Monday, October 26, 2015

கீழக்கரையில் இன்றும் சிறப்புற நடை பெற்று வரும் சங்கு முத்து வணிகம் - வரலாற்று பார்வை !

கீழக்கரை கடற்பகுதி முத்துக் குளித்தலில் உலகளாவிய புகழ் பெற்று இருந்தது. கீழக்கரையில் ஆதி காலம் முதற் கொண்டு சிறப்பாக நடந்து வந்த முத்து, சங்கு குளித்தல் பற்றி கி.பி. 80 ஆம் வருடத்தில் வாழ்ந்த பெரிப் புளூஸ்,  கி.பி.130 ஆம் வருடத்தில் வாழ்ந்த தாலமி போன்ற வரலாற்று அறிஞர்களும்,  கி.பி.6 ஆம் நூற்றாண்டில்; வாழ்ந்த எகிப்து நாட்டு பயணி காஸ்மாஸ் இனிகோ பிளஸ்டாஸ் உள்ளிட்டோரும் தங்கள் ஆய்வில் வெளிப்படுத்தியுள்ளனர்.

தமிழ்நாட்டில் முதல் முதலாகக் காலனிய ஆட்சியை நிறுவியவர்கள் போர்ச்சுக்கீசியர்கள். 16ஆவது நூற்றாண்டில் இராமேஸ்வரம் தொடங்கி, கன்னியாகுமரி வரையிலான கடற்கரைப் பகுதியில் காலூன்றி அப்பகுதியில் ஆட்சி செலுத்தியவர்கள். கி.பி.1658இல் டச்சுக்காரர்கள் நிகழ்த்திய படை யெடுப்பிற்குப் பின்னரே இவர்களின் ஆதிக்கம் மறைந்தது.

அச்சமயம் கீழக்கரை கடல் பகுதிகளில் முத்துக் குளிக்கும் போது கடற் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி முத்துக்களைக் கொள்ளையடிப்பது நிகழ்ந்து வந்தது. இதனால் காயல், கீழக்கரை போன்ற ஊர்களின் தலைவர்கள் போர்ச்சுக்கீசியப் படைத் தளபதியின் உதவியை நாடினர். முத்துக் குளிப்பின் போது போர்ச்சுக்கீசியப்படை, பாதுகாப்பளித்தது. இப்படையினர்க்கு ஊதியமும் உணவுப் பொருட்களும் ஊர் மக்களால் வழங்கப்பட்டன.

அந்த காலக் கட்டத்தில், கீழக்கரை இஸ்லாமியர்களின் தலைவர் 'நெயினார்' என்றழைக்கப்பட்டார். 1523 இல் கீழக்கரை நெயினார், கடற்கொள்ளைக் கூட்டத்திடமிருந்து, பாதுகாப்புக் கொடுக்க, போர்ச்சுக்கல் படைத்தளபதியை வேண்டினார். அப்பாதுகாப்பிற்காகப் பணம் வழங்கிய வரலாறுகளும் காணப்படுகிறது. இன்றும் பழைய குத்பா பள்ளிவாசாலில் 'கப்பல் நெய்னா மறைக்கா' என்பார் குறித்த கல்வெட்டி னய் காண முடியும்.

கீழக்கரை மரைக்காயர்கள், ஸ்ரீலங்காவுக்கு அரிசியும் ஆடைகளும் கொண்டு சென்று பண்டமாற்று வாணிபம் செய்து வந்தனர். வாணிபப் போட்டியின் காரணமாக, ஏற்கெனவே வாணிபத்தில் நிலைபெற்றிருந்த மரைக்காயர்களுக்கும் போர்ச்சுக்கீசியருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது. இலங்கையுடனான வாணிபத்திலும், கீழக்கரையில் முத்து வாணிபத்திலும் ஈடுபட விரும்பிய போர்ச்சுக்கீசியர்கள் இதற்கு உதவும் வகையில் கடற்கரைப் பகுதியில் பாதுகாப்பான இடம் ஒன்றைத் தேடினர். இவ்வகையில் கீழக்கரைக்குச் சில கிலோ மீட்டர் வடக்கில் இருந்த வேதாளை என்ற ஊர் பொருத்தமான இடமாக அவர்களுக்குப்பட்டது.

வேதாளையில் கோட்டையன்றைக் கட்டிக் கொள்ள, அப்பகுதியை ஆண்ட பரமக்குடி தும்பிச்சி நாயக்கரிடம் அனுமதி வேண்டினர். செங்கற்களைப் பயன்படுத்தாமல் மண்ணால் கட்டப்பட்டு, ஓலைக் கூரையுடன் கூடியதாகக் கட்டிக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் பரமக்குடி சிற்றரசன் அனுமதி வழங்கினான். தமிழகத்தின் கடற்கரையில் போர்ச்சுக்கீசியர் கட்டிய முதல் கோட்டையாக வேதாளைக் கோட்டை அமைந்தது. கோட்டையினுள், பண்டக சாலைகளும், போர்ச்சுக்கீசிய வணிகர்களும் அதிகாரிகளும் வசிக்க வீடுகளும் கட்டப்பட்டன.

வேதாளையில் இருந்தவாறே, கீழக்கரை இஸ்லாமிய மரைக்காயர்களைக் கட்டுப்படுத்தலாயினர். இதனால் இருதரப்புக்கும் இடையே முரண்பாடு உருவானது. காலப்போக்கில் மரைக்காயர்கள் தம் வளத்தை இழக்கலாயினர். இதைத் தவிர்க்கும் வழிமுறையாகப் போர்ச்சுக்கீசியரின் எதிரியாக இருந்த கள்ளிக்கோட்டை சாமரின் மன்னனின் துணையை நாடினர். அவர் அனுப்பிய படை இருமுறை (கி.பி 1537, கி.பி 1538 ஆண்டுகளில்) போர்ச்சுக்கீசியர்களுடன் மோதித் தோல்வியடைந்தது.

கீழக்கரைப் பகுதியில் போர்ச்சுக்கல் ஆதிக்கம் நிலை பெற்ற பின், இப்பகுதியின் உரிமையாளராய் விளங்கிய விஜயநகரப் பேரரசின் வருவாய் தடைப்பட்டது. இதைப் பொறுக்க முடியாத விஜயநகரப் பேரரசு, தன்படையை 1549-இல் அனுப்பியது. அதனுடன் போரிட முடியாது போர்ச்சுக்கீசியப் படை தோற்று ஓடிப் போனது. 1553-இல் கீழக்கரை முஸ்லீம்கள் வேதாளைக் கோட்டையைத் தாக்கி, முத்துக்குளித்தலில் தம் ஆதிக்கத்தை மீண்டும் நிலை நிறுத்தினர்.
இடம் : அஞ்சு வாசல் கிட்டங்கி, பழைய குத்பா பள்ளி தெரு

கீழக்கரை நகரின் ஆதி தொழிலாம் கடல் சார்ந்த தொழில்களில், சங்கு முத்து வணிகம் இன்றும் கூட பழைய குத்பா பள்ளி தெருவில் இருக்கும் அஞ்சு வாசல் கிட்டங்கியிலும் முஸ்லீம் பஜாரில் ஜமாலியா சங்கு கொள் முதல் விற்பனையகத்திலும், புதுக் கிழக்குத் தெருவில் சில இடங்களிலும் சிறப்பாக நடை பெற்று வருகிறது. இங்கு சங்குகளை சுத்தம் செய்து, அளவு வாரியாக  தரம் பிரித்து கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கும், அங்கிருந்து உலகமெங்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இடம் : ஜமாலியா சங்கு கம்பெனி, முஸ்லீம் பஜார்
நன்றி Source : http://keelaiilayyavan.blogspot.in/

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails