கண்கள் குளமாகி நெஞ்சம் ரணமாகி.... ........முஹர்ரம் மாதத்தின் பத்தாம் பிறை வெள்ளிக்கிழமை நண்பகல். கடுமையான சூரிய மழையில் நனைந்து,வியர்வை
வெள்ளத்தை வடித்துக்கொண்டிருந்தது இமாம் ஹுசைனின் உடல். தாங்கிக்கொள்ள
முடியாத உயிரிழப்புகள் எல்லாம் கண்முன்னால் நிகழ்ந்துவிட்ட
கொடூரத்தை எண்ணி கண்களிலிருந்து கண்ணீரும் எதிரிகளின் அம்புகள் பாய்ந்த
புன்களிலிருந்து செந்நீரும் வழிந்து கொண்டிருந்த இமாம் ஹுசைனின்
தலையின்மீது வாளால் வெட்டினான் - நரகத்திற்கு செல்ல ஆசைப்பட்ட மாலிக் பின்
சபர் என்பவன். இமாம் ஹுசைனின் உச்சந்தலையில் ஆழமாக இறங்கியது
வாள்.கொப்பளித்து வந்த ரத்தத்தில் ஹுசைனின் முகம் ஒழுவெடுத்துக்
கொண்டிருந்தது. உடலெங்கும்
எதிரிகள் வீசிய நூற்றுக்கணக்கான அம்புகள் பாய்ந்து வழிந்த ரத்தத்தில்
ஹுசைனின் பூவுடல் குளியல் நடத்திக்கொண்டிருந்தது.
"கொல்லுங்கள் ஹுசைனை" - குரைத்து, குரைத்து
கூப்பாடு போட்டான் வெறியன் ஷிம்ரு. யஜீதின் படையினர் வேட்டை நாய்களைப்போல
இமாம் ஹுசைனின் மீது பாய்ந்து தாக்க ஆரம்பித்தனர்.ஒரு அம்பு ஹுசைனின்
கழுத்தில் பாய்ந்தது.சிரமப்பட்டு அதனைத் தூக்கி எறிந்தார் ஹுசைன். ஜுராப்
பின் ஷரீக் தமீமி என்ற தீப்பிடித்தவன் தனது வாளால் ஹுசைனின் வலது கரத்தை
வெட்டினான்.கழுத்திலும் தாக்கினான். மாநபி(ஸல்)
அவர்களின் மடியில் வளர்ந்த செம்மல்,மரணத்தின் வேதனையோடு மண்ணில் மல்லாந்து விழுந்தபோது,மாவீரர் மார்பில் வேகத்தோடு வந்து ஈட்டியால் குத்திக் கிழித்தான் சினான் பின் நஜமீ என்ற ஈனன். குற்றுயிரும் கொலையுயிருமாக
துடித்துக்கொண்டிருந்த பாத்திமா(ரலி) பெற்றெடுத்த பிள்ளை ஹுசைனின் கழுத்தை, நரியைபோல்
நெருங்கிவந்த நாசக்காரன் ஷிம்ரு தனது வாளால் அறுத்தெடுத்து அநியாயத்தின்
உச்சக்கட்டத்தை அரங்கேற்றம் செய்தான். மனித உருவத்திலிருந்த யஜீதின் ராணுவ
மிருகங்கள் ஹுசைனின் ஆடைகளையெல்லாம் உரிந்து
போட்டார்கள்.பதவி வெறிபிடித்த சஅது பத்து குதிரைப்படை வீரர்களை அனுப்பி
தலை அறுக்கப்பட்ட ஹுசைனின் உடல்மீது குதிரைகளை ஏற்றி சிதைக்கச் செய்தான்.
இமாம் ஹுசைனின் அறுத்தெடுக்கப்பட்ட தலையோடு அவரது
குடும்பதுப் பெண்கள் அனைவரும் கூபா ஆளுநர் இப்னு ஜியாதின் முன் இழுத்துச் செல்லப்பட்டனர். கீழ்பிறப்பினும் இழிபிறப்பான இப்னு ஜியாத், இமாம் ஹுசைனின் துண்டிக்கப்பட்ட தலையை பார்த்துப் பார்த்து ரசித்தான். தட்டின்மீது வைக்கப்பட்டிருந்த ஹுசைனின் இதழ்களை," இதில்தான் நபிகள் முத்தமிட்டார்களா?" எனக்கேட்டு க்கொண்டே
தன் கையிலிருந்த பிரம்பால் அடித்து அவமானப்படுத்தினான். இதயமே இல்லாத அந்த
ஓநாயின் செயலால் ஆத்திரப்பட்ட ஜைத் பின் அர்கம் என்ற பெரியவரை
துன்புறுத்தினான்.
அப்துல்லாஹ்
இப்னு ஹபீப் அஸ்தி என்பவரை கொன்று போட்டான். கர்பலா போர் முடிந்து
பலநாட்கள்வரை இமாம் ஹுசைனின் உடலையும் அவரைச் சேர்ந்தவர்களது உடலையும்
யாரும் அடக்கம் செய்யவில்லை.சில தினங்கள் கழிந்தபிறகே பக்கத்து கிராம
மக்கள் ஒன்று சேர்ந்து அந்த
உடல்களை நல்லடக்கம் செய்தனர்.
கைதிகளாகிநின்ற
பெருமானார் வீட்டுப்பெண்களிடம் இப்னு ஜியாத் மிகக்கேவலமாக நடந்துகொண்டான்.
சிறுவர் ஜைனுல் ஆப்தீனையும் கொல்லத்துடித்தான். (ஜைனுல் ஆப்தீன்,இமாம்
ஹுசைனின் உயிர் தப்பிய ஒரே
மகன்.) பின்னர் மனம் மாறி அவர்கள் அனைவரையும் யஜீதிடம் அனுப்பி வைத்தான்.
இமாம் ஹுசைனின் துண்டிக்கப்பட்ட தலையை ஈட்டியில் சொருகி ஜுகர் பின் கைஸ்
என்பவனிடம் கொடுத்து டமாஸ்கசிலிருந்த யஜீதுக்கு அனுப்பி வைத்தான்.
ஈட்டியில்
சொருவப்பட்ட இமாம் ஹுசைனின் தலை கூபா வீதிகளில் ஊர்வலமாக
எடுத்துச்செல்லப்பட்டு யஜீதுக்கு அனுப்பப்பட்டது.யஜீதின் அரண்மனை வாயிலில்
பொதுமக்கள் பார்வைக்காக ஹுசைனின் தலை காட்சிப் பொருளாக்கப்பட்டது. கர்பலா -
அது போர்க்களமல்ல! நபிகள்(ஸல்)அவர்களின் வழித்தோன்றல்களை கொன்றுபோட்ட
கொலைக்களம். முஆவியாவின் மகன் யஜீதின் அடக்குமுறைக்கும்
ஆசைகாட்டலுக்கும் அடிபணிந்து அண்ணல்நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தாரை
நம்பவைத்து,நம்பிக்கை துரோகம் செய்து,நயவஞ்சகமாக,கொடூரமாக,படு கொலை
செய்த கூபாவாசிகளும் ஈராக் மக்களும் நிம்மதியாக வாழ முடியவில்லை -
இன்றுவரை! அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன். அவனுக்கே எல்லாப்புகழும்!
......- அபூஹாஷிமா எழுதிய "உத்தம நபிகளின் உண்மைத் தோழர்கள் " என்ற
நூலிலிருந்து... இன்று - முஹர்ரம் பிறை பத்து!
by mail from maraim hasan
No comments:
Post a Comment