அரபுலகத்தின் ஆடம்பர சுகபோக வாழ்வும்
ஆசியக் கண்டத்தின் பல்சமய கூட்டுவாழ்வும்
மேற்கின் நவநாகரீக நுகர்வு கலாச்சாரத்தினூடே தம் அடையாளங்களை தக்கவைத்துக் கொள்ள முயலும் போராட வாழ்வும் பரஸ்பர ஒற்றுமையையும் பிற மதத்தினரை அணுகும் ஒத்த வழிமுறையினையும் நல்காமலேயே போய்விட்டது.
அரபுலகின் கொள்கை மற்றும் வஹ்ஹாபிய/அமெரிக்க அனுசரிப்பு/உழைப்பற்ற சுகபோகம் மற்றும் இஸ்லாமிய குடைக்குள் ஏனைய உலக முஸ்லீம்களை ஐக்கியப்படுத்தாமல் அரபுக்குடையை மட்டும் தூக்கிப்பிடிக்கும் குறுகிய மனோபாவம் போன்றவற்றிற்கு ஒட்டுமொத்த உலக முஸ்லிம் சமூகமும் பதில்சொல்ல வேண்டிய நெருக்கடியை உண்டாக்கிவிட்டது.
ஆனால்,
இறையருளால் இந்திய சமூகத்தில் இறைநேசர்கள் அவ்விதமான அரவணைப்பின் ஆற்றலை உணர்ந்து அரவணைப்பதன் மூலமும் இறையாற்றலின் அண்மைபெற்றவர்களென்பதல் பிற மதத்தினரின் பிரச்சினைகளை உள்ளன்போடு அணுகி ஆதரித்து நபிகளாரின் அறைகூவலை முன்னெடுத்துச் சென்றனர்.அந்த முன்னெடுப்பின் விளைவாகவே இன்று இறைநேசர்களது அடக்கஸ்தலங்களில் பொங்கிவழியும் பிற மதத்தினருடைய கூட்டத்தைப் பார்க்கமுடிகிறது.
அவர்கள் சகல சமுதாயத்தினரையும் பிணைக்கும் கண்ணியாக வாழ்ந்ததை அவர்களது மறைவிற்குப்பிறகும் நாம் கண்டுகொண்டிருக்கிறோம். நபிகளாரின் உன்னத வாழ்வின் உதாரணங்களாக இறைநேசர்கள் மட்டுமே வாழ்ந்திருக்கிறார்கள்.அவர்கள் இந்த மார்க்கத்தை போதித்தும் உபதேசித்தும் பரப்பவில்லை.வாழ்ந்து பரப்பினார்கள்.
நாமோ வாய்கிழியப் பேசுகிறோம்,
செயலே இல்லாத சிந்தனை என்பது உண்மையில் மரணமே என்றார்கள் அல்லாமா இக்பால்
அவர்கள்.
கோத்திரம் குலமென்று பல்வேறு இனக்குழுக்களாகச் சிதறிக்கிடத அரபுச்சமூகத்தை இஸ்லாம் என்னும் ஒற்றைக்குடையின் கீழ் ஒன்றிணைத்தது, இந்திய தேசம் இன்னும் சாதிய மோதல்களால் சிதைவுண்டு கிடக்கிறதென்றறிக.
பெண்சுசுக்கொலையை நபிகளார் அறவே ஒழித்தார்கள்,
இன்னும்கூட நம்நாட்டில் அச்சம்பவங்கள் நிகழ்ந்துகொண்டுதான் உள்ளன.
"ஸன் ஆனிலிருந்து ஹழரமெளத் வரையில் ஒருபெண் தனியாக வருவாள்,
அவள் தன் ஆடுகளைக்குறித்து ஓநாய்களுக்காக பயப்படுவாளேயன்றி வேறெதையும் குறித்தும் பயப்படமாட்டாள்" என்கிற முன்னறிவிப்பின் மூலம் ஆழமான தாக்கத்தை உருவாக்கி கொலை கொள்ளைகளற்ற நாகரீக சமூகத்தைச் சமைத்தார்கள். அந்த வாக்கையே காந்திஜி இந்தியாவிற்கு உதாரணமாகக் கூறினார்....
///ஒரு பெண் தனிமையில் நகைகளணிந்து நள்ளிரவில் தைரியமாக பயணிக்கும் நாள்தான் இந்தியாவிற்கு உண்மையான சுதந்திரநாள்//
முதன்முதலாக நாட்டைக் காப்பாற்றுவதற்காக ராணுவம் என்கிற அமைப்பு நபிகளாரின் வழிகாட்டுதலின்பேரில் சையதினா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களால் உருவாக்கப்பட்டது.
துணைநகரங்கள் அமைப்பதன் மூலம் நிர்வாகச் செயல்பாடுகளுக்கு மக்களின் வழக்கமான வாழ்க்கைமுறை பாதிக்காமல் இருக்க வழிவகை செய்யப்பட்டது.
நில அளவை மற்றும் பாஸ்போர்ட்,விசா போன்ற வரையறைகள் உருவாக்கப்பட்டது,
இவையும் சையதினா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக்காலத்தில்தான்.
இன்னும் எக்கச்சக்கமான உதாரணங்கள் சொல்லமுடியும்.
#என் கவலையும் கவனமும் வருத்தமும் நாம் நம்முடைய பங்களிப்பை நல்கினோமா என்பது குறித்தது மட்டும்தான்
No comments:
Post a Comment