Wednesday, November 25, 2015

ஹழ்ரத் அலி(ரலி) அவர்களை சந்தித்த 10 அறிஞர்கள் அவர்களிடம்,

ஹழ்ரத் அலி(ரலி) அவர்களை
சந்தித்த 10 அறிஞர்கள் அவர்களிடம்,

“நாங்கள் உங்களிடம் ஒரே ஒரு கேள்வியைத்தான் கேட்போம் அதில் எங்கள் 10 பேருக்கும் தனித் தனியே 10 பதில் தர முடியுமா?” என்று கேட்டார்கள்.

"செல்வம், அறிவு" இரண்டில் எது சிறந்தது? ஏன்? இதுதான் கேள்வி என்றார் அறிஞர்களில் ஒருவர்.

ஹழ்ரத் அலி (ரலி) அவர்கள் 10 பேருக்கும் 10 பதில் சொன்னார்கள், அவை

1) அறிவானது ஞானிகள், மகான்கள், தீர்க்கதரிசிகள் இவர்களது பரம்பரைச் சொத்து, ஆனால் செல்வமோ கொடுங்கோலரின் ஆயுதம். ஆகவே அறிவே சிறந்தது.

2) உங்களிடம் செல்வம் இருந்தால் நீங்கள் அதைக் காப்பாற்ற வேண்டும். ஆனால் அறிவோ உங்களை எப்போதும் காப்பாற்றும். ஆகவே அறிவுதான் சிறந்தது.

3) செல்வனுக்கு எப்போதும் விரோதிகள் அதிகம். ஆனால் அறிஞனுக்கோ நண்பர்கள் அதிகம். ஆகவே அறிவுதான் சிறந்தது.

4) செல்வம் பிறருக்கு கொடுக்க, கொடுக்க குறையும், ஆனால் கல்வியோ அதிகரித்துக் கொண்டுதான் வரும். ஆகவே அறிவே சிறந்தது.

5) அறிவுள்ளவன் எப்போதும் தன் அறிவை பிறருக்கு வாரி வழங்கிக் கொண்டிருப்பான். அவனிடம் தாராளத் தன்மை இருக்கும். ஆனால் செல்வனிடம் கஞ்சத் தனந்தான் இருக்கும். எனவே அறிவுதான் சிறந்தது.

6) செல்வங்களை திருடர்கள் திருடிக் கொண்டு போக முடியும், ஆனால் அறிவை யாராலும் அபகரிக்க முடியாது. ஆகவே அறிவே சிறந்தது.

7) செல்வம் கால ஓட்டத்தில் அழிந்துவிடும், கூடலாம், குறையலாம். ஆனால் அறிவு எப்போதும் வளர்ந்து கொண்டு செல்லும். அறிவை கால ஓட்டம் ஒன்றும் செய்ய முடியாது. எனவே அறிவுதான் சிறந்தது.

8) செல்வத்திற்கு எப்போதும் எல்லையுண்டு , அளவுண்டு, கணக்கு உண்டு. ஆனால் அறிவுக்கோ எல்லையோ, கணக்கோ இல்லை. எனவே அறிவே சிறந்தது.

9) செல்வம் உள்ளத்தில் ஒளியைப் போக்கி அதை இருளடைய செய்கிறது. விரிந்த மனப்பான்மையை குறுகலாக்குகிறது. ஆனால் அறிவோ இருண்ட உள்ளத்தில் ஒளிப் பாய்ச்சி அதை விசாலப் படுத்துகிறது. ஆகவே அறிவே சிறந்தது.

10) செல்வம் உள்ளகச் செருக்கையும் ஆணவத்தையும் ஏற்படுத்துகிறது. அதனால்தானே கடவுள் என்று உரிமை கொண்டாடும் நிலைக்கு மனிதனைக் கீழாக்கி விடுகிறது. ஆனால் அறிவோ, இறைவனே! நான் உனது அடிமை என்ற பண்பையும், பண்பாட்டையும் வளர்த்து அல்லஹ்வின் நல்லடியானாக மாற்றி இம்மை மறுமை இரண்டிலும் நல்வாழ்வு தருகிறது என்றார்.

இப் பதில்களைக் கேட்ட 10 அறிஞர்களும் அலி(ரலி) அவர்களை வாழ்த்தினர்.

ஆனால் ஹழ்ரத் அலி (ரலி) அவர்களோ தனக்கு இத்தகு பதிலைக் கூற ஆற்றல் தந்த அல்லாஹ்வை புகழ்ந்தார்கள்.

#‎ஷாபிய்யாத்‬ காதிரிய்யா..

Saif Saif

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails