Saturday, December 12, 2015

மாமியாரைப் பார்த்து கண்கலங்கி நின்றாள் மருமகள் !

பாசத்தின் வலி ...
ஆமினா உம்மாவின் ஒரே மகன் அஹமது... வயது நாற்பது. மகனின் மீது உம்மாவுக்கு அளவுகடந்த பாசம்...பிள்ளையின் சிறு சங்கடங்களையும் தாங்க முடியாத மனசு ஆமினா உம்மாவுக்கு. கணவர் இறந்த பிறகு மகனை கண்ணும் கருத்துமாக வளர்த்து பாசமும் பண்பும் உள்ள பிள்ளையாக வளர்த்தாள் . மகனுக்கு திருமணமும் செய்து வைத்தாள்...தனக்கு ஒரு மகள் இருந்தால் எப்படி பாசம் காட்டுவாளோ அப்படி ஒரு பாசத்தை மருமகள் மீதும் காட்டினாள். மகன் அஹமதுவுக்கு அரபு நாட்டில் வேலை. வருடத்துக்கு ஒரு முறை ஊருக்கு வந்து ஒரு மாதம் நிற்பான். திருமணமாகி ஏழு வருடங்களுக்குப் பிறகு ஒரு குழந்தை பிறந்தது. அப்துல்லாஹ் என்று பெயர் வைத்தார்கள். வாப்பாவின் மீது குழந்தைக்கு மிகுந்த பாசம். வாப்பா வந்ததிலிருந்து அரேபியா போகும் வரை வாப்பாவை விட்டுப் பிரிய மாட்டான். எப்போதும் கையில் தூக்கி வைத்து அவனை கொஞ்ச வேண்டும்.. அஹமதும் பிள்ளைக்கு முத்தமழை பொழிந்து குழந்தையுடனேயே இருப்பான்.

விடுமுறையில் வந்திருந்த அஹமது தாய்..மனைவி ..மகனோடு சந்தோசமாக பொழுதைக் கழித்தான். வழக்கம்போல் ஒருநாள் அகமதின் மகன் வாப்பாவின் தோளிலும் மார்பிலும் தவழ்ந்து விளையாடினான். நீண்ட நேரத்துக்குப் பிறகும் கீழே இறங்க மறுத்து வாப்பாவின் கையிலேயே இருந்தான். அதை பார்த்துக் கொண்டிருந்த ஆமினா உம்மாவுக்கு கோபம் வந்தது. மகனிடமிருந்து பேரனை அழ.அழ..எடுத்தாள் . சின்னதாக ஒரு அடியும் கொடுத்து, மூணு வயசாகுது...கீழே இறங்கி விளையாடு என்று கடிந்து கொண்டாள் ...தொடர்ந்து வந்த நாட்களிலும் இது போன்ற சம்பவங்கள் நடந்தன. மாமியார் மீது மருமகளுக்கு கோபம் வந்தது. கணவனிடம் ரகசியமாகச் சொன்னாள் , " உங்க உம்மாவுக்கு ..நீங்க பிள்ளையை கொஞ்சுறதே பிடிக்க வில்லை..பிள்ளை உங்ககிட்டே வராமே யாருகிட்டே போகும்..."

அஹமதுக்கும் சங்கடமாக இருந்தது... உம்மாவுக்கு என்னாச்சு? என்மீது உயிரையே வைத்திருக்கும் உம்மாவுக்கு என் பிள்ளையை ஏன் பிடிக்கவில்லை?

அடுத்தநாளும் பேரனை மகனிடமிருந்து எடுக்கும் போது அஹமது கேட்டான்.., "உம்மா ..நான் என் பிள்ளையை கொஞ்சும்போது ஏன் என்னிடமிருந்து பிள்ளையை பறிக்கிறீர்கள்?" சற்று கோபத்தோடு கேட்ட மகனின் முகத்தை கனிந்த கண்களோடு பார்த்த ஆமினா உம்மா சொன்னாள்...

" வாப்பா... நீ உன் பிள்ளையை கொஞ்சுரதுலே எனக்கு வருத்தமில்லே .....சந்தோசம்தான்.... ஆனா ..ரொம்ப நேரம் பிள்ளையை கையில் வச்சிருந்தால் உன் கை வலிக்குமேன்னுதான் பிள்ளையை உன்கிட்டே இருந்து எடுத்தேன்... அவன் உன் பிள்ளையா இருந்தாலும் நீ என் பிள்ளை .... உன் கை வலிச்சா எனக்கு பொறுக்காது...."

கவுணியால் முகத்தை துடைத்து விட்டு போகும் மாமியாரைப் பார்த்து கண்கலங்கி நின்றாள் மருமகள் ....
 Abu Haashima

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails