Monday, November 30, 2015

இயக்க வெறி

மக்களுக்குச் சேவை செய்வதாக, தொண்டு செய்வதாக நம்பிக் கொண்டு ஆளுக்கொரு இயக்கப் பெயரை வைத்துக் கொள்கிறார்கள். சிலர் அதை அரசில் பதிவு செய்து கொள்கிறார்கள். சிலர் பதிவு செய்யாமலும் செயல்படுகிறார்கள்.   உண்மையில் மக்களுக்கு ஏதாவதொரு உலகியல் பலனளிக்கும் செயல்களைச் செய்யவும் செய்கிறார்கள். அதனால் உலகில் பேர் புகழ் கிடைக்கவும் செய்யலாம். ஆனால் இதுவும் ஒரு மாயைதான் என்பதை அறியாமல் ஏமாறுகிறார்கள்.

ஷைத்தானின் மாய வலையில் வசமாகச் சிக்கிய அச்சகோதரர்கள் அவர்களின் கற்பனையில் உதிக்கும் ஓர் இயக்கப் பெயரைத் தேர்ந்தெடுத்து சூட்டிக் கொள்கிறார்கள். முன் சென்றவர்கள் உலகியல் ஆதாயங்களைக் குறிக்கோளாகக் கொண்டு பொய்க் கடவுள்களுக்குச் சுயமாகப் பெயர் சூட்டி, பிரபல்யப்படுத்தி ஆதாயம் அடைந்தது போல், இவர்கள் கற்பனையில் உதித்தப் பெயர்களைத் தங்களின் இயக்கங்களுக்குப் பெயராகச் சூட்டி அவற்றைப் பிரபல்யப்படுத்தி உலகியல் ஆதாயங்களை அடைகிறார்கள்.

ஆனால் இயக்க வெறியில் அதாவது மாயையில் சிக்கிப் பாராட்டையும், புகழையும் எதிர்நோக்கிச் சேவை செய்யும் இழிநிலைக்கு இன்றைய இளைஞர்கள், இளம் பெண்கள் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள். புகழையும், கண்ணியத்தையும் விரும்பும் இவர்கள் படிப்பினைப் பெற்றுத் திருந்தினார்கள் என்றால் தப்பினார்கள். இல்லை என்றால் மீளா நரகமும், கடும் தண்டனைகளும் காத்திருக்கின்றன என்பதை நினைவில் கொள்வார்களாக.

மேலும் இந்த இயக்க வெறியர்களிடம் குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் முரண்பட்ட ஆர்ப்பாட்டம், போராட்டம், பந்த், சாலை மறியல், இன்ன பிற தவறான செயல்களை உரிய குர்ஆன் வசனங்கள், ஹதீஃத்களைக் காட்டி உணர்த்தினால் முஃமின்களைப் போல் உடனடியாக அதற்குக் கட்டுப்படும் உயர் பண்பு இல்லை. அதற்கு மாறாக அற்பமான இவ்வுலகில் கிடைக்கும் மிகமிக அற்பமான லாபங்களைக் காட்டி இறைக் கட்டளைகளை நிராகரித்துப் பாவிகள் ஆகிறார்கள். ஆயினும் இயக்க வெறியர்கள் உணர்வதாக இல்லை.

அதற்கு மாறாக ஏதாவதொரு பெயரைக் கற்பனை செய்து அதற்கு பைலா தயார் பண்ணி அரசில் பதிவு செய்து கொள்கிறார்கள். தலைவர், செயலர், பொருளாளர், நிர்வாக உறுப்பினர்கள், உறுப்பினர்கள் என ஒவ்வொருவருக்கும் அட்டையைக் தொங்க விடுகிறார்கள். அதைக் கொண்டு பெருமையும் படுகிறார்கள். இவை போதாதென்று ஆண்கள் அணி, பெண்கள் அணி, இளைஞர் அணி, மகளிர் அணி, தொண்டர் அணி, குண்டர் அணி எனக் கணக்கற்ற அணிகளைக் கற்பனை செய்து அவற்றிற்கும் தலைவர், செயலர், உறுப்பினர்கள் என நியமித்து இயற்கையாக மனித பலகீனத்தின் காரணமாக இருக்கும் பதவி ஆசையை வளர்த்து விடுகின்றனர். இதில் தப்பிப் பிழைப்பவர்கள் மிக மிகச் சிலரே!

இயக்கத்தினர் நடத்தும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் டிஜிட்டல் பேனர், சுவரொட்டி, துண்டுப் பிரசுரம் என தலைமை, முன்னிலை, பேச்சாளர்கள், நன்றி நவிலல் என அரசியல் கட்சிகள் தோற்றது போங்கள் என அமர்க்கலப்படும். அரசியல் கட்சியினருக்காவது மக்களிடையே அறிமுகமாக, பேர், புகழ் பெறும் கட்டாயம் இருக்கிறது. தேர்தலில் மக்களின் வாக்குகளைப் பெறும் கட்டாயத்தில் அப்படிச் செயல்படுகிறார்கள். பெரும்பாலான அரசியல் கட்சியினர் நாத்திகர்கள் அல்லது இறைவன், மறுமை பற்றி உறுதியான நம்பிக்கை இல்லாதவர்கள். இவ்வுலகே மாயம், வாழ்வே மாயம் என்பதல்ல அவர்களின் கொள்கை. இவ்வுலகே சதம்; வாழ்வே சதம் என்ற கொள்கையுடையோர். அதனால் பேர், புகழுக்காக, பட்டம், பதவிகளுக்காக, காசு பணத்திற்காக ஆலாய்ப் பறப்பதில் அர்த்தமுண்டு. பணத்திற்கும், பதவிக்கும் ஆலாய்ப் பறக்கிற அரசியல்வாதிகள், இயக்கவாதிகள் பெருத்துவிட்ட காலம் இது. முஸ்லிம் அல்லாதவர்களின் நிலை இப்படி இருக்கலாம். அவர்கள் இவ்வுலகை மட்டும் நம்பி இருப்பவர்கள். அதற்கு மாறாகத் தங்களை முஸ்லிம்கள், தவ்ஹீத்வாதிகள் எனப் கூறிக்கொள்ளும் இவர்களும் பேர் புகழில் ஆசைப்பட்டு, பட்டம் பதவிகளுக்காக ஆலாய்ப் பறந்தால் அதன் பொருள் என்ன? இவர்களும் அல்லாஹ்வின் மீதும், மறுமையின் மீதும் உறுதியான நம்பிக்கை இல்லாதவர்கள், 49:14 இறைவாக்குக் கூறுவது போல் உள்ளத்தில் இறை நம்பிக்கை (ஈமான்) நுழையாத பெயர் தாங்கி முஸ்லிம்கள் என்பதுதானே அதன் பொருள்.

அல்லாஹ்மீதும், மறுமையிலும் உறுதியான நம்பிக்கை இருந்தால், உலகியல் பேர் புகழைக் கனவில் கூட நினைத்துப் பார்க்க மாட்டார்கள். நாளை மறுமையில் விசாரணை ஆரம்பித்தவுடன் இவ்வுலகில் பெரும் பேர் புகழுடன் பிரசித்தி பெற்ற ஷஹீத்கள், ஆலிம்கள், வள்ளல்கள் விசாரிக்கப்பட்டு முகம் குப்புற இழுபட்டு நரகில் எறியப்படுவார்கள். காரணம் அவர்கள் இவ்வுலகில் பேர் புகழுக்காகச் செயல்பட்டவர்கள். சாதாரணச் சேவை செய்தவர்களா இவர்கள்? மகத்தானப் பெரும் பெரும் சேவை செய்தவர்கள். சத்திய மார்க்கத்தை நிலை நாட்ட, அதை எதிர்த்தவர்களுடன் கடுமையாகப் போரிட்டு இறுதியில் ஷஹீதானவரின் சேவை சாதாரண சேவையா?  தான் கஷ்டப்பட்டு உழைத்துச் சேர்த்த பணத்தை இல்லாதவர்களுக்கு வாரி வாரி வழங்கிய வள்ளல். இந்த மூன்று சேவையாளர்களுக்கு முன்னால் இன்றைய இயக்கவாதிகள் செய்யும் சேவைகள் கால்தூசு பெறுமா? சிந்தியுங்கள். அப்படிப்பட்ட பெரும் பெரும் சேவையாளர்களே முகம் குப்புற இழுபட்டு நரகில் எறியப்படுகிறார்களே! என்ன காரணம்? ஆம்! அவர்கள் செய்தது பெரும் பெரும் சேவைகளாக இருந்தும் மக்களிடம் பேர் புகழை எதிர்பார்த்து செய்ததுதான் அவர்கள் செய்த ஹிமாலயக் குற்றம். இப்போது சிந்தியுங்கள்.

இயக்கவாதிகளே, அவற்றின் உறுப்பினர்களே, உலகியல் பேர் புகழை மட்டுமே நாடிச் செயல்பட்டவர்களே முகம் குப்புற இழுபட்டு நரகில் எறியப்படுவார்கள் என்றால், பேர் புகழுடன், பட்டம் பதவி, காசு பணம், செல்வாக்கு இவற்றை எதிர்பார்த்துத் தனித்தனி இயக்கங்களில் செயல்படும் உங்களின் நாளைய நிலை என்ன? சிந்தித்தீர்களா? பாழும் நரகம் என்றால் சொகுசு மெத்தை என எண்ணிக் கொண்டீர்களா? அந்தோ பரிதாபம்! இதற்குக் காரணம் 47:24 இறைவாக்குக் கூறுவது போல் உங்களின் உள்ளங்களுக்குப் பூட்டுப் போட்டுக் கொண்டு உங்கள் இயக்கத் தலைவர்களின் குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் முரண்பட்ட வழிகெட்ட போதனைகளை வேதவாக்காகக் கொண்டு நீங்கள் செயல்படுவதுதான். நீங்கள் குர்ஆனை நேரடியாகப் படித்துச் சிந்தித்து விளங்க வேண்டும் என்று இறை வாக்குகள் கூறிக் கொண்டிருந்தும், அத்தனை இறைவாக்குகளையும் நிராகரித்து குஃப்ரிலாகி நீங்கள் நம்பியுள்ள இயக்கத் தலைவர்கள் பின்னால் கண்மூடிச் செல்வதால்தான் இந்த பரிதாப நிலை.

இந்த இயக்கவாதிகளின் அன்றாடச் செயல்பாடுகளைப் பாருங்கள். நேரடி குர்ஆன், ஹதீஃத் போதனைகளை நிராகரித்து தலைவர்களின் வழிகெட்டப் போதனைகளைக் கண்மூடிச் செயல்படுத்துவார்கள். கடமையான தொழுகைகளைப் பாழ்படுத்துவார்கள். எதிர் தரப்பினரை எதிரிகளாகச் சொல்லி அவர்கள் மீது அவதூறுகளை அள்ளித் தெளிப்பார்கள்.  அதுமட்டுமா? சண்டை சச்சரவு, அடிதடி போன்ற ஒரு முஃமினிடம் இருக்கக் கூடாத அனைத்து அக்கிரமச் செயல்களும் இயக்க வெறியர்களிடம் காணப்படுகிறது.

இந்த இயக்க வெறியர்கள் ஒன்றைத் திட்டமாக அறிந்து கொள்வார்களாக. அவர்கள் நம்பியுள்ள இயக்கத் தலைவர்கள் ஒருபோதும் அவர்களுக்கு நேர்வழி காட்ட முடியாது. 7:146 இறைவாக்குக் கூறுவது போல் வீண் பெருமையால் அவர்கள் அல்லாஹ்வாலேயே நேர்வழியில் இருந்து திருப்பப்பட்டு, நேர் வழியை வெறுப்பவர்களாகவும், கோணல் வழிகளை நேர்வழியாக எடுத்து நடப்பவர்களாகவும் இருக்கும் நிலையில் அவர்களால் உங்ளுக்கு நேர்வழியைக் காட்ட முடியுமா? ஒருபோதும் காட்ட முடியாது. குருடன் பாதையைக் காட்ட முடியுமா?

எனவே இயக்க வழிகேட்டை விட்டு விடுபட்டு நேரடியாக 3:103 இறைக் கட்டளைப்படி எந்த நிலையிலும் பிரியாமல், பிளவுபடாமல், ஒரே ஜமாஅத்தாக குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதன் நேரடி போதனைகள்படி நடக்க முன்வாருங்கள். அதுவே இவ்வுலகில் பெரும் வெற்றியைத் தருவதோடு, நாளை மறுமையிலும் சுவர்க்கத்தில் கொண்டு சேர்க்கும். அல்லாஹ் அருள் புரிவானாக!
Source : http://www.readislam.net/

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails