இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றான நோன்பின் மாண்புகளை ஐக்கிய அமீரகத்தில் வசிக்கும் பிற சமூக மக்களிடையே அறிமுகப்படுத்தி, நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் வலுப்படுத்தும் வகையில், "ஒருநாள் நோன்பு மற்றும் இஸ்லாத்தை அறிந்து கொள்ளும் கலந்துரையாடல் நிகழ்ச்சி" க்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.
எதிர் வரும் ஜூலை 28, 2013 (இவ்வருட ரமளான் பிறை 19) ஞாயிறு அன்று ஒரு நாள் முழுவதும் நடக்கவிருக்கும் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ள Dubai Festival and Retail Establishment (DFRE), சமூக வலைத்தளங்கள் மூலம் இந்த ஒரு நாள் நிகழ்ச்சிக்கான பிரத்யேகப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இஸ்லாம் மற்றும் நோன்பு பற்றிய அடிப்படைகள், நோன்பு வைப்பது எப்படி, நோன்பின் மூலம் உடலுக்கும் உள்ளத்திற்கும் ஏற்படும் நல்ல மாற்றங்கள் ஆகியவை அழகிய கலந்துரையாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.
"நோன்பு என்றால் வெறுமனே உணவு உண்ணாமல் நீர் அருந்தாமல் பட்டினி கிடப்பது தானே என்ற பிற மத நண்பர்களின் எண்ணத்தைத் தாண்டி, நோன்பின் மகத்துவத்தை அவர்களுக்கு எடுத்துரைத்துப் புரிய வைப்பதே இந்த ஒரு நாள் நிகழ்ச்சியின் நோக்கம்" என்று குறிப்பிட்டுள்ளார் இந்நிகழ்ச்சியின் மேற்பார்வையாளரான கதீஜா துர்க்கி. மேலும் "நோன்பு என்பது எவ்வாறு ஒரு மனிதனின் சகிப்புத் தன்மையை அதிகரித்து, கவனச் சிதறல்களைக் குறைத்து, உணர்வுகளைக் கட்டுப்படுத்துகிறது ஆகிய விஷயங்கள் இந்நிகழ்ச்சியில் பிற மதத்தினருக்கு, செயல்முறை வடிவில் காண்பிக்கப்படும்!" என்றார் கதீஜா.
இந்த அறிவிப்பு, அமீரகத்தில் வசிக்கும் பல்சமய மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பல வருடங்களாக முஸ்லிம்கள் நோன்பிருப்பதைக் கண்டிருந்தாலும் வாழ்வில் முதல் முறையாக அவர்களைப் போன்றே தாமும் ஒருநாள் நோன்பிருக்க வாய்ப்பு கிடைத்திருப்பது தங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று பரவலாகத் தெரிவித்துள்ளனர்.
துபையின் International Convention and Exhibition Centre - Dubai World Trade Centre இல் நடக்கவிருக்கும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும் பிற மத சகோதர சகோதரிகள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: + 971 4 445 5663 (அனுமதி முற்றிலும் இலவசம்)
இடத்தினை அறிய:http://www.dubaicalendar.ae/en/googlemap/latitude/25.227733/longitude/55.288427/zoomlevel/12
மதத்தை வியாபாரமாக்கிப் பிழைக்கும் அரசியல்வாதிகள், சுய லாபத்திற்காக சமூகங்களுக்கிடையே அச்சமூட்டி பகையை வளர்த்து சகோதரத்துவத்தை படுகுழியில் தள்ளும் நிலையும், மக்களின் அவசர வாழ்க்கை முறையில் மனங்களுக்கிடையான இடைவெளிகள் அதிகரித்துமுள்ள இன்றைய சூழலில் இது போன்ற பரஸ்பரப் புரிந்துணர்வு நிகழ்ச்சிகள் அவசியமான ஒன்று.
இந்திய அரசியல்வாதிகள் ஓட்டுப் பொறுக்குவதற்காக, வருடத்தில் நோன்பு மாதத்தின் ஒரு நாள் மாலையில் தலையில் குல்லா மாட்டிக் கொண்டு நோன்புக் கஞ்சி சட்டியோடு உலக ஊடகங்களுக்கு புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளும் நல்லிணக்க நாடகங்களுக்கு இடையில் ஒரு நாள் முழுவதும் நடைபெறும் இத்தகைய நோன்புப் பயிற்சி மற்றும் புரிந்துணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி வரவேற்கத்தக்கது.
இஸ்லாத்தின் மாண்புகளை எடுத்துரைத்து பிற மதத்தினருக்கு அழைப்பு விடுக்கும் தூய எண்ணத்துடன் இது போன்ற Workshop கள் நடத்தப்படுமானால் இதன் மூலம் பலர் இஸ்லாத்தை அறிந்து தெளிய வாய்ப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
- அபூ ஸாலிஹா
Source : http://www.satyamargam.com/
No comments:
Post a Comment