Thursday, January 10, 2019

*இறைவன் கணக்கு:*○☆


ஒரு கோவில் மண்டபத்தின் வாசலில் இரண்டு வழிப்போக்கர்கள்  அமர்ந்திருந்தனர்.

இரவு நேரம்…, பெருத்த மழை வேறு...,

அப்போது அங்கே மற்றொருவரும் வந்து சேர்ந்தார்.

வந்தவர் "நானும் இரவு இங்கே தங்கலாமா என்று கேட்டார்.

அதற்கென்ன? தாராளமாய் தங்குங்கள் என்றார்கள்.

சிறிது நேரம் கழித்து எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா? என்றார் வந்தவர்.


இருவரில் முன்னவர் சொன்னார்,
என்னிடம் ஐந்து ரொட்டிகள் இருக்கின்றது என்றார்.

இரண்டாமவர் என்னிடம் மூன்று ரொட்டிகள் இருக்கின்றது என்றவர்,

ஆக மொத்தம் எட்டு ரொட்டிகள்,
இதனை நாம் எப்படி மூவரும் சமமாய் பிரித்துக்கொள்ள முடியும்? என்றார்.

மூன்றாம் நபர், இதற்கு நான் ஒரு வழி சொல்கிறேன், என்றார்.
☆( தேவை உள்ளவன்தான் தீர்வு சொல்வான்!)☆

நீங்கள் உங்கள் ரொட்டிகளை,
ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று துண்டுகள் போடுங்கள். இப்பொது இருபத்து நான்கு துண்டுகள் கிடைக்கும்!
நாம் மூவரும் ஆளுக்கு எட்டு துண்டுகள் எடுத்து கொள்ளலாம் என்றார்.

இது சரியான யோசனை என்று அப்படியே செய்தனர்…

ஆளுக்கு எட்டு துண்டு ரொட்டிகளை சாப்பிட்டுவிட்டு உறங்கினார்கள்...

பொழுது விடிந்தது, மழையும் நின்றது.

மூன்றாவதாய் வந்தவர் கிளம்பும்போது, உங்கள் உதவிக்கு மிக்க நன்றி,  என்று சொல்லி எட்டு தங்க நாணயங்களை கொடுத்து, நீங்கள் உங்களுக்குள் பிரித்துக்கொள்ளுங்கள், என்று சொல்லிவிட்டு விடை பெற்றார்.

மூன்று ரொட்டிகளை கொடுத்தவர்,
அந்த காசுகளை சமமாகப்பிரித்து,
ஆளுக்கு நான்காய் எடுத்துக்கொள்ளலாம் என்றார்.

மற்றவர் இதற்கு சம்மதிக்கவில்லை.

மூன்று ரொட்டிகள் கொடுத்த உனக்கு மூன்று காசுகள். ஐந்து ரொட்டிகள் கொடுத்த எனக்கு ஐந்து காசுகள் என்று வாதிட்டார்.(3:5)

மூன்று ரொட்டிகள் கொடுத்தவர் ஒப்புக் கொள்ளவில்லை, என்னிடம் மூன்றே ரொட்டிகள் இருந்தபோதும், நான் பங்கிட சம்மதித்தேன்…

நிறைய இருப்பவன் கொடுப்பது ஒன்றும் பெரிய செயல் ஆகாது. அதனால் என் செய்கையே பாராட்டத்தக்கது, என்றாலும் பரவாயில்லை, சமமாகவே பங்கிடுவோம் என்றார்.

சுமுகமான முடிவு எட்டாததால், விஷயம் அரச சபைக்கு சென்றது. அரசனுக்கு யார் சொல்வது சரி, என்று புரியவில்லை. நாளை தீர்ப்பு சொல்வதாய் அறிவித்து, அரண்மனைக்கு சென்றான்.

மன்னருக்கு இரவு முழுவதும் இதே சிந்தனை. வெகு நேரம் கழித்தே தூங்க முடிந்தது…மன்னருக்கு, கனவில் கடவுள் காட்சி அளித்து, தீர்ப்பும்,விளக்கமும் தந்தார். கடவுள் சொன்ன தீர்ப்பும், விளக்கமும் மன்னரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அடுத்த நாள் சபை கூடியது.

மன்னர் இருவரையும் அழைத்தார்.

மூன்று ரொட்டிகளை கொடுத்தவருக்கு ஒரு காசும், ஐந்து ரொட்டி கொடுத்தவருக்கு ஏழு காசுகளும் கொடுத்தார்.

ஒரு காசு வழங்கப்பட்டவர், "மன்னா...!  இது அநியாயம். அவரே எனக்கு மூன்று காசுகள் கொடுக்க ஒப்புக் கொண்டார்" என்றார்.

அரசர் சொன்னார். நீ கொடுத்தது ஒன்பது துண்டுகள். அதிலும் எட்டு துண்டுகள் உன்னிடமே வந்து விட்டது.

அவன் தந்தது பதினைந்து துண்டுகள்.
அவனுக்கும் எட்டுத்துண்டுகள்தான் கிடைத்தது.

ஆக நீ தருமம் செய்தது ஒரு துண்டு ரொட்டி. இதற்கு இதுவே அதிகம் .

அவர் தருமம் செய்தது ஏழு துண்டுகள்.
ஒரு துண்டுக்கு ஒரு காசு வீதம் பிரித்துக் கொடுத்திருக்கிறேன்(1:7) என்றார்...

ஆம் ! கடவுளின் கணக்கு இப்படி துல்லியமாகத்தான் இருக்கும்…

நீங்கள் இழந்ததை எல்லாம் தருவது அல்ல, அவன் கணக்கு...

எது உங்களுக்கு தகுதியானதோ அதுதான் உங்களுக்கு.

இது கடவுளின் கணக்கு...

இது கடவுளின் ஏட்டு கணக்கு இல்லை...

தர்ம புண்ணிய கணக்கு...!

☆☆நாம் செய்யும் செயலில் இறைவன் இருக்கிறார் என்பதை மறவாதீர்கள்.
முழுமையாக தன்னை சேவைக்கு அர்பணித்துக் கொண்டவர்களை இறைவன் அறிவான்.☆☆

படித்ததில் பிடித்தது😁

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails