கையுறை அணிந்து
கழிவகற்றும் சகோதரனே! – உன்
நன்மாராயப் பலகையில்
மெய்யுரை எழுதுகிறாய் நீ!
செத்த பிராணிகள்
சீரழிந்த குப்பைகள்
சாக்கடை சகதி
துர்நாற்ற வீச்சம்
இவை யாவும் – உன்
ஆவேச வீரியத்தின் முன்
வெறும் துச்சம்
சான்றோன் என கேட்டதைவிட
தன் மகனை
சமுதாயக் காவலன் என
சகமனிதன் கூறுவதை கேட்டு
ஈன்ற தாய் உனைப் பார்த்து
பெரிதுவப்பாள்
இளைஞனே! - உன்
கையில் இருப்பது
துடைப்பம் அல்ல….
எதிர்கால விடியலின் அமரதீபம்!
குப்பைகளை அகற்ற - நீ
குனியும் போதெல்லாம்
எங்கள் நெஞ்சன்றோ நிமிர்கிறது!
உன் கால்களில் சேத்துப்புண்.
அது
எதிர்கால இந்தியாவின்
இறையாண்மை தூண்
உன்
அழகிய கைகளில்
அழுகிய கழிவுகள்.
சாக்கடை அசுத்தம் - உன்
மேனியில் மட்டும்தான்
சகோதரா - உன்
உள்ளத்தில் அல்ல..
சகதியில் உழலும்
உன் தேகம் – அது
சன்மார்க்கத்தின்பால்
நீ கொண்ட நேசம்
கூலி இன்றி
நீ செய்யும் களப்பணிக்கு
கூலி அங்குண்டு இங்கல்ல.
அப்துல் கையூம்
[சுத்தம் ஈமானில் (இறை நம்பிக்கையில்) ஒரு பகுதி – நபிகள் நாயகம்]
No comments:
Post a Comment