Wednesday, December 7, 2011

கவிதை என்பது

கவிதைகள் என்பது:

உயிரின் மீது பதியும்
உயிரெழுத்து
மெய்யின் புலன்களை
மெய்யாகவே புலன்விசாரணை
செய்யும் மெய்யெழுத்து
நிராயுதபாணிகளான
நியாயவான்கட்கு
ஆயுதமாய்க் காக்கும்
ஆயுத எழுத்து

கேள்விக்குறியாய்
கூனிவிட்ட சமுதாயத்தை
ஆச்சர்யக் குறியாய்
ஆகாயமாய்ப் பார்த்திட
ஆன்மபலம் ஊட்டும்
கவிதைகள் யாவும்
பொய்மைகள் அல்ல;
ஈற்றெதுகையில் மிளிரும்
இறைமறையும்
இலக்கிய நடையால்
இதயத்துக்குள் உறையும்
பெருமானார் முஹம்மத்(ஸல்)
அருள்மொழிகள் யாவும்
புதுநடையில் போதிக்கும்
புரட்சிகளாய் சாதிக்கும்


செய்யுளின் யாப்புத்தறியில்
பொய்யாமொழிப் புலவன்
நெய்து தந்த  திருக்குறள்
மெய்”மை” தானே
சாயம் போகவில்லையே!!

மரபுக்கடலில்
மூச்சடக்கி
முத்துக்குளிப்போரும் உளர்;
புதுநதியில் நீந்தி
புரட்சிப் படைப்போரும் உளர்

அழிக்க முடியாத
உண்”மை” களால்
கிழிக்க முடியாத
எண்ணத்தாளில் 
கூராக எழுதும்;


சமுத்திரமாய்ப் பொங்கும்
சமுதாயப் பிரளயங்களை
சிரட்டை அளவேனும்
சிரத்தையுடன் அள்ளித்
தடுக்கும்

”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி(இருப்பிடம்)

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails