Sunday, May 19, 2013

அடீ

இந்தக் கவிதையின் சிறப்பு என்னவென்றால் ஒரே சொல் இரண்டு பொருளில் வரும். மடி - மடி என்ற இரண்டு சொற்களும் வேறு வேறு பொருள் உடையவை. அதே சமயம் அத்தனை வார்த்தைகளும் ஒத்த இசையுடைய வார்த்தைகள். இதை இயைபுத் தொடை என்று யாப்பிலக்கணம் கூறும்.


*

மன்னித்தால் நீயென் மடி
மறுப்பதனால் சேர்ந்தே மடி

அனுதினமும் அடிமேல் அடி
அமைதி என்றால் ஆறே அடி

உள்ளத்தின் உயர்வின் படி
உண்மையான உறவைப் படி

அன்பகலா செல்லக் கடி
அதில் மாயை ஏதுக் கடி

சண்டையிட்டால் சிதையும் குடி
சகிப்பினையே மருந்தாய்க் குடி

குயில் கூவ வேண்டாம் தடி
குடியேறும் மரணத் தடி


வெறுப்புகளை விரைந்தே முடி
வாழ்நாளோ உதிரும் முடி

உரல் பொறுக்கும் உலக்கை இடி
உயிர் நறுக்கும் தனிமை இடி

நரகத்தைத் தள்ளிப் பிடி
நம்பிக்கையே வாழ்வின் பிடி

ஏந்திக்கொள் முல்லைக் கொடி
ஏறவேண்டாம் இரங்கல் கொடி


அன்புடன் புகாரி
Source : http://anbudanbuhari.blogspot.in/

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails