Monday, November 16, 2015
இஸ்லாம் – தீவிரவாதத்தை கடுமையாக எதிர்க்கும் மார்க்கம்!
இஸ்லாம் – தீவிரவாதத்தை கடுமையாக எதிர்க்கும் மார்க்கம்!
“எவனொருவன் அநியாயமாக மற்றொருவனைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையும் கொலை செய்தவன் போலாவான்”
“எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைத்தவரைப் போலாவார்”
ஆஹா என்ன அருமையான வாசகங்கள் என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா! ஆமாம்! இவைகள் சாதாரண மனிதரின் வாசகங்கள் அல்ல! மாறாக இது, மனித குலம் அனைத்தையும் படைத்த இறைவனான அல்லாஹ் மனிதர்கள் ஈடேற்றம் பெற அவன் இறக்கியருளிய அவனுடைய சத்திய திருவேதத்திலே “அநியாயமாக ஓர் உயிரைக் கொலைச் செய்வதைப்” பற்றி மனிதர்களுக்கு விடுத்த எச்சரிக்கைச் செய்தியாகும்.
சமீப காலத்தில் பெங்களூர் மற்றும் குஜராத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளின் மூலம் அப்பாவி பொதுமக்கள் பலரின் விலை மதிக்க முடியாத உயிர்கள் பறிபோயின. ஈவிரக்கமின்றி ஒன்றுமறியா பொது மக்களை எவ்வித காரணமுமின்றி கொல்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மேற்கூறப்பட்ட வாசங்களுக்கேற்ப மனித சமுதாயத்தையே கொலை செய்தவர்கள் போன்றவர்களாவார்கள். இத்தகைய செயல்களைச் செய்பவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் எத்தகைய மாற்றுக் கருத்தும் இல்லை. அதன் காரணமாகவே கொள்கை வுறுபாடுகள் பல இருந்தாலும் அனைத்து கட்சிகளும், அனைத்து மதத்தினரும் இத்தகைய செயல்களுக்கு கடுமையாக கண்டனம் தெரிவிக்கின்றனர். அது மிகச் சரியான கண்டனமே என்பதிலும் மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை.
ஆனால் இது மாதிரி சமயங்களில் ஒரு சில அறிவிலிகளின் அல்லது எவ்வித கொள்கை கோட்பாடற்ற இயக்கங்களின் செயல்பாடுகளினால் அப்பாவிப் பொதுமக்களின் உயிர்கள் பறிக்கப்படும் போது ஒரு சாராருக்கு மட்டும் அது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. அவர்கள் யார் எனில் உலகின் பல்வேறு திசைகளிலும் வேகமாக வளர்ந்து வரும் இஸ்லாத்தின் வளர்ச்சியைப் பொறுக்க இயலாத இஸ்லாத்தின் எதிரிகள் தான். உலகின் எங்காவது ஒரு மூலையில் ஒரு குண்டு வெடித்து விட்டால் உடனே “இஸ்லாமிய தீவிரவாதிகள்” குண்டு வைத்ததில் அப்பாவி பொதுமக்கள் பலர் பலி! இதை அவர்கள் தங்கள் கைவசம் உள்ள சக்தி வாய்ந்த ஊடகங்களின் வாயிலாக பிரபலப்படுத்தி இஸ்லாத்திற்கு களங்கம் ஏற்படுத்துவதாக நினைத்துக் கொண்டு தங்களுக்குத் தாங்களே பெருமைப்படுகின்றனர். அப்பாவிப் பொதுமக்களின் உயிர்கள் பறிபோனதைப் பற்றியும், அதற்கு உண்மையான குற்றவாளிகள் யார் என்பதைப் பற்றியும் அவர்களுக்கு துளி கூட அக்கறை இல்லை.
அதே சமயத்தில்,
இலங்கையில் குண்டு வெடிப்பின் மூலம் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படும் போது அவ்வாறு குண்டு வைத்தவர்களின் மதத்தைக் கூறி அவர்களை “இந்து தீவிரவாதிகள்” என்றோ,
அல்லது
ஆந்திரா, அஸ்ஸாம், நேபால் போன்ற இடங்களில் தீவிரவாத செயல்களின் மூலம் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படும் போது அவ்வாறு கொன்றவர்களை அவர்களின் மதத்தை முன்னுறுத்தி அவர்களையும் “இந்து தீவிரவாதிகள்” என்றோ,
அல்லது
அயர்லாந்து, ஸ்பெயின், மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் போன்ற நாடுகளில் நடைபெறும் வன்முறைகளினால் மக்கள் கொல்லப்படும் போது அவர்கள் சார்ந்த மதத்தைக் குறித்து அவர்களைக் “கிறிஸ்தவ தீவிரவாதிகள்” என்றோ யாரும் குறிப்பிடுவதில்லை.
பொதுமக்களை ஈவிரக்கமின்றிக் கொல்லும் அத்தகைய தீவிரவாதிகளைப் பற்றிக் குறிப்பிடும் போது அவர்கள் சார்ந்திருக்கின்ற இயக்கத்தின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்கள் “இந்த இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள்” என்றே குறிப்பிடுகின்றனர். இது தான் முறையானது என்பதே நமது கருத்துமாகும். ஆனால் இஸ்லாத்தை கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று கங்ஙனம் கட்டிக் கொண்டு செயல்படுபவர்கள், ஒரு சில அறிவிலிகளின் செயலுக்கு அவர்கள் சார்ந்திருக்கின்ற தூய இஸ்லாமிய மார்க்கத்தையே தீவிரவாத மார்க்கம் என்று முத்திரை குத்தி அதன் மூலம் சத்திய ஜோதியாகிய இஸ்லாத்தை நோக்கி படையெடுக்கும் அவர்களின் கொள்கையைச் சார்ந்தவர்களை தடுத்து நிறுத்த திட்டமிடுகின்றனர். இவர்களின் இந்த திட்டம் என்றுமே பலிக்காது. எனெனில் திட்டமிடுபவர்களுக்கெல்லாம் மேலான திட்டமிடுபவனாகிய அல்லாஹ் தன்னுடைய சத்தியத் திருமறையிலே கூறுகிறான்:
தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் – ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான். (அல்-குர்ஆன் 9:32)
பொதுமக்கள் மத்தியிலே குண்டுகளை வெடிக்கச் செய்து அதன் மூலம் பல அப்பாவி உயிர்களைப் பறிப்பது என்பது மனிதாபிமானம் அறவே இல்லாத செய்ல்களாகும். இந்த மாதிரியான செயல்களைச் செய்பவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. ஏனென்றால் இஸ்லாம் இத்தகைய செயல்களை கடுமையாக எதிர்பதோடல்லாமல் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் எனவும் எச்சரிக்கைச் செய்கிறது. இவ்வித எச்சரிக்கைகளை மீறி செய்பவர் ஒரு உண்மையான முஸ்லிமாக இருக்கமுடியாது. ஆனால் உண்மையான விசயம் என்னவென்றால் இஸ்லாத்தின் எதிரிகளே இத்தகைய செயல்களைச் செய்துவிட்டு அதை முஸ்லிம்களின் மீது போடுகின்றனர். (உதாரணம்: <சமீபத்தில் தென்காசியில் கைதானவர்கள் மற்றும் <மஹாராஸ்திரா மாநிலத்தில் கைதானவர்கள் ). இதற்கு காரணம் சகோதர பாசத்துடன் பழகி வரும் இந்து முஸ்லிம்களுக்கிடையே பகைமையை உண்டு பண்ணி அதன் மூலம் இந்துக்களை முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டிவிட்டு இந்துக்களின் வாக்குகளைச் சேகரிக்கும் மிக கீழ்தரமான அரசியல் நடத்துபவர்களே இவ்வாறு செய்கின்றனர்.
“இஸ்லாம்” என்ற சொல்லே “அமைதி” (Peace) என்ற பொருளைக் கொண்டது. எனவே “அமைதி” மார்க்கமான இஸ்லாத்தில் தீவிரவாதத்திற்கு அறவே இடமில்லை. இதை நாம் கூறவில்லை! மனித குலம் முழுவதையும் படைத்து பரிபாலித்து வருபவனான அல்லாஹ்வே தன்னுடைய திருவேதத்திலே கூறுகிறான்: –
அநியாயமாக ஓர் உயிரைக் கொன்றவன் மனிதர்கள் யாவரையும் கொலைச் செய்தவன் போலாவான்: –
இதன் காரணமாகவே, ‘நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்’ (அல்-குர்ஆன் 5:32)
போரில் கூட பெண்களையும், குழந்தைகளையும் வயதானவர்களையும் கொல்வதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை!
நபி (ஸல்) அவர்கள் கலந்து கொண்ட போர் ஒன்றில் கொல்லப்பட்ட நிலையில் ஒரு பெண் கண்டெடுக்கப்பட்டாள். அப்போது நபி (ஸல்) அவர்கள் பெண்களையும், சிறுவர்களையும் கொல்ல தடை செய்தார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), ஆதாரம் : புகாரி, முஸ்லிம், திர்மிதி, அபூதாவுத், இப்னு மாஜா, அஹ்மத், அல்முஅத்தா.
கொலை செய்யப்பட்டவரின் வாரிசுக்கு நீதி கிடைக்க வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது!
(கொலையை) அல்லாஹ் விலக்கியிருக்க நீங்கள் எந்த மனிதனையும் நியாயமான காரணமின்றிக் கொலை செய்து விடாதீர்கள்; எவரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டு விட்டால், அவருடைய வாரிஸுக்கு (பதிலுக்கு பதில் செய்யவோ அல்லது மன்னிக்கவோ) நாம் அதிகாரம் கொடுத்திருக்கிறோம்; ஆனால் கொலையி(ன் மூலம் பதில் செய்வதி)ல் வரம்பு கடந்து விடக் கூடாது; நிச்சயமாக கொலையுண்டவரின் வாரிசு (நீதியைக் கொண்டு) உதவி செய்யப் பட்டவராவார். (அல்-குர்ஆன் 17:33)
அநியாயமாக கொலை செய்பவனுக்கு கடுமையான தண்டணை இருக்கிறது!
அன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கமாட்டார்கள்; இன்னும், அல்லாஹ்வினால் விலக்கப் பட்ட எந்த மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக் கொல்லமாட்டார்கள், விபசாரமும் செய்ய மாட்டார்கள் – ஆகவே, எவர் இவற்றைச் செய்கிறாரோ, அவர் தண்டனை அடைய நேரிடும். (அல்-குர்ஆன் 25:68)
இஸ்லாத்திற்கும் தற்கொலை குண்டு வெடிப்பிற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை! தற்கொலை செய்வதை இஸ்லாம் கடுமையாக எதிர்க்கிறது: –
அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்; இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்; இன்னும், நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான். (அல்-குர்ஆன் 2:195)
நம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் ஒருவருக்கொருவர் பொருந்திக் கொள்ளும் முறையில் ஏற்படுகிற வர்த்தகம் அல்லாமல், ஒருவர் மற்றொருவரின் பொருட்களை தவறான முறையில் உண்ணாதீர்கள். நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் – நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான்.எவரேனும் (அல்லாஹ்வின்) வரம்பை மீறி அநியாயமாக இவ்வாறு செய்தால், விரைவாகவே அவரை நாம் (நரக) நெருப்பில் நுழையச் செய்வோம்; அல்லாஹ்வுக்கு இது சுலபமானதேயாகும். (அல்-குர்ஆன் 4:29-30)
குண்டு வைப்பவர்கள் சாதி, மத பேதம் பார்த்து குண்டு வைப்பதில்லை! குண்டு வெடிப்பில் அனைத்து மதத்தினருமே கொல்லப்படுகின்றனர்: –
எவனேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான்; இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் (அல்லாஹ்) தயாரித்திருக்கிறான். (அல்-குர்ஆன் 4:93)
நியாயத் தீர்ப்பு நாளில் மனிதர்களிடையே தீர்ப்பு கூறப்படுபவற்றில் முதன்மையானது கொலையைப் பற்றித்தான்!
(மறுமையில்) மனிதர்களிடையே தீர்ப்பு கூறப்படுபவற்றில் முதன்மையானது (கொலை செய்து ஓட்டிய) இரத்தம் பற்றித் தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி), ஆதாரம் : புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸயீ, இப்னு மாஜா, அஹ்மத்.
மேற்கண்ட குர்ஆன் வசனங்களும், நபி மொழிகளும் அநியாயமாக ஓர் உயிரைக் கொலை செய்வதையும், தற்கொலைத் தாக்குதல்கள் நடத்துவதையும் கடுமையாக சாடுவதோடல்லாமல் அவர்களுக்கு நியாயத் தீர்ப்பு நாளில் கடுமையான வேதனையிருக்கிறது என்றும் எச்சரிப்பதை நாம் அறிய முடிகிறது.
எனவே ஒரு உண்மையான முஸ்லிம் ஒருவன் இத்தகைய காரியங்களை நிச்சயமாக செய்ய மாட்டான். அப்படி அவன் இஸ்லாமிய விதிகளை மீறிச் அப்பாவி மக்களைக் கொல்வானாகில் அவனுக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை. மேற்கண்ட இறைவசனங்கள் மற்றும் நபிமொழிகளுக்கேற்ப அந்த செயல் கடுமையான தண்டணைக்குரியது.
ஆனால் இவைகளை நன்றாக அறிந்திருந்தும் மத துவேசிகள் இஸ்லாத்தின் மீது சேற்றை வாரியிறைக்க வேண்டும் என்பதற்காக அவர்களின் செயலோடு இஸ்லாத்தை தொடர்பு படுத்துவது அல்லது தாங்களே தங்களின் கூலிகளின் மூலம் இத்தகைய செயல்களைச் செய்து விட்டு அவற்றை இஸ்லாத்தோடு தொடர்பு படுத்தி முஸ்லிம் தீவிரவாதிகள் செய்ததாக விளம்பரப்படுத்துவது போன்ற செயல்கள் மிகவும் கண்டத்திற்குரியது மட்டுமல்லாமல் மத நல்லிணக்கத்தை குலைப்பதாகவும் இருக்கிறது. நடுநிலையான பெரும்பாண்மை மக்கள் இத்தகைய மத துவேசிகளின் போலி முகமூடிகளைக் கிழித்தெறிவார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்: –
(நபியே!) இன்னும், ‘சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்’ என்று கூறுவீராக. (அல்-குர்ஆன் 17:81)
நன்றி: http://suvanathendral.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment