கடந்த நாட்களாக முகனூல் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதையும், உதவி தேடுவதையும் அதிகமதிகமா பார்த்துக்கொண்டு வருகிறேன்.
நிவாரண உதவிக்கு நாமும் அங்கு இருக்கமுடியவில்லையே எனும் கவலையும், பாதிக்கப்பட்ட மக்களின் புகைப்படமும், அதற்காக சுழன்று சுழன்று உதவி செய்யும் இஸ்லாமிய இயக்கங்கள், தன்னார்வத் தொண்டுகள், தனி நபர் முயற்சி, முகனூல் நண்பர்கள், ட்விட்டர் நண்பர்கள்,பண உதவி செய்த நன் மக்கள் எனும் ஏகப்பட்ட செய்திகளில் நெகிழ்ச்சியில் கண்னீரை கசியவிட்டுத்தான் இருக்கிறேன்.
பாராட்டுவதற்கு இதுவா நேரம்? நிச்சயம் இதுதான் உகந்த தருணம்... அரசியல் சூழ்ச்சியாலும், மத துவேஷங்களாலும் கசப்புகளை கக்கிக்கொண்டிருந்த தருணத்தில் இப்படிப்பட்டதான உதவிகளால் மக்களின் மனதிலுள்ள கசடுகள் நீங்கும் அளவிற்கு ஒர் அற்புதம் நிகழ்ந்திருக்கிறது.
சாதி மத வேற்பாடுகளில்லாமல் மனிதனையும் மனித நேயத்தை மட்டுமே காணக்கிடைத்த ஒர் சம்பவம். நிச்சயம் மயிர்கால்கள் எழுந்து நிற்கும் ஒர் உன்னத உணர்வு எனக்குள்;
முஸ்லிம்களும் கிருத்துவர்களும் இந்துக்களும் மாறி மாறி மனித நேயத்தை வெளிப்படித்துக்கொண்டிருந்த தருணம், இன்னொருவரின் நலனுக்காக தங்களை தாங்களே அர்பணித்துக்கொள்ளும் ஒர் அற்புத நிகழ்வு; இணையத்தில் முகனூலும் ட்விட்டரும் பொழுதுபோக்காக பயன்படுத்திக்கொண்டிருந்ததைத் தாண்டி அதில் கிடைக்கப்பெற்ற நட்புகளைக்கொண்டு தீயாய் உதவிக்கரம் செய்யும் செயல்களைக்கண்டு ஆச்சர்யத்திலும் நெகிழ்ச்சியிலும் ஸ்தம்பித்து போயிருக்கிறேன்.
இஸ்லாமிய தீவிரவாதி, பழமைவாதி,சமூகத்துடன் ஒன்றாகாதவன் எனும் பொய் மாய பிரச்சாரங்களையெல்லாம் அடித்து தவிடுப்பொடியாக்கி மழையோடு மழையாக சூழ்ச்சி செய்தவர்களின் சாயத்தையெல்லாம் கரைத்துக்கொண்டிருக்கிறது இந்த பேய் மழை.
தொப்புள்கொடி உறவுகள்தான் நாம் என்பதை மனித நேயத்தை மகத்தான இஸ்லாமிய போதனைகளை செயல்படுத்தி இஸ்லாமியர்கள் மீதான ஒட்டுமொத்த கரையையும் கசக்கி பிழிந்து துவைத்து போட்டிருக்கிறது இஸ்லாமிய இயக்கங்களும், ஒவ்வொரு தனி நபர் இஸ்லாமியனின் சேவையையும் என்றால் மிகையாகாது. ஒட்டு மொத்த சமுதாயத்தின் கரைகளையும் அகற்ற இவர்கள் தோளில் சுமந்திருந்த பாரம் நிச்சயம் என்னை அழவைத்துவிட்டது.
எல்லாவிதமான மக்களுக்கும், பள்ளிவாசல்களையும், தேவாலயங்களையும் திறந்துவிட்ட செய்தி இன்னும் உணர்வுப்பூர்வமான உணர்வினைத் தூண்டும்விதமாக இஸ்லாமியனாக தமிழனாக நிச்சயம் இறைவனுக்கு நன்றி சொல்கிறேன்.
இந்த பேர் உதவி களத்தில் சகோதரர் பரத் இறந்த செய்தி மனதை கனமாக்கிவிட்டது, மனித நேயத்தை தாண்டியதொரு தொண்டு இங்குண்டா? இதைதான் இஸ்லாமும் போதிக்கிறது, ஒரு உயிரை காப்பாற்றியவன் உலகத்தில் உள்ள எல்லா உயிரையும் காப்பாற்றியவன் போல் ஆவான், ஒரு மனிதனுக்கு செய்த அநியாயம் அதனை அம்மனிதன் மன்னிக்காதவரை இறைவன் மன்னிக்கமாட்டான் எனும் அடிப்படை போதனை.
என்னருமை பிற மதத்தில் உள்ள சகோதர சகோதரிகளே எங்களை புரிந்துக்கொண்டமைக்கு நன்றி, மனித நேயத்தை பறைசாற்றுவோம், மனிதனுக்கு மனிதன் உதவியாய் இருப்போம். வழிபாடுகளால் இறைவனை நம்பும் விதத்தால் நாமெல்லாம் வெவ்வெறு மதங்களாக இருக்கிறோமே யொழியே, மனிதனாக ஒன்றிணைந்துதான் உள்ளோம். உங்களுக்கும் எங்களுக்கும் நேர்வழியைக்காட்ட இறைவனே போதுமானவன்.
முகனூலில் தீயாக உதவி செய்யும் என் ஆருயிர் உறவுகளுக்கு நன்றி, உங்கள் ஆத்மார்த்தமான சேவையில் நெஞ்சு உருகி இறைவனிடம் கேட்கிறேன் ... உங்களுக்கு மகா வல்லமை பொருந்திய இறைவன் அருள் புரிவானாக!
ஆக்கப்பூர்வமென்பது களத்தில் நின்றாடுவது; என்பதை மீண்டுமொருமுறை உணர்த்தியமைக்கு நன்றி.
மனிதனை மனித நேயத்தால் அரவணைப்போம்!
வாழ்க மனித நேயம்!
வாழ்க தமிழகம்!
Yasar Arafat
சேவை செய்யும்போது இறந்த நண்பர்
==============================
கட்டுரை ஆக்கம் Yasar Arafat
No comments:
Post a Comment