-இம்தியாஸ் யூசுப் (ஸலபி)-
அன்பால் பிணைந்த உள்ளங்களில் சில போது சிக்கல்களும் பிரச்சினைகளும் எழுவதுண்டு. இருவருக்கிடையில் முரண்பாடுகள் தோன்றும் போது அறிய வேண்டிய பல பண்புகள் தோற்றம் பெறும். அறியாத சில விடயங்களும் வெளிச்சத்திற்கு வரும். ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள இந்த நிலை துணை செய்யும். எந்த நேரத்தில் எப்படிப் பேச வேண்டும், எப்படி அணுக வேண்டும், எப்படி சமாளிக்க வேண்டும் என்ற அனுபவம் கிடைத்து விடும்.
இந்த அனுபவங்கள் கணவன் மனைவிக்கிடையில் சிறந்த உறவை கட்டியெழுப்பும். எனவே பிரச்சினைகள் வரக் கூடாது என்று எதிர்பார்ப்பதை விட வந்த பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்பது தான் முக்கியம்.
தன் வீட்டில் இருந்தாலும் பிற வீட்டில் இருந்தாலும் ஒருவர் மற்றவருடன் புரிந்துணர்வுடன் நடந்து கொள்ள பிரச்சினைகள் வழிகாட்டியாக இருக்கும். ஆனால், வாழ்க்கையையே பிரச்சினையாக்கி விடக்கூடாது.
30 வருடம் இந்த ஆளுடன் வாழ்ந்தும் என்ன சொல்கிறார் என்று தெரியவில்லை என்று அலட்டிக் கொள்ளும் சில பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். காரணம் இவர்களுடைய வாழ்க்கையே 30 வருடங்களாக பிரச்சினையோடுதான் கழிந்திருக்கிறது. இவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள ஒருபோதும் முனைந்ததில்லை.
ஒவ்வொருவருடைய பார்வைக்கும் ஒரு அர்த்தமுண்டு. கணவன் மனைவியின் பார்வைக்கும் அர்த்தமுண்டு. கணவன் மனைவியை பார்த்தால் என்ன காரணத்திற்காக பார்க்கிறார், அதன் அர்த்தம் என்ன என்று மனைவிக்கு தெரிந்திருக்க வேண்டும். அது போல் மனைவி கணவனைப் பார்த்தால் அந்தப் பார்வையின் அர்த்தம் என்ன என்பதை கணவன் புரிந்துகொள்ள வேண்டும். பார்க்கும் போது சுதாகரித்துக் கொள்ளும் பக்குவத்தை பெறும் போதே வாழ்வு நிம்மதி பெறும்.
நபி(ஸல்) அவர்கள் மரணிக்கின்ற சந்தர்ப்பத்தில் ஆயிஷா(ரலி) அவர்களின் அரவணைப்பில் இருந்தார்கள். அப்போது அவர்களுடைய சகோதரன் அப்துர் ரஹ்மான் உள்ளே நுழைந்தார். அவர் மிஸ்வாக் குச்சியினால் பல்துலக்கிக் கொண்டிருந்தார். நபி(ஸல்) அவர்கள் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பல் துலக்குவதற்கு என் கணவர் விரும்புகிறார் என்பதை புரிந்து கொண்ட ஆயிஷா(ரலி) அவர்கள் தன்னுடைய சகோதரனிடமிருந்து அந்த மிஸ்வாக் குச்சியை கேட்டெடுத்து அதன் அடுத்த பக்கத்தை மென்மையாக கடித்து விட்டு நபியிடம் கொடுத்தார்கள். நபிகளார் அதனால் மிஸ்வாக் செய்தார்கள். கடைசி நேரத்திலும் என் எச்சில் என கணவனின் எச்சிலுடன் சேர்ந்துக் கொண்டது என ஆயிஷா (ரலி) அவர்கள் பிரமிதம் கொண்டார்கள்.
பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொள்ளும் பக்குவம் என்பது இது தான். சிலர் பார்வையால் தங்கள் தவறுகளை திருத்திக் கொள்வார்கள். மற்றும் சிலர் வார்த்தைகளால் திருந்திக் கொள்ள முனைவார்கள்.
வார்த்தைகளை வெளியிடும்போது பண்பாடும் நாகரிகமும் இருக்க வேண்டும். அசிங்கமும் அருவருப்பு தென்படக் கூடாது. மனைவியின் மானத்தையும் மரியாதையையும் கௌரவத்தையும் பாதுகாக்க வேண்டும். பேச்சில் நிதானம் தவறும்போது கட்டுப்படுத்த முடியாத வார்த்தைகள் வந்துகொண்டே இருக்கும். பிரச்சினைகள் முற்றிவிட இதுவே காரணமாகி விடும். கணவனின் பேச்சில் பொறுமை இழந்த மனைவி, தானும் தன் விருப்பப்படி பேசத் துவங்குவாள். சாதாரணமாக பேசி முடிக்க வேண்டி ஒரு சின்னப் பிரச்சினை வெறுப்புக்கும் மனக் கசப்புக்கும் வழிவகுத்து விடும். அதன் உச்ச கட்டமாக கணவன் மனைவியின் நடத்தைப் பற்றியும் அவளது குடும்பத்தைப் பற்றியும் பரம்பரை பற்றியும் பேசத் துவங்குவான். தப்பு தப்பாக மனைவியைப் பற்றிக் கதைக்கும்போது அவள் தலை குனிந்து போவாள். அவளுடைய மானத்தை ஏலம் போடுவதற்கு இஸ்லாம் ஒருபோதும் கணவனுக்கு அனுமதி வழங்கவில்லை.
அதுபோல் மனைவியை கண்டப்படி அடிப்பதற்கும் அனுமதி வழங்கவில்லை. காயப்படுத்தாத முறையிலும் பாதிப்பு ஏற்படுத்தாத முறையிலும் இலேசாக அடிப்பது என்ற வார்த்தையே கையாளப்படுகிறது என்பதை கவனிக்க வேண்டும். அவளது சுயமரியாதையை கலங்கப்படுத்தாத வகையிலும் பெண்மையை காயப்படுத்தாத வகையிலும் இலேசாக அடிக்க வேண்டுமே தவிர அத்து மீறுவதாகவோ எல்லை மீறுவதாகவோ இருந்து விடக் கூடாது. மிருகத்தனமாக நடந்து கொள்வதாகவும் அமைந்து விடக் கூடாது. மனைவியை பழிவாங்குவதாகவோ அல்லது கணவனின் மீது வெறுப்பை ஏற்படுத்துவதாகவோ அமைந்து விடவும் கூடாது.
திருந்தி வாழ்வதற்கான வழியை காண்பதாகவே இருத்தல் வேண்டுமே தவிர தன் வலிமையை காண்பிப்பதாகவோ வன்முறையை தூண்டுவதாகவோ இருந்து விடவும் கூடாது. மனைவி மார்க்கத்தின் எல்லையை தாண்டும்போதே அடிப்பது என்ற நிலைக்கு வர வேண்டுமே தவிர தன்னுடைய சுய நோக்கங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதற்காக அடிக்க முனையக் கூடாது.
குறிப்பாக மனைவியின் முகத்தில் அறையவே கூடாது. மேனியில் எந்த காயமும் கீறலும் வந்து விடக் கூடாது. மனைவிக்கு அடிப்பது என்பது முதல் தீர்வல்ல. முதலில் அவள் குறையை எடுத்துக் கூறி உபதேசம் செய்ய வேண்டும். அது பயனளிக்காவிட்டால் அவளை படுக்கையிலிருந்து ஒதுக்கி வைத்து திருத்த வேண்டும். அறிவு ரீதியான உளவியல் ரீதியான இத்தீர்வு பயனளிக்காவிட்டால் தான் இலேசாக அடித்து, சேர்ந்து வாழ்வதற்கான கடைசி சந்தர்ப்பம் இது என்பதை புரிய வைக்க வேண்டும். இதுவும் பயனளிக்காவிட்டால் மண முறிவுக்கான வழி பிறக்கும் என்பதை எடுத்து கூற வேண்டும் இந்த ஒழுங்கு விதியை குர்ஆனும் ஹதீஸும் எமக்கு எடுத்துச் சொல்கிறது. மனைவியை அடிக்காமலும் அவளை வெறுத்து ஒதுங்கிக் கொள்ளவும் கணவனுக்கு அனுமதியுண்டு என்பதையும் இங்கே புரிந்துகொள்ள வேண்டும்.
பிரச்சினையின் தன்மையை குறைக்கவும் விவாகரத்தை தடுக்கவும் கணவனின் வீட்டாரையும் மனைவியின் வீட்டாரையும் அழைத்து சமரச முடிவை காணவும் இஸ்லாம் சந்தர்ப்பம் வழங்கியுள்ளது அத்தனையும் பயனற்றுப் போகும் போதே விவாகரத்துக்கான வழியை கைக்கொள்ள வழிகாட்டுகிறது.
உன் மனைவியின் முகத்தில் அடிக்காதே, அவளிடம் இழிவாகப் பேசாதீர். வீட்டிலேயே தவிர வெளியில் அவளைக் கண்டிக்காதீர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: முஆவியா இப்னு ஹைதா (ரழி), நூல்: அபூதாவூத்)
நபி(ஸல்) அவர்கள் தங்கள் மனைவியரை ஒரு போதும் அடித்தது இல்லை முறைகேடாக பேசியதில்லை நடாத்தியதில்லை.
எந்தவொரு பிரச்சினையையும் நாலு பேருக்குத் தெரியாமல் தன்னுடைய அறையில் பேசித் தீர்க்க வேண்டும். வெளியில் பேசும்போது கண்ட கண்ட இடங்களில் முரண்படும்போது சண்டைப் பிடிக்கும்போது இருவருடைய மானமும் மரியாதையும் நாசப்பட்டு விடும்.
சுயமரியாதையைப் பாதுகாக்க வேண்டுமானால் வீட்டினுள்ளேயே தன்னுடைய அறையிலேயே முடித்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் இருவருக்கிடையில் அன்பும் பிணைப்பும் மேலோங்கி வளர்வதுடன் புரிந்துணர்வும் ஒத்துணர்வும் சிறப்பாகக் காணப்படும்.
http://www.islamkalvi.com/?p=105746
No comments:
Post a Comment