Saturday, June 1, 2013

“கலைமாமணி” கவிஞர் நாகூர் சலீம் காலமானார்.

தமிழக அரசின் “கலைமாமணி” விருது பெற்ற, பிரபல இஸ்லாமியப் பாடலாசிரியர் கவிஞர் நாகூர் சலீம் கடந்த சில தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து, 01-06-2013 அன்று இறைவனடி சேர்ந்தார். இன்று மாலை 4.30  மணியளவில் அவரது உடல் நாகூரில் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது.

வண்ணக் களஞ்சியப் புலவர்களின் பரம்பரையில் பிறந்த கவிஞர் நாகூர் சலீமுக்கு வயது 77. இவர் எழுதிய 7,500க்கும் மேற்பட்ட இஸ்லாமியப் பாடல்கள், நாகூர் ஈ.எம்.ஹனீபா உட்பட அனைத்து இஸ்லாமியப் பாடகர்களும் பாடி பிரசித்திப் பெற்றவை.

“இவருக்கு திரைப்பட உலகில் தக்க வாய்ப்பு கிட்டுமானால், இன்னொரு கண்ணதாசனை நாம் கண்டு களிக்கலாம்; உணர்ச்சி மிக்க பாடல்களில் நம் உள்ளம் குளிக்கலாம்” என்று கவிஞர் மு. மேத்தாவின் அங்கீகாரம் பெற்றவர். கவிஞர் சலீம் எழுதிய “காய்ந்து சிவந்தது சூரியகாந்தி” என்ற பாடலைப் பாராட்டி, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அமரர் எம்.ஜீ.ஆர் ரூபாய் பத்தாயிரம் பரிசு வழங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமியப் பாடல்கள் மட்டுமின்றி, திரைப்படப் பாடல்கள், கதை, வசனம், நாடகங்கள், கவிதைகள் படைத்த கவிஞர் சலீம், நாகூரில் ஒரு கலைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். முதல் இஸ்லாமியப் பெண்மணி எழுத்தாளர் சித்தி ஜுனைதா பேகம், திரைப்பட வசனகர்த்தா தூயவன் ஆகியோரின் சகோதரர் இவர்.

எழுத்தாளர் முனைவர் நாகூர் ரூமி, ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை)யின் தலைவர் ஆடிட்டர் முஹிய்யத்தீன் அப்துல் காதர், ரியாத் தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் பாடகர் ஜாஃபர் சாதிக் ஆகியோரின் தாய் மாமா இவர் என்பதும் குறிக்கத்தக்கது.

தகவல் : முதுவை ஹிதாயத்
Source : http://www.inneram.com/

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails