இஸ்லாம் எளிய தத்துவங்களையே முன் வைக்கிறது. அவை பின்பற்ற இலகுவானவை .. அவைகளில் முக்கியமாக கூறப்படுவது மூன்று... இந்த மூன்றுக்குள் மனிதனின் மூச்சே அடங்கி இருக்கிறது. அவை.....
இறையை வணங்கி வாழ்வது
எல்லோருடனும் இணங்கி வாழ்வது
இல்லாதோருக்கு வழங்கி வாழ்வது
முதலில் ...படைத்த இறைவனுக்கு அவனே இறைவன் என்று கட்டியம் கூறவும் அவன் தருகின்ற அளப்பரிய உதவிகளுக்கு நன்றி செலுத்தவும் அவன் கருணையை எதிர்பார்த்தும் இறைவனை வணங்கித்தான் வாழ வேண்டும். இறையை வணங்காத மனிதனுக்கு மனிதன் என்ற மதிப்பு இல்லை. அடுத்து .....ஜாதி மத பேதமின்றி மக்களிடம் நேசமாக பழகி வாழ வேண்டும். நிற வேறுபாடு காட்டி இன மாறுபாடு காட்டி மனிதர்களில் உயர்வு தாழ்வுக்கு இடம் கொடுக்காமல் வாழ வேண்டும் என்பதே இஸ்லாத்தின் பிரகடனம். மூன்றாவதாக வறுமை வயப்பட்டோருக்கு வழங்கி வாழ வேண்டும் என்பது இஸ்லாத்தின் கட்டாயக் கடமை. செல்வத்தையும் ஏழ்மையையும் இறைவனே படைத்தான். மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ வேண்டும் என்பதற்காகவே அவன் சிலருக்கு வளத்தையும் இன்னும் சிலருக்கு வறுமையையும் வழங்கி இருக்கின்றான். மனித சமுதாயமே உதவி ... ஒத்தசைகளின் இழைகளால்தான் நெய்யப்பட்டிருக்கிறது.முந்திய இரு விஷயங்களிலும் உடன்படும் பலர் பிறருக்கு வழங்கி இன்பம் காணுவதில் மட்டும் உடன்படுவதில்லை.
"மற்றவர்களின் மீதுஅன்போ இரக்கமோ ஏற்படாதவன் மீது இறைவனின் அன்போ இரக்கமோ ஏற்படுவதேயில்லை " என்பது இறைத்தூதரின் எச்சரிக்கை. பிறரிடம் எதையும் எதிர்பாராமல் யாராலும் வாழ முடியாது. அப்படி வாழ்ந்தால் அதற்குப் பெயர் வாழ்கை இல்லை. குழந்தை தாயிடம் பாசத்தையும் தந்தையிடம் பாதுகாப்பையும் எதிர்பார்க்கிறது. வளர்ந்தபோது ஆசிரியனிடம் கல்வியை சக மாணவர்களிடம் இணக்கத்தை எதிர்பார்க்கிறது. அவன் இளைஞனாகி விட்டால் மனைவியிடம் காதலை எதிர்பார்க்கிறான். தகுதி உள்ளவர்களிடம் வேலையை அதற்கான ஊதியத்தை எதிர்பார்க்கிறான். நல்ல நண்பர்களின் நட்பை எதிர்பார்க்கிறான். தன் குழந்தைகளிடம் ஒழுக்கத்தை பண்பை முன்னேற்றத்தை எதிர்பார்க்கிறான். பல நிலைகளில் பலருடைய ஆதரவை எதிர்பார்க்கிறான். அறிவிருந்தால் அதை சமுதாயத்திற்கு கொடுத்து சமுதாய முன்னேற்றத்தை எதிர்பார்க்கிறான்.நோய் வந்தால் மருத்துவரின் சிகிச்சையை எதிர்பார்க்கிறான். பணமிருந்தால் அதை வறியவர்களுக்குக் கொடுத்து அவர்கள் இன்புற்று வாழவேண்டும் என்று எதிர்பார்க்கிறான். தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களுக்கு இறைவனிடம் மன்னிப்பை எதிர்பார்க்கிறான்.முதுமையில் துன்பமின்றி இறந்துபோக இறைக் கருணையை எதிர்பார்க்கிறான். இறந்து போனாலும் அவனது உடலை நல்லடக்கம் செய்ய நாலு பேர் வேண்டும். இன்னும் ஏராளமான எதிர்பார்ப்புகளோடும் அவை நிறைவேறும் சந்தோஷத்திலும் மனம் நிறைந்து வாழ்பவனே மனிதன்.
" நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள் " என்பது இறை வாக்கும் இறைத் தூதர் வாக்குமாக இருக்கிறது. நாம் நம்முடைய சகோதரர்களின் இன்ப துன்பங்களில் பங்கேற்று இறைவன் விரும்புகின்ற நல்ல மனிதர்களாக வாழ முயற்சிப்போம்.... இன்ஷா அல்லாஹ்
அபூஹாஷிமா வாவர்
No comments:
Post a Comment