சிறுவயதினரின் பெருநாட்கள் பூரிப்பு மிக்கவை ....
வளர்ந்தபின்னரே வருவது வேலைபளு மிக்கவை ....
அவர்களுக்கானதை கொடுத்துவிட்டு பாருங்கள் ...
ஒருகோடி புன்னகைகள் மின்னிக்கொண்டிருக்கும் ...
அலங்கரித்து ஆர்வமாக ஓடியாடி திரிதலெல்லாம் ...
சொற்ப காலங்கள்தான் ...சோதித்துவிடாதீர்கள் ...
பொடிசுகளை அழைத்து விருந்து கொடுங்கள் ...
பொடிசுகளை அழைத்து அன்பளிப்பு கொடுங்கள் ...
பொடிசுகளை அழைத்து அளவளாவுங்கள் ....
பொடிசுகளை அழைத்து முத்தமிடுங்கள் ...
சென்ற நாட்களெல்லாம் திரும்பி வரப்போவதில்லை ..
செல்லும் நாட்களுக்கு பெருமை சேருங்கள் ...
குட்டி செல்லங்களின் பெருநாட்கள்தான்
கவலைகளற்றவை ...கலகலப்பானவை ...
மருதாணி பூசி இலுப்பிக்கொண்ட இரவுகள் ...
கண்களை திறக்கமுடியாமல் தூக்கத்திலேயே ..
தலைக்கு குளித்துக்கொண்ட விடியல்கள் ...
சிவந்த கைகளுடன் விண்டு தின்ற காலை பசியாறல்கள் ..
மாற்றி மாற்றி கலைத்துப்போட்டு ..
உடுத்தும் புதுத்துணிகள் ...ஒருநாளைக்கு பலமுறை ...
புது பர்சில் பெருநாள் பணங்களை பத்திரப்படுத்தி ..
பெருநாள் கொல்லைகளில் ராட்டினம் சுற்றி ...
ஓ ''வென்று கத்தி ...தலை சுற்றி ....
சர்பத்தையும் ,கோன் ஐஸையும் நக்கி ...
அடாத பாடெல்லாம் படுத்தி அசந்துபோய் ...
கண்களில் வளையமிட்டு ...வியர்த்து வழிந்து ...
கசங்கி தொங்கின பூச்சரங்களுடன் ...
வலிக்கும் கால்களின் அசதியுடன் வீடு .வந்து ....
வேஷம் கலைத்தும் ,கலைக்காமலும் ...
விழுந்து உறங்கும் அந்தக்காலம் ...
மீண்டும் வரப்போவதில்லை ....
ரசித்து ,சந்தோஷிக்க விடுங்கள் அவர்களை ...
நாமும் அவர்களாக மாறிப்போவோம் .....
---- பிள்ளைகளின் பெருநாட்கள் ....
J Banu Haroon
No comments:
Post a Comment