than doctor;he is only solution and extend his life longer Ameen Ameen Ya rabal Alameen.
Post a Comment