ஆலிம் புலவர்
எஸ். ஹூஸைன் முஹம்மது
ஹக்கிய்யுல் காதிரிய்யுல் மன்பயீ,திண்டுக்கல்
----------------------------------------
மனிதம் அன்பின் மறுபெயரா
மனதில் கசியும் வாசனையா
குணத்தால் எழுப்பிடும் கோபுரமா
குளிர்ந்த பண்பின் கூறுகளா
உனது எனது என்பதெலாம்
ஓய்ந்தபின் தோன்றும் உயிர்சுகமா
அனைத்து உயிரும் தன்னுயிராய்
ஆராதிக்கும் தவநிலையா?
அருமை நபிகள் வாழ்ந்து தந்த
அரிய வாழ்வின் முழுத் தொகுப்பா
கரிசனையோடு சஹாபாக்கள்
கற்றுக் கொண்ட உயர்படிப்பா
திருமதி னாவில் மக்களிடம்
தினசரி நிகழ்ந்த நிகழ்ச்சிகளா?
அருளா ளர்கள் அவ்லியாக்கள்
அகந்தை மடிந்த நடத்தைகளா?
வாடிய பயிரைக் கண்டவுடன்
வாடி நின்ற மனநிலையா
தேடி வந்த புலவருக்கு
செத்தும் கொடுத்த கொடைநலமா
ஆடிய முல்லைக் கொடிக்காக
அருளிய பாரி அருள்மனமா
கோடிய நீதிக் காய் இறந்த
கொற்றவன் செழியன் பெருந்தனமா?
செக்கை இழுத்த சிதம்பரனார்
சிறையில் சகித்த அனுபவமா
மக்களுக்காக மண்டேலா
மகிழ்ந்து ஏற்ற கொடுமைகளா
திக்க ற்றழுத ஏழைகட்கு
தெரசா செய்த சேவைகளா
பக்குவப் படுத்தும் பெரியாரின்
பகுத்தறி வான சிந்தனைகளா?
அறிவை வான் போல் விரிவாக்கு
அகத்தைப் பால்போல் தெளிவாக்கு
எறும்பாய் உழைக்கும் உடலாக்கு
என்றும் இன்பம் உனதாக்கு
பிறருக்கெல்லாம் உருவாக்கு
பிழைகள் இல்லா வாழ்வாக்கு
கருணை நெஞ்சில் உண்டாக்கு
கருத்தில் மனிதம் உருவாகும்.
( 1998 டிசம்பர் 11, 12, 13 ஆகிய தேதிகளில் கோட்டக்குப்பத்தில் நடைபெற்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழக ஆறாம் மாநாட்டின் போது வாசிக்கப்பட்ட கவிதை )
from: Muduvai Hidayath
<muduvaihidayath@gmail.com>
No comments:
Post a Comment