Wednesday, June 5, 2013

மிஹ்ராஜ்


மிஹ்ராஜ்

*************

அகத்தில் ஆண்டவனை

வழுத்தி வாழ்ந்த வள்ளல் நபிகளுக்கு

அர்ஷின் நாயகன்

அழைப்பொன்றை அனுப்பி வைத்தான் !பாவிகளிடமும் ஈனர்களிடமும்

அவதிப்பட்ட அண்ணலுக்கு

அன்பிறைவன் அனுப்பிவைத்த

அர்த்தமுள்ள அழைப்பதனை

அமரர்கோன் ஜிப்ரீல் கொண்டு வந்தார் !ரஜப் மாதத்தின் இருபத்தேழாம் இரவில்

ஊருறங்கும் நேரத்தில்

சொர்க்கத்தின் வாகனம் புராக்

அண்ணல் வீட்டு வாசலில் வந்து நின்றது !காபாவின் சுவரோரம்

அண்ணலின் இதயம்

அமரர்களால் பக்குவப்படுத்தப்பட்டது !

உலகின் ..

முதல் இருதய அறுவை சிகிச்சை

அண்ணலிடம்தான் ஆரம்பமானது !பக்குவப்பட்ட இதயத்தோடு

இறைவனைத்தேடி

இனிய பயணத்தை

அண்ணல் ஆரம்பம் செய்தார் !மக்காவில் புறப்பட்ட பராக்

பைத்துல் முகத்தஸ் வந்தது !

அங்கிருந்து ஜிப்ரீல் முன்செல்ல ... புராக்

வாகனம் வானமேறி சென்றது !மண்ணகம் வாழ்த்துக்களோடு கையசைக்க

விண்ணகம் ஏறிவந்த வள்ளல் நபி

வருகின்ற வழியெல்லாம்

வாழ்ந்து மறைந்த

நபிமாரைக் கண்டார்கள் !

நல்வாழ்த்து பெற்றார்கள் !

கடைசி விழுது

வேர்களையும்

கண்டு மகிழ்வதைப்போல

முந்திய நபிமாரையெல்லாம் கண்டு

முகமன் கூறி அகமனம் களித்தார்கள் !ஏக இறைவனின்

எண்ணத்தில் உருவான

விண்ணகத்தின் பேரெழிலை

பெருமானார் பார்த்தார்கள்

பரவசப்பட்டார்கள் !அண்ணலின் உள்ளங்கையில்

அகிலம் ஒன்று சேர்ந்தது !

முகவுரையிலிருந்து முடிவுரை வரைக்கும்

உலகம்

அண்ணலிடம் அடக்கமானது !

வள்ளலின் இதயத்தில்

ஒன்று விடாமல் பதித்து வைத்தது !சொக்க வைக்கும் சொர்க்கமும்

நடுங்க வைக்கும் நரகமும்

நன்மை தீமைகளின் பரிசுகளோடு

மனிதர்களை வரவேற்கக் காத்திருப்பதை

அண்ணல் கண்டார்கள் !ஆதியும் அந்தமுமில்லா அற்புதனின்

அதிசயப் படைப்புகளில்

ஆன்மீக ஞானத்தின்

முழுப்படத்தையும்

அங்கே பயின்றார்கள் !அற்புதங்கள் அதிசயங்கள் அனைத்துமே

ஏக இறைவன்

" ஆகுக " என்றால் ஆகி விடும் - அந்த

ஆனந்த பரவசத்தில் திளைத்தார்கள் !ஆக்கவும் அழிக்கவும்

ஆற்றல் பெற்றவன்

அல்லாஹ் ஒருவனே எனும்

ஒப்பற்ற தத்துவத்தை அண்ணல்

அகத்தாலும் புறத்தாலும் அறிந்தார்கள் !அல்லாஹ்வின் அன்பளிப்பாய்

ஐவேளைத் தொழுகை

அடியவர்க்கு அருளப்பட்டது !அல்லாஹ் வாழ்த்தினான்

அமரர்கள் வாழ்த்தினார்கள்

அகிலத்தின் அனைத்து ஜீவராசிகளும்

மாநபி வாழ்வுக்கு

வாழ்த்துக்கள் கூறின !சொர்க்கம் ...

அண்ணலின் வருகையால் பரவசப்பட்டது !

தான் படைக்கப்பட்ட பேருண்மையை

புரிந்து கொண்டது !நல்லார் நாயகம் முகம் காண

நரகம் நாணப்பட்டது !அத்தஹியாத் எனும்

அற்புதம் ஒன்றை

அண்ணலுக்குப் பரிசளித்து

படைத்தவன் மகிழ்ந்தான் !வானத்தையும் வையத்தையும்

படைத்து வைத்த

பெருங்கருணைப் பெரியோனைப் புகழ்ந்தபடி

பெருமானார் ...

தங்கள் இல்லம் புகுந்தார்கள் !

படுக்கையில்

தாங்கள் விட்டுச் சென்ற

உடல் சூடு ஆறாத அற்புதத்தை

அண்ணல் அறிந்தார்கள் !அளவிட முடியா

ஆற்றலின் அதிபதியாய்

அரசாளும் வல்லோனை

மறுபடி மறுபடி துதித்தார்கள் !ஆயிரத்தி நானூறு

ஆண்டுகளுக்கு முன்

அன்றைய

மனித அறிவுக்கு ஆட்படாத

விண்வெளிப்பயணத்தை

வெற்றியுடன் முடித்து வந்த

பெருமானார்

இறைக் கருணையில் மிதந்தார்கள் !

இதுவே மிஹ்ராஜ் என

திருவாய் மலர்ந்தார்கள் !

**************************************

மிஹ்ராஜும் ஈமானும்

*****************************

மிஹ்ராஜ் சென்று வந்த

விந்தை நிகழ்வை

விடிந்தும் விடியாதக் காலைப்பொழுதில்

குறைஷியர் காதில்

கோமான் நபிகள் உரைத்தார்கள் !ஆடையணியாத ஊரில்

ஆடை கட்டிய அழகாய் அண்ணல் திகழ்ந்தார்கள் !

அரபிகள் அதை

அருவருப்பாய் உணர்ந்தார்கள் !ஆகாரத்தின் சுவையறிந்த

அரபு மக்கள்

ஆன்மீகத்தின் அகரத்தைக் கூட

அறிய முற்படவில்லை ! அங்கே -

அண்ணலின் கூற்று எடுபடவில்லை !குறைஷியர் குரைத்தார்கள்

குறு குறுவென முறைத்தார்கள் !

குள்ள நரியாய் சிலபேர்

குதறிப்போடவும் நினைத்தார்கள் !ஆனால்... அண்ணலை பார்க்கும் முன்பே

அபூபக்கர் சொன்னார் ...

" அண்ணலார் அப்படிச் சொல்லியிருந்தால்

அது உண்மையைத் தவிர வேறில்லை !"அண்ணலின் இதயம் மலர்ந்தது !

அப்துல் காபா அன்று

மகளை மணமுடித்துக் கொடுத்து

அபூபக்கர் ஆனார் ! இன்று ..

அண்ணலின் வாய்மொழியை

வழிமொழிந்து " சித்தீக்"கும் ஆனார் !தான் அறியாதவற்றை

தன் அறிவுக்கு மறைவானவற்றை

இறைவன் செயலாய் அங்கீகரித்து

ஏற்றுக் கொள்வதே ஈமான் !ஈமான் எனும் நம்பிக்கைச் சாறு

ஒட்டு மொத்தமாய்

அபூபக்கர் இதயத்தில் இறங்கியது !இஸ்லாத்தின் உதயத்தை

இதயத்தில் தாங்கிய சீமான்

ஈமானின்

ஒட்டு மொத்தத் தளபதியானார் !

மிஹ்ராஜ் அதிசயத்தை

தட்டில் வைக்காமலேயே

இதயத்தில் வைத்த பெருந்தகையானார் !அதனால்தான் ...

அபூபக்கரின் ஈமான் இருக்கும் தட்டு

எப்போதும்

தாழ்ந்தே இருக்கிறது !

அகில உலகும் இவரை

வாழ்த்திக் கொண்டே வாழ்கிறது !

**************************************** 2002 ல் அபூஹாஷிமாவாவர் எழுதிய " அண்ணலே யா ரஸூலல்லாஹ் " என்ற நபிகளாரின் வரலாற்றுக் காவியத்திலிருந்து !

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails