அங்கு எனது நீண்டநாள் நண்பர் ஒருவர் தனது 4 ஆம் வகுப்பு படிக்கும் பேத்தியுடன் நின்று பஃபேயில் உணவருந்திக்கொண்டு இருந்தார். பல நாட்களுக்குப் பிறகு அவரைச் சந்தித்த மகிழ்ச்சியில் அவர் அருகில் சென்று நலம் விசாரிக்கத் துவங்கினேன்.
அருகில் இருந்த பேத்தியிடம் "இவரு அப்துல்லா அங்கிள். தாத்தாவோட ஃபிரண்டு." என்று அவளிடம் அறிமுகம் செய்து வைத்தார். அவள் படிப்பு உள்ளிட்ட விசயங்களை அவளிடம் விசாரித்துவிட்டு அவரிடம் , "நீங்க மட்டும் வந்து இருக்கீங்க? அண்ணி வரலையாண்ணா?" என்று கேட்டேன்.
அருகில் இருந்த பேத்தி அவரிடம் இவர் அண்ணின்னு யாரைச் சொல்றார்? என்று கேட்டாள். அவர் 'உங்க பாட்டியைச் சொல்றார்டா குட்டி! இவர் எப்பவும் என்னைய அண்ணான்னும்,பாட்டியை அண்ணின்னும்தான் கூப்பிடுவார்!' என்று மகிழ்வோடும்,பெருமையோடும் சொன்னார்.
பட்டென்று அந்த சிறுபெண் "பரவாயில்லையே!! முஸ்லீம்ஸ்கெல்லாம் கூட பண்பு இருக்கே!!" என்றாள். அவர் உடனடியாக தனது பேத்தியைத் திட்டத் துவங்கிவிட்டார்.
நான் அவரைப் பொறுமைப்படுத்தி அவளிடம் "முஸ்லீம்களுக்கு பண்பு இருக்காதுன்னு யாருடா உங்கிட்ட சொன்னது?" என்று சிரித்தபடி கேட்டேன்.
அவளுக்கு அதற்கு பதில் சொல்லத் தெரியவில்லை. நண்பரின் அப்செட் மூடை மாற்றும் விதமாக நானும் அதோடு அந்தப் பேச்சை நிறுத்திவிட்டு வேறு பேச்சுகளுக்கு மாறிவிட்டேன்.
4 வது படிக்கும் சிறுமி எனும்போது 9 அல்லது 10 வயதுதான் இருக்கும். இந்த வயதில் பண்பு என்ற வார்த்தையையும், அதன் அர்தத்தையும் பள்ளியோ,வீடோ போதித்து இருக்கும். ஆனால் இஸ்லாமியர்களுக்கு பண்பு இருக்காது என்ற நஞ்சை இந்த வயதில் அவளுக்கு போதித்தது யார்??
பொதுவாக நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் எனக்கு துணிச்சல்காரன் என்ற பெயர் உண்டு. மிகவும் பயப்படுகிறேன் இந்த தேசம் போகும் திசை கண்டு.
============================
No comments:
Post a Comment