வாழ்வில் எத்தனைதான் கடந்தாலும் இன்னமும்தான்..... பயணத்தின் படிப்பினையாய் பதிந்த காட்சிகளின் போதனையாய் பட்டென சொல்வதென்றால் மரணம் மாத்திரமே பிரிவு துரோகம் மாத்திரமே தீது தர்மம் மாத்திரமே புண்ணியம் வணக்கம் மாத்திரமே நிம்மதி !
நறுக்கென்று நான்கை சொன்னாலும் இன்னமும்தான்..... வாழ்வினருள் நிறைகளென்று வாழ்பவரும் மனமுணற வீட்டின் அறைக்கதவு திறந்து அசையும் காட்சிகளை அவர்தம் கண்ணசைவில் காண வைத்தால் அங்கே இல்லாளே இறைகொடை நோயில்லாமையே பெருநிறை எளிமையே நிறைவரம் இருப்பதில் நிறைதலே இன்பசுகம் !
எல்லாம்தான் சொன்னாலும் இன்னமும்தான்..... கொஞ்சிய நம் செல்வங்கள் நாம் கெஞ்சாமலே தருகின்ற செல்வமும் இடர் செய்யா உறவுகளும் தொடர்ந்து தோள் நிற்கும் நட்புகளும் கடமையாய் நாம் செய்யும் பணியும் அதில் இதமாய் பயணிக்கும் வாழ்வும் இவையெல்லாமும் புண்ணியம்தான் !
எல்லாமும் இயம்பிவிட்டாலும் இன்னமும்.... ஒன்றிருக்கத்தான் இருக்கிறது.... இன்னொரு முக்கிய பயணத்திற்காக பயணப் பாதை சீராய் அமைய மருகும் அழுகை வேண்டுதலது உயிர் வாங்க வருபவருக்கு உளமாற கொடுத்திடும் திண்ணம் திடமாய் கலிமா மொழிந்திடும் மரணம் கல்பு நிறைந்திடும் கபனடக்கம் வந்திறங்கும் இரட்டையரின் உருட்டலில்லா கேள்விகளுக்கு புரட்டலில்லா பதிலுரைத்து அங்கே இருக்கும் வரை இவ்வுலகு அழியும் வரை சுவனக்காற்று அங்கே வீசிட அவனையே கேட்டு வைப்போம் “அருள் மழை பொழிவாய் ரஹ்மானே” !
No comments:
Post a Comment