"என்னங்க இது சின்னபுள்ளத்தனமா இருக்கு?"
நண்பர் ஒருவர்என்னைப்பார்த்து கேட்ட கேள்விதாங்க இது. எதற்கு தெரியுமா?
என்னுடைய மொபைல்போனை வாங்கியவர், அதிலுள்ள வீடியோக்களைப் பார்த்துவிட்டுஆச்சரியமோ அல்லது அதிர்ச்சியிலோ(!) சொன்னவார்த்தைதான் அது.
என்னபுதிராயிருக்கா? அவர் சொன்னதை கேளுங்களேன்,
"என்னதான் புள்ளைங்க மேல பாசமாயிருந்தாலும்....அதுக்குன்னு இப்படியா சின்னப்பிள்ளைங்க மாதிரி....."
விஷயத்திற்குவருகிறேன், நண்பர் என் மொபைல் போனை வாங்கியதும் அதில் ஏதும் திரைப்பாடல்களையோ அல்லது படங்களையோ தேடிஇருக்கக்கூடும் என்று நினைக்கிறேன். இன்றைக்கு இது ஒரு சாதாரணவிஷயமாகத்தானிருக்கிறது ஆனால் நண்பருக்கு என் மொபைல் போனில் காணக்கிடைத்ததோ சிறுவர்களுக்கான நல்லொழுக்கம் பற்றிய 'அனிமேஷன்' படம் மற்றும் பாடல்கள். இது மேலோட்டமாக பார்க்கும்போது நண்பர் சொன்னது போலவே 'சிறுபிள்ளைத்தனமாக'த்தான் தோன்றும். ஆனால், நண்பர்களை விட அதிக உரிமையுடன் நம் மொபைல் போனைஆராய்பவர்கள் இல்லை இல்லை ஆள்பவர்கள் நமது பிள்ளைகள்தானே?
'சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும்' என்பார்கள். அதுபோல நம்மிடம் என்ன உள்ளீடு இருக்கிறதோஅவைதானே நம்மை பார்த்து வளரும் நமது பிள்ளைகளின் முன்பருவகாலத்தில் எதிரொலிக்கும். அவைதானே விதையாய் விழுந்துவிருட்சமாய் மாறும்.
முன்னொருகாலத்தில் (இன்று அப்படி சொல்ல வேண்டிய நிலை) சினிமா என்பது பொழுதுபோக்கிற்காகவும், திரைப்பாடல்களின் வார்த்தைகள் மனசாட்சி கொண்ட கவிஞர்களால் அதிகம்எழுதப்பட்டும், வசனங்களில் விஞ்சிநிற்கும் மொழிஆளுமை கையாளப்பட்டும், காட்சிகளில் பண்பாட்டின் அக்கறை போர்த்தப்பட்டும் வெளிவந்தது . இன்று நிலை எப்படியுள்ளது என்பதை விபரமாக எழுதவேண்டியதில்லை; நானறிவேன், நீங்களறிவீர்கள், நாடறியும் ஏன் நாளிதழ்களும் சாட்சிசொல்கின்றன.
எவையெல்லாம் நன்னெறிகள் என்று போதிக்கப்படுகிறதோ அவைகளுக்கு வேட்டு வைப்பவைகளாகத்தான் இன்றையபடங்கள், பாடல்கள் உள்ளது. காசுதான் கடவுளென்றும், ஓடிப்போய் கல்யாணம் செய்வது தவறில்லை மதுதான் சோகத்திற்கு மருந்து என்றும் திட்டமிட்டு புதுவிதிகள் புகுத்தப்படுகின்றன. இந்த முரண்பாடுகளை சிறுபிள்ளைகள் அறியாமலேயே பாடல்களாக மனப்பாடம் செய்கிறார்கள் பின்னாளில் பொருளறியும் போது நன்னெறிகளுக்கு முரண்பட்டு வாழ்கையில் பிறழ்ந்திருப்பார்கள். இல்லை பிறழச்செய்கிறார்கள். அநேக பெற்றோர்கள் தன் குழந்தை பாடும் இதுபோன்ற விஷமூட்டும் பாடல்களை ரசிப்பதோடு மட்டுமல்லாமல் நண்பர்கள் உறவினர்கள் முன்னிலையில் பாடச்செய்து மகிழ்கின்றனர். பகிரங்கமாக அங்கீகரிக்கின்றனர்.
பாடபுத்தகத்தின் நடுவே பாட்டு புத்தகத்தை மறைத்து வைத்திருந்து ஆசிரியரிடமோ அல்லது அப்பாவிடமோ மாட்டிக்கொண்டால் பெருங்குற்றம் புரிந்தவன் போல தடுமாறுவதும், அவர்களின் வசைப்பாட்டை வாங்கிக்கொள்வதுமான காலம் காலமாகிவிட்டது.
இன்று வன்முறை, ஆபாசம், தரக்குறைவான நகைச்சுவை, மது, புகை இவையெல்லாமே தவறில்லை என்றும் ஒப்புக்கொள்ளப்பட்ட குற்றங்கள் என்றும் சமூகத்தில் விதைக்கப்படுகிறது.
சமீபத்திய ஆய்வு ஒன்றில் 90 சதவீத திரைப்படங்களில் 68 சதவீத வீடியோ விளையாட்டில் 60 சதவீததொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மற்றும் 15 சதவீத இசைஆல்பங்களிலும் வன்முறை மற்றும் ஆபாசங்கள் தலைவிரித்து ஆடுகிறது எனகணிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற உள்ளீடுகனின் விளைவு எதிகாலசந்ததியினரை சமூக அக்கறையற்றவர்களாகவும் சமூகத்திற்கெதிராக குற்றம் புரிவோராகவும் மாற்றிவிடுகிறது என்றும் கண்டித்துள்ளனர்.
மேலைநாடுகளில் காலத்திற்கேற்ப திரைப்படங்கள், தொலைக்காட்சிநிகழ்ச்சிகள் போன்றவைகளுக்கு மதிப்பீடு போடப்படுகிறது. இது எந்தவயதினருக்கு பொருத்தமானது? சிறுவர்கள் மட்டும் காணக்கூடியதா? பெற்றோரின் வழிகாட்டுதலுடன் காணக்கூடியதா? என்று தரம்பிரித்து மதிப்பிடப்படுகிறது.
உதாரணத்திற்கு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி என்று வைத்துக்கொள்வோம்.அதில் இடம்பெறும் காட்சிகளில் ஆபாசம், வன்முறை, கொலை, மது, புகை மற்றும் போதைபோன்றவைகள் இடம்பெறாதிருக்குமாயின் அந்த நிகழ்ச்சிக்கு அல்லது படத்திற்கு "G" அதாவது General Audiences - குழந்தைகள் உட்பட அனைத்து தரப்பு பார்வையாளருக்கும் உகந்தது என்றுமதிப்பிடப்படுகிறது.
இதுபோல "PG" Parental Guidance Suggested பெற்றோர் அணுசரனையுடன் காண உகந்தது அல்லது பெற்றோர் பார்த்துவிட்டு இது பிள்ளைகளுக்கு பரவாயில்லை என்று பரிந்துரைக்கக்கூடியது.
அடுத்து "PG-13" - Parents Strongly Cautioned இப்படி ஒரு தரம். இது 13 வயது பூர்த்தியடையாதவர்கள் பார்க்க கண்டிப்பாக அனுமதியில்லை. இந்த தரமுத்திரை இடப்பட்ட படங்களில் ஆபாசம் ,வன்முறை, மது,புகை,போதை மற்றும் அருவருப்பான சொல்லாடல்கள் இருக்கும். (கிட்டத்தட்ட நம்மூர் 'குடும்ப' படமென்று சொல்லி வெளிவரும் படங்கள்போல - நமது தணிக்கைத்துறை தாராளமாய் அனுமதிக்கும் படங்கள்). இன்னும் R - Restricted என்றொரு மதிப்பீடு. இது 17 வயதுக்குட்பட்டவர்கள் கண்டிப்பாக பெற்றோர்
அல்லது பெரியோர்களுடன் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் மேலும் இந்த மதிப்பீடிட்ட படங்களை குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு காண்பிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தவும் செய்கிறார்கள்.
எல்லா அக்கிரமங்களும் அநியாயங்களும், தடித்தவார்த்தைப் பிரயோகங்களும் நிறைந்த படங்களுக்குNC -17 No one 17 and underAdmitted. அதாவது 18 வயதிற்கு கீழுள்ளோரை ஒருபோதும் அனுமதிக்கவே வேண்டாம் என்ற மதிப்பீடு.
நம்நாட்டில் சினிமா காலடி எடுத்துவைத்தது 1896ம் ஆண்டு. ஆனால் திரைப்படங்களுக்கான மதிப்பீட்டினை நிர்ணயிக்க சென்சார் போர்டு எனும் தணிக்கைத்துறை நிறுவப்பட்டது எப்போதுதெரியுமா?
நாடு சுதந்திரமடைந்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு 1952ம் ஆண்டு தான்.
அன்று நிர்ணயிக்கப்பட்டமதிப்பீடு இவ்வாறு உள்ளது:-
U - Unrestricted - 4 வயது குழந்தை முதல் அனைவரும் எந்த தடையுமின்றி பார்க்கலாம்;
A - Adults only - 18 வயது மற்றும் மேற்பட்டோர் பார்க்கலாம் (இது மேலைநாடுகளில் உள்ள R க்கு நிகரானதாம்!)
அதன்பின் 30 ஆண்டுகள் கழித்து 1983ம் ஆண்டு,
UA - Under Adult Guidance - 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் அல்லது பெரியோர்களின் துணையுடன் பார்க்கலாம்;
(இதுமேலைநாடுகளில் உள்ள PG -13க்கு நிகரானதாம்!)
S -Specialised Audience - சில சிறப்பு பார்வையாளர்கள் அதாவது மருத்துவர்கள் போன்ற நிபுணர்களுக்கான பிரத்யேகமான படங்கள் என சில சட்டதிருத்தங்கள் செய்யப்பட்டதோடு நின்றுவிட்டது. சரி, இவையெல்லாம் மேற்சொன்ன அக்கறையுடன் தயாரிக்கப்பட்ட அந்தக்காலத் திரைப்படங்களுக்கு வேண்டுமானால் பொருந்தியிருக்கலாம்.
ஆனால் அதற்கு பிறகு எந்த சமூக அக்கறையுமின்றி இலாப நோக்கில் தயாரிக்கப்படும் இன்றைய திரைப்படங்களுக்கு முப்பது ஆண்டுகளுக்குமுன் நிர்ணயித்த அதே மதிப்பீட்டு அளவுகோல்களும், திரைக்கு வந்து சில மாதங்களே ஆன பின் சின்னத்திரை வழியாக வீட்டிற்குள்நுழைந்து அனைத்து வயதினரின் முன்பாக வரும்போது எந்த மதிப்பீடு கண்காணிக்கிறது என்பதும் இன்றளவும் கேள்விக்குறியே.
மிகவேகமாக மக்களைச் சென்றடையும் ஊடகத்தினை சரியான நெறிமுறைகளுக்கு உட்படுத்தத்தவறியாதால் பெருகும் குற்றங்கள்தான் இமயம் தொட்டிருக்கிறது.
”அனைத்து சமூககுற்றங்களுக்கும் காரணம் சினிமா”,என மதுரைஐகோர்ட் கிளையில் நடந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி வேதனை தெரிவித்தார். -இது 2010ம் ஆண்டு செய்தி.
இந்திய உள்துறை அமைச்சகத்தின் தேசிய குற்ற ஆவணக் காப்பக மையம்,1953ம் ஆண்டில் நாட்டில் பதிவான குற்றங்கள் எண்ணிக்கையையும் அதேபோல் 2011ம் ஆண்டில் பதிவான குற்றங்களின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டு வளர்ச்சியினை(!) பட்டியலிட்டுத் தரும் விகிதாச்சாரமோ கதிகலங்க வைக்கிறது.
கொலைக்குற்றம் - 250%,
கற்பழிப்பு - 873%,
ஆட்கடத்தல் - 749%,
வழிப்பறி - 194% மற்றும்
சமூக வன்முறை - 234%
ஆக மொத்த குற்றங்களின் வளர்ச்சி 286% வளர்ந்திருப்பதாகபுள்ளிவிபரம் அலறுகிறது.
விழித்துகொண்டு வழிசொல்ல வேண்டிய தணிக்கைத்துறை உறங்கிக்கொண்டிருக்கிறதே.....
விதியென்று சொல்லிக்கொண்டிராமல் நாம் இனி செய்யவேண்டியதென்ன?
விபரீதங்களை விளையாட்டாய் பார்க்கிறோமே..... விளங்கி அவற்றிற்கு விலங்கிடுவது எப்போது??
விருட்சங்களுக்கான விதை இங்கே; விதைப்பவர் எங்கே???
by Rafeeq Sulaiman
No comments:
Post a Comment