Sunday, October 25, 2015

பார்க்க தெரிந்தால் பாதை தெரியும், பார்த்து நடந்தால் பயணம் தொடரும் !

நிர்பந்தங்கள் யாருக்கில்லை? பிறந்து விட்ட செயலே நாம் விரும்பி என்றில்லாத போது அதுவே வாழும் நிர்பந்தமாகிப் போகையில், வாழ்வில் நடப்பது எல்லாமும் நிர்பந்தம் என்று பொதுவில் சொல்லி வைப்பது கூட ஏற்கப்படும் ஒரு கருத்துதான்.

பொருள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தலையில் தானாய் ஏறி அமர்ந்துவிடும் பொறுப்புக்களுக்காக கடமைகளை நிறைவேற்றுவது நிர்பந்தம் என்றால், துன்பங்கள் துயரங்களைக் கண்டு வாழ்வை நாமாக முடித்துக் கொள்ள முடியாத வாழ்நிலையும் நிர்பந்தமே. இதில் இறைவனுக்குச் செலுத்தும் நன்றியும் வணக்கமும் கட்டாய நிர்பந்தம் என்கிற நிலையில், இன்னபிற கடமைகளை செய்து முடிக்க நேர்மை வழியில் காசு சம்பாதிப்பதும் நிர்பந்தம் என்றாகிப் போகிறது

இன்றைய நவீன காலத்தில், தன்னை சுற்றி நடப்பது அறிந்திடவும் அதற்கு தகுந்தாற்போல் பாதுகாப்பினை உறுதி செய்வதும் சுற்றுச்சூழலால் நம் மீது வீசப்படும் நிர்பந்தம் என்றிருக்கையில், கருத்துச் சொல்லும் உரிமையும் அதை சொல்லில், எழுத்தில் வெளிப்படுத்துவதும் சமூக நிர்பந்தம் என்றாகிப்போகிறது. அதற்கு ஆதரவையும் எதிர்ப்பையும் எதிர்கொள்வது இன்னொரு நிர்பந்தம் என்றானால், வாரி அணைப்பதும் எதிர்ப்பை தெரிவிப்பதும் மனித மனங்களின் இயல்பான நிர்பந்தம் என்றிருக்கையில், விரண்டோடுவது கூட, இன்றைக்கு சிலருக்கு நிர்பந்தமாகிப் போய் விட்டதோ என்று நினைக்கிற அளவில் காட்சிகள் கலங்கித் தெரிகின்றன.

இந்நிலையில், இடையில் தானாக வந்து ஒட்டிக் கொண்டவர்கள் சொல்லாமல் கொள்ளாமல் ஓடுகிற நிலை மிகவும் இழிவான ஒரு செயலாகவே படுகிறது. நாமே வம்பர்களை விலக்கிக் கொண்டிருக்கும் நிலையில், தானாக வந்ததுபோல் தானகவே ஓடி ஒளிந்து விட்டு, இன்னொரு சந்தர்ப்பத்தில் அதையும் வாய்கிழிந்து பெருமை பேச நினைக்கும் அப்பட்டமான கோழைத்தனம் இது. இவன் வாலில் இனியுமிருந்தால், பெருமைகளையும் பொல்லாத திறமைகளையும் வெளிப்படுத்த பெரும் இடைஞ்சலாக இருக்கும் என்று கருதியிருக்கிற அவர்களின் தீய எண்ணங்கள் அவர்களுக்கு நிர்பந்தமானவை என்றால், அதை சொல்லி வைப்பதும் எனக்கு நிர்பந்தமே.

ஆக, இப்படியாக நிர்பந்தங்கள் எந்தெந்த வகைகளில் எல்லாமோ இருந்து கொண்டிருந்தாலும், நிர்பந்தங்கள் என்று எதுவும் இல்லை என்று நான் சொல்லிய கருத்தை அப்படியே தலைகீழாக மாற்றிச் சொல்ல நானே முன்வந்தால், முறைத்துப் பார்த்து இவனுக்கென்ன கிறுக்கா என்றுதான் சந்தேகத்தோடு பார்ப்பீர்கள். என்றாலும், அப்படி எந்த நிர்பந்தங்களும் யாருக்கும் இல்லை என்பதே நிதர்சன உண்மை.

நிர்பந்தங்கள் என்று நினைப்பதை எல்லாம், மனம் விரும்பிய விருப்பமான செயல்கள், மனம் வெறுக்கும் தீய செயல்கள் என்று இரண்டாக பிரித்துக் கொள்ளும் சற்றே திறனிருந்தால், நிர்பந்தங்கள் அங்கே முழுவதுமாக இல்லாமலாகிப் போகிறது.

காரணம் கடமையான நிர்பந்தங்கள் ‘விருப்பமான செயல்கள்’ என்கிற புதிய பெயர் மாற்றத்தை பெற்று விடுவதால், எஞ்சி இருப்பவை எல்லாமும் தாங்களாகவே தேடிப்போய் குப்பை கூடையை நிரப்பிக் கொள்கின்றன !

 Raheemullah Mohamed Vavar to எண்ணமும் எழுத்தும்......
Raheemullah Mohamed Vavar

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails