Monday, November 13, 2017

மனக்குழப்பத்திலிருந்து விடுதலை !

மாநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மனமென்பது (செடிகொடிகள் இல்லாத) கட்டாந்தரையில் விழுந்த இறகு போல, காற்றின் அலைகள் அதை உள்ளும் புறமுமாக புரட்டிப்போடுகிறது.(அறிவிப்பாளர் : அபூமூஸா (ரளி)
நூல் : அஹ்மது)

எத்தனை அழுத்தமும் சத்தியமும் நிரம்பிய உதாரணம் இது. நம் வழக்கில் உள்ளபடி மனமென்பது ஒரு குரங்கு என்று கூறிக்கொள்வதுண்டு. குரங்கையாவது கயிற்றால் கட்டிப் போடவும் குச்சியால் கட்டுப்படுத்தவும் இயலும். ஆனால் உதிர்ந்த - அதுவும் கட்டாந்தரையில் விழுந்த இறகை! வீட்டின் திண்ணைகளில், பள்ளிவாசலின் வராண்டாக்களில், தர்காக்களின் வளாகங்களில் மனப்பிறழ்வும், சிதைவும் ஏற்பட்ட மனிதர்களை சந்தித்ததுண்டா? அவர்களின் உள்ளங்களை புரட்டிப்போட்டுக்கொண்டிருக்கும் குழப்பங்களை சற்றே மனக்கண்முன் கொணர்ந்தால் மாநபி (ஸல்) அவர்களின் உதாரணத்தின் உண்மை நிலையை உணர முடியும்.

ஆனால் அவர்களின் வாழ்வையே புரட்டிப் போட்டிருக்கும் இந்நிலைக்கான காரணங்கள் குறித்து நாம் யோசித்துப் பார்த்ததுண்டா?


மாநபி (ஸல்) அவர்களின் மற்றொரு கூற்று இப்படிக் கூறுகிறது. நிச்சயமாக அல்லாஹ் என்னுடைய சமுதாயத்தினரை அவர்கள் செய்யாதவற்றின் மூலமும், பேசாதவற்றின் மூலமும் அவர்களின் மனங்கள் குழப்பமடையும் நிலையிலிருந்து காப்பாற்றிவிட்டான்.
(அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரளி),
நூல் : புகாரி)

இதுதான் மனநோயின் ஆரம்பகட்ட நிலையை உணர்த்தும் உன்னதக் கூற்று. நாம் செய்தவற்றின், பேசியவற்றின் மூலம் ஏற்படும் குற்ற உணர்ச்சியும், பின்னணியாக அமைந்த காழ்ப்பு ணர்ச்சியும் இன்ன பிற உணர்வின் அலைகள் அடுக்கடுக்காய் மோதும் போது அந்தப்பிஞ்சு நெஞ்சம் எங்கு புகும் தஞ்சம்!

இத்தகைய செயல்பாடுகளின், சொல்லாடல்களின் பின்னணியில் தூண்டுகோலாகத் திகழ்ந்தவை பற்றியும் மாநபி (ஸல்) தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
நிச்சயமாக இப்லீஸ் தனது ஆட்சி பீடத்தை தண்ணீரின் மீது அமைத்துக் கொண்டு தனது படையினரை, மனிதர்களை வழிகெடுக்குமாறு ஏவி அனுப்புகிறான். (அவர்கள் தங்கள் வேலைகளை முடித்துக் கொண்டு திரும்பி வந்தவுடன் அவர்களின் செயல்பாடு குறித்து விசாரணை செய்கிறான்.)

அவர்களில் ஒருவன் நான் இப்படிச் செய்தேன். அப்படிச் செய்தேன்! என்று (சாதனைகள் பலவற்றை) கூறுகிறான். அதற்கு நீ ஒன்றுமே செய்யவில்லை என்கிறான் இப்லீஸ்.

வேறொருவன் வந்து தனது செயல்பாட்டைக் கூறுகிறான். நான் ஒரு மனிதனை (சந்தித்தேன். அவனது குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி) அவனையும் அவன் மனைவியையும் பிரிக்கும் வரை விட்டு விடவில்லை என்கிறான். அப்பொழுது இப்லீஸ் நீதான் சரியான ஆசாமி, சபாஷ்! என்று கூறியவனாக தன்னருகில் அழைத்து அணைத்துக் கொள்கிறான்.
(அறிவிப்பாளர் : ஜாபிர் (ரளி),
நூல் : முஸ்லிம்)

குடும்பங்களில் நிலவும், சுயநலம், சந்தேகம், பொறாமை, அவமானப்படுத்தல் இன்னும் சொல்லப்போனால் வரதட்சணை, பெண் கொடுமை, பாலியல் வக்கிரம் - இன்னபிற அசிங்கங்கள் அனைத்துக்கும் இப்லீஸின் தீய தூண்டு கோலே காரணமாக அமைகிறது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களில் பெரும் பாலானவர்கள் குடும்ப உறவில் ஈடுபட்டவர்களாகவும் குறிப்பாக, குடும்பப் பெண்களாகவும், அல்லது குடும்பங்களில் நிலவும் அக்கிரமங்களை கண்டு அச்சமடைந்த கன்னிப் பெண்களாகவும் இருக்கும் நிலையின் காரணம் என்னவென்பதை இந்த நபி மொழி தெளிவுபடுத்தி விடுகிறது.

திருக்குர்ஆன் மற்றொரு கோணத்தில் ஷைத்தானின் மனக்குழப்பத் தூண்டுகோலை தெளிவுபடுத்துகிறது.

அல்லாஹுதஆலா கூறுகிறான்:
"அந்த ஷைத்தான் வறுமை (பற்றிய அச்சத்தை) ஏற்படுத்துகிறான். மானக் கேடானவற்றை உங்களிடம் ஏவுகிறான்." (குர்ஆன் 2:268)

மற்றொரு குழப்பம் இருக்கிறது. அதை மாநபி (ஸல்) அவர்கள் மகா குழப்பம் என்று வர்ணிக்கிறார்கள்.
எனக்குப் பின்னால் ஆண்களுக்கு பெண்ணின் மூலமாக ஏற்படும் குழப்பத்தைவிட மிகவும் இடையூறு செய்யும் வேறு எதையும் நான்விட்டு விடவில்லை. (அறிவிப்பாளர் : உஸாமா பின்ஜைது (ரளி), நூல் : புகாரி)

உலகம் எங்கும் உலவும் காதல் பைத்தியக்காரர்கள். அவர்களின் உளறல்கள், நடவடிக்கைகள் உறுதியாக அவர்கள் மனநோயினால் பாதிக்கப்பட்டவர்கள், இப்லீஸின் கைப்பாவைகளாக உலவுபவர்கள் என்பதை இந்த ஹதீஸ் உறுதி செய்கிறது.
தற்கொலை செய்து கெண்டவர்களின் பட்டியலை செய்தித் தாள்களில்  பாருங்கள்.  மேற்கூறப்பட்ட  சூழ்நிலைகளின் கைதிகளாக அவர்கள் உலவிய நிலை உறுதி செய்யப்படும்.

மாநபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் கேட்டார்: நான் தொழுகையில் என்னை வலிய ஈடுபடுத்தினாலும் (மனக் குழப்பம்) அதிகமாகவே செய்கிறது. (நான் என்ன செய்வது எனக் கேட்டபோது) மாநபி (ஸல்) அவர்கள் உனது தொழுகையி (லிருந்து திரும்பிவிடாமல் அதி) லேயே ஈடுபடு! தொழுகை யிலிருந்து திரும்பும் வரை அதுவும் (மனக் குழப்பம்) உன்னை விட்டுப்போகாது. ஆனால் நீ (ஷைத்தானிடம்) சொல்லிக்கொள்! நானும் எனது தொழுகையை விடப் போவதில்லை என்பதாக.(அறிவிப்பாளர் : காசிம் பின் முஹம்மது (ரஹ்), நூல்: மாலிக்)

மனக்குழப்பத்திற்கு மருந்து மனதோடு போராடுவதுதான். ஷைத்தான் ஏற்படுத்திய நோய்க்கு அல்லாஹ் தருவதைத்தானே மருந்தாக உட்கொள்ளமுடியும் !.

#முஸ்தஃபா_காசிமி

("எண்ணத்தின் வண்ணங்கள்" தொகுப்பிலிருந்து...)

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails