Wednesday, December 28, 2011

சிறுபான்மை மாணவர்களுக்குத் தொழிற்கல்வி உதவிதொகை!

"தொழிற்கல்வி உதவித் தொகை பெறும் சிறுபான்மை மாணவர்கள் 31-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்" என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:

தொழிற்கல்வி பயிலும் சிறுபான்மையினர் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க இறுதி நாள் 31.12.2011. சிறுபான்மையின நலத்துறை ஆணையர் தகவல் மத்திய அரசால் அறிமுகப் படுத்தப்பட்ட தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டம் கடந்த 2007 ஆம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.



இத்திட்டத்தில் சிறுபான்மையினர்களாக கருதப்படும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், சீக்கியர் மற்றும் புத்த மதத்தைச் சார்ந்தவர்கள் பொறியியல், மருத்துவம், வேளாண்மை பொறியியல், கால்நடை மருத்துவம், சட்டம், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., போன்ற தொழிற்கல்வி/தொழில்நுட்பக் கல்வியில் இளங்கலை, முதுகலை நடப்பாண்டில் பயில்பவராக இருத்தல் வேண்டும்.

கடந்த 2008-09, 2009-10, 2010-11 ஆம் ஆண்டில் புதிய கல்வி உதவித்தொகை பெற்றவர்கள் நடப்பாண்டில் (2011-12) புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு முந்தைய ஆண்டு இறுதித் தேர்வுகளில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்று குறைந்தபட்சம் 50 விழுக்காடு மதிப்பெண்கள் (மற்றும்) பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்குமிகாமல் பெற்றிருக்கும்பட்சத்தில் புதுப்பித்தல் கல்வி உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் ஆவர்.

படிப்புக் கட்டணம் அதிகபட்சம் ரூ.20,000 மற்றும் பராமரிப்பு கட்டணம் விடுதியில் தங்கிப்பயில்வோருக்கு ரூ.1,000 வீதம் 10 மாதங்களுக்கு ரூ.10,000-ம், விடுதியில் தங்காமல் பயில்வோருக்கு ரூ.500 வீதம் 10 மாதங்களுக்கு ரூ.5,000மும் வழங்கப்படும். மாணவ-மாணவியர்கள் இணையதளத்தின் வழியே (www.monascholarship.gov.in) புதுப்பித்தல் கல்வி உதவித் தொகை விண்ணப்பத்தினை 31.12.2011  குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அதனை மாணவ- மாணவியர்கள் தங்கள் பயிலும் கல்வி நிலையத்திற்கு ஆன்லைன் மூலமாக அனுப்புதல் வேண்டும். தவிர, ஆன்லைன் மூலம் பதிவுச் செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் (மற்றும்) தேவையான சான்றிதழ்களுடன் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

மேற்படி உதவித்தொகை பெற தகுதிபெற்ற மாணவர்கள் இதுநாள்வரை விண்ணப்பிக்காதிருந்தால் மேற்படி கல்வி உதவித் தொகை விண்ணப்பங்களை 31.12.2011க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு சிறுபான்மையின நலத்துறை ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார்.

- க.கா.செ

Source : http://www.inneram.com/

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails