Sunday, November 17, 2013

பள்ளிவாசல்: ஒரு பார்வை

முஸ்லிம்கள் இறைவனை வழிபடும் இடத்தை பள்ளிவாசல் என்று அழைக்கிறார்கள்.

இப்பெயர் தொடர்பான ஒரு பார்வை:

பள்ளி

சங்க காலத்தில் அரசர்கள் உயிர் துறந்த பின் புதைத்த இடங்களைப் பள்ளி என்று குறிப்பிடும் வழக்கம் இருந்துள்ளது. பள்ளி என்ற சொல்லானது துறவிகள் தங்குவதற்கும், உறங்குவதற்கும் அமைக்கப்பட்ட இடங்களுக்கும் பள்ளி என்றே தமிழ் பிராமி கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இவை தவிர முனிவர்கள் ஆசிரமம், பௌத்த கோயில்கள், அரண்மனை, படுக்கை, பள்ளிக்கூடம் போன்றவையும் பள்ளி என்றே அழைக்கப்படுகிறது.

ஆதியில் சமண, பௌத்த கோயில்களே பள்ளி எனப்பட்டன. அவைகள் சைவ, வைணவக் கோயில்களாக மாறிய பின்பும் அதே பெயர்களில் வழங்கப்பட்டு வருகின்றன. திருச்சிராப்பள்ளி, அகத்தியான்பள்ளி, திருக்காட்டுப்பள்ளி போன்ற ஊர்கள் இன்றளவும் அவ்வாறே அழைக்கப்பட்டு வருகிறது. முஸ்லீம்கள் தங்கள் தொழுகைக்கான இடத்தை பள்ளிவாசல் என்று அழைக்கின்றனர். பெரும்பாலான ஊர்களில் பள்ளிவாசல் என்ற தெருவே உள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் 'பள்ளிவாசல்' என்ற கிராமம் உள்ளது.


இந்திய வரலாற்றில் பள்ளிவாசல்

இந்திய வரலாற்றில் கி.பி.எட்டாம் நூற்றாண்டில் கொடுங்கல்லூரில் சேரமான் பெருமாள் உதவியுடன் கட்டப்பட்ட சேரமான் பள்ளி தான் முதல் தொழுகை பள்ளிவாசல். தமிழ்நாட்டில் முதல் தொழுகை பள்ளிவாசல் காயல்பட்டினத்தில் கோசுமறை என்ற இடத்தில் கட்டப்பட்டு புதைந்து போனது. தேனி மாவட்டத்தில் பழமையான பள்ளிவாசல் கம்பம் வாவேர் பள்ளிவாசல். இன்றும் அப்பள்ளிவாசலின் நுழைவு வாயிலில் 1880 ஆம் ஆண்டு கட்டப்பட்ட கல்லறை ஒன்று உள்ளது.

அரபு மொழியில் 'மஸ்ஜிது' என்று அழைக்கப்படும் இறை இல்லங்களை தமிழ் மொழியில் 'பள்ளிவாசல்' என்று அழைக்கிறார்கள். ஆனால் 'மஸ்ஜிது' என்பதற்கு பள்ளிவாசல் என்ற நேரடிப் பொருள் இல்லை. மஸ்ஜிது என்றால் தலைவணங்கும் இடம் என்றே பொருள். தமிழ்நாட்டில் வாழ்ந்த சமணர்கள் தங்களது வழிபாட்டு தலங்களைப் 'பள்ளிகள்' என்று அழைத்தனர். தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரம்ப கால கட்டத்தில் கட்டப்பட்ட பள்ளிகள் 'மாலிக் தீனார் பள்ளிகள்' என்றே அழைக்கப்பட்டது. தேங்காய்பட்டினம், குளச்சல், திருவிதாங்கோடு, கோட்டாறு, குளச்சல் ஆகிய இடங்களில் இன்றும் இப்பள்ளிகள் உள்ளன.

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஹைதர் அலியின் ஆட்சி காலத்தில் திண்டுக்கல், பெரியகுளம், உத்தமபாளையம் போன்ற இடங்களில் அரசின் உதவியுடன் பள்ளிவாசல்கள் கட்டப்பட்டன. இவ்வாறு அரசின் மானியத்தால் கட்டப்பட்ட பள்ளிவாசல்கள் முகமது நைனார், நைனார் முகமது, நைனார் ஷா என்று அழைக்கப்பட்டது. தேனி மாவட்டம் க.புதுப்பட்டியில் காட்டு நைனார் என்ற பள்ளிவாசலும், கும்பக்கரை அருவி செல்கின்ற வழியில் காட்டு நைனார் தர்ஹாவும் இன்றளவும் உள்ளது.

இதே போல முஸ்லிம்கள் வசூல் செய்து சொந்த முயற்சியில் கட்டப்பட்ட பள்ளிவாசல்கள் 'முகையதீன் ஆண்டவர் பள்ளிவாசல்' என்று அழைக்கப்படுகிறது. கம்பத்தில் இருந்து கம்பம் மெட்டு செல்கின்ற வழியில் 'முகையதீன் ஆண்டவர் பள்ளிவாசல்' உள்ளது.

மினார்


தொலை தூரங்களிலிருந்து வருபவர்களுக்கு பள்ளிவாசலை அடையாளம் காட்டும் சின்னமாக மினராக்கள் உள்ளது. எகிப்து நாட்டில் உள்ள பஸ்தாத் என்ற நகரில் ஹஜ்ரத் அமர் பின் ஆஸ் அவர்களால் மினராக்கள் இல்லாமல் கட்டப்பட்ட பள்ளிவாசலில் ஹஜ்ரத் முஆவியா (உமைய்யா வம்சத்து முதல் கலீபா)வின் கவர்னர் நான்கு மினராக்களை கட்டினார். இப்பள்ளியில் தான் இஸ்லாமிய வரலாற்றில் முதன் முதலாக மினாரா கட்டப்பட்டது. உமைய்யா வம்சத்து கலீபாக்களே பள்ளிவாசல்களில் மினராக்களை அறிமுகப்படுத்;தினார்கள். நான்கு மினராக்கள் கட்டும் முறை எகிப்து நாட்டிலிருந்தும், ஒரு மினரா கட்டும் முறை ஈராக் நாட்டிலிருந்தும் வந்தவையாகும் ராவுத்தர்கள் வசிக்கும் பகுதிகளில் கட்டப்பட்ட பள்ளிகளில் குதிரை குளம்பு வடிவத்தில் மினராக்கள் அமைக்கப்பட்டிருக்கும்.

ஆதார நூல்கள்:

    மறைக்கப்பட்;ட வரலாறும். மறுக்கப்படும் உண்மைகளும், அனிஸ்தீன், அகமது நிஸ்மா பதிப்பகம், தேவதானப்பட்டி.
    இஸ்லாமிய வரலாற்றில் பள்ளிவாசல், பள்ளிமின்னா பதிப்பம், காஜாமைதீன், உத்தமபாளையம்.
    தொல்லியல் சுவடுகள், பேராசிரியர் டெக்லா, சென்னை

படங்கள்:

    இரண்டு மினார்கள் கொண்ட பள்ளிவாசல்
    குதிரை வடிவ குளம்பு

கட்டுரையாளர்: வைகைஅனிஷ் (செல்: 9715-795795)
Source : http://www.inneram.com/

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails