Sunday, November 8, 2015

நான் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு நூலிலிருந்து....-Abu Haashima


" ஆது மகன் சத்தாது
குலவலிமைப் பெருவாழ்வு
அழியாமல் நிலை நின்றதோ ? "
ஹனிபா அண்ணன் பாடிய இந்தப் பாட்டு
அடிக்கடி காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

யார் இந்த சத்தாது ?
நூஹு நபி ( அலை ) அவர்களின் மகனான சாமின் மகன் இறாம் என்பவரின் எட்டு ஆண் மக்களின்
வழித் தோன்றல்கள்தான் இந்த ஆது கூட்டத்தார்.

யமனிலிருந்து இராக் வரை இவர்களின் நாடு விரிந்திருந்தது.
இவர்கள் வலிமை மிக்கவர்கள். பெரும் உருவம் உள்ளவர்கள்.
பெரிய பெரிய பாறைகளை தலையில் சுமந்து வரும் ஆற்றலுள்ளவர்கள்.
எதிரிகளின் தலையில் பெரும் கற்களைப் போட்டுக் கொல்லும் சக்தி உள்ளவர்களாக இவர்கள் இருந்ததால் இவர்களை யாரும் வெல்ல முடியவில்லை.
இவர்களின் குட்டி தெய்வங்கள் ஸதாஉ , சமூத் மற்றும் ஹபாஉ .
இவர்கள் கட்டிய கோட்டையின் உள்ளே இவர்கள் வசதியாக வாழ்ந்து வந்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன.

அந்த ஆது கூட்டத்தைச் சேர்ந்தவன்தான் சத்தாது.
ஹூத் நபி ( அலை ) அவர்களின் காலத்தில் வாழ்ந்தவன்.
பிர்அவ்னைப்போல தன்னை இறைவனென்று கூறிக் கொண்டு மக்களையெல்லாம் தனது அடிமைகளாக நடத்தியவன்.
ஹூத் நபியவர்கள் சத்தாதை அணுகி ,
" வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே . அவனையே வணங்க வேண்டும் " என்றார்.
" அப்படி அல்லாஹ்வை வணங்கினால் எனக்கு என்ன கிடைக்கும் ?" என்று கேட்டான் சத்தாது .
" சொர்க்கம் கிடைக்கும் " என்றார் ஹூது நபி.
" அந்த சொர்க்கத்தை நானே உருவாக்குகிறேன் " என்று கூறிவிட்டு ....
சொர்க்கத்தை நிர்மாணிக்கும் வேலையில் மும்முரமாக இறங்கினான் சத்தாது.
தான் கட்டும் சொர்க்கத்திற்காக ...
நாட்டிலுள்ள பொன்னையும் மணியையும் தண்ணீராகக் கொட்டினான்.
வைரங்களையும் வைடூரியங்களையும் வாரி இறைத்தான்.
பல்லாயிரக்கணக்கான பணியாளர்களை அதற்காக நியமித்து இரவு பகலாக அவர்களை கசக்கிப் பிழிந்து வேலை வாங்கினான்.
மிகப்பெரிய மாளிகைகளைக் கட்டி அவற்றின் தூண்களை தங்கத்தால் அமைத்தான்.
கூரைகளில் வைரங்களை பதித்து வைத்து அவைகளை நட்சத்திரங்களைப்போல ஜொலிக்கச் செய்தான்.
நீரோடைகளையும் பாலாறுகளையும் அங்கே ஓடச் செய்தான்.
உலகத்தின் அத்தனை கனி வர்க்கங்களையும் அங்கே பயிரிட வைத்தான்.
வீதிகளெங்கும் சந்தனத்தையும் குங்குமத்தையும் வாரிக் கொட்டினான்.
பூக்களால் தனது சொர்க்கத்தை அலங்கரிக்கச் செய்தான்.
இன்னும் எண்ணிலடங்கா அலங்காரங்களை செய்து முடித்து ....
ஒரு நாளை குறிப்பிட்டு அதை சொர்க்கத்தின் திறப்பு விழா என்று அறிவித்தான்.
நாட்டு மக்கள் அனைவருக்கும் விருந்துகளும் பரிசுகளும் வாரி வழங்கப்படும்
என்று நாடு முழுவதும் பறையறிவித்தான்.

மக்கள் குவிந்தார்கள்.
அன்று அதிகாலை குளித்து முடித்து
புத்தாடைகள் தரித்து
வாசனைத் திரவியங்கள் பூசி
ராஜ கம்பீரத்தோடு
சொர்க்கத்தை திறந்து வைக்க வந்தான் சத்தாது.

சொர்க்கம் ஏகப்பட்ட உயரத்தில் கட்டப்பட்டிருந்தது.
மேலேறிச் செல்வதற்காக ஏராளமான படிகள் அமைக்கப்பட்டிருந்தன.
சத்தாது ஒவ்வொரு படியாக ஏறி சொர்க்கத்தின் வாசலில் நின்று மக்களைப் பார்த்து
மலர்ந்த முகத்தோடு பெருமையாய் சிரித்தான்.
சொர்க்கத்தை திறக்கப் போகிறேன் என்று உரத்த குரலில் முழங்கினான்.
மக்கள் வாழ்த்துக் கோஷங்களை எழுப்பினார்கள்.

அப்போதுதான் ஈருலகுக்கும் அதிபதியான ஏக இறைவன் அல்லாஹ் ...
மலைக்குல் மவ்த்துக்கு சத்தாதின் உயிரைக் கைப்பற்ற ஆணையிட்டான்.
தான் கட்டிய சொர்க்கத்தின் கதவை சத்தாத் திறக்கப் போகும் நேரத்தில்
மலைக்குல் மொவ்த் சத்தாதின் உயிரை உருவ ஆரம்பித்தார்.
தன் உயிரை காப்பாற்றிக் கொள்ளும் ஆற்றலில்லாத சத்தாத் ...
தான் கட்டிய சொர்க்கத்தை திறக்காமலே அதை கண்குளிரக் காணாமலே
அடியற்ற மரம்போல படிகளில் உருண்டு உருண்டு கீழே விழுந்து இறந்தான்.
தன்னை இறைவனென்று சொன்னவன்
இறந்தே போனான்.

" இதைப்போன்ற ஒரு நகரம் இந்த மண்ணில் நிர்மாணிக்கப்படவில்லை "
என்று இறைமறையில் அல்லாஹ்வே இதை கூறுகிறான். ( 89 : 8 )

ஒரு பெரும் காற்றை இறைவன் அனுப்பி வைத்தான்.
அந்தக் காற்று ஹூது நபி ( அலை ) அவர்களின் சொல்லைக் கேட்காத ஆது கூட்டத்தை அழித்தது.
ஹூது நபியையும் அவரை பின் பற்றியவர்களையும் அல்லாஹ் பாதுகாத்தான்.

நான் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு நூலிலிருந்து....

Abu Haashima

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails