முதல் மகளே
நீ
மூத்த பெண்ணானாய்!
வாப்பா என்ற
முதல் விளிப்பில்
மனிதனாய் எனை
முழுமைப் படுத்தினாய்
வாழ்வின் அர்த்தத்தை
வலிமைப் படுத்தினாய்!
வீடு முழுவதும்
ஊடுருவினாய் - நீ
இல்லத்தில் இல்லாத
நேரத்திலும் - என்
உள்ளத்துள் நிறைந்து நின்றாய்!
பள்ளிக்கூடம் சென்று
பாடங்கள் கற்றாய்
பெற்றவன் என்னிடம்
பட்டறிவு பெற்றாய்!
அலிஃப் பா தா உன்
அழகுவாய் கற்கையில்
அஞ்சு வேளைத் தொழுததுபோல்
நெஞ்சு நெகிழ்ந்தது!
நீ
புன்னகைத்தாய்...
நான்
என்னைப் புதுப்பித்துக்கொண்டேன்!
பூவெனச் சிரித்தாய்...
என்னுள்
பூவனம் வளர்த்தேன்!
கோபித்தாய்...
கொஞ்சிக் குளிர்வித்தேன்!
அழுதாய்...
அடிபட்டவனாய் வலியுணர்ந்தேன்!
கன்னத்தில் முத்தமிட்டாய்...
காலத்தை வென்றெடுத்தேன்!
உன்
ஒவ்வொரு அசைவுக்கும்
வெவ்வேறு ஆளானேன்!!
இவ்வாறு வளரும்
என் மகளே,
என்னிடம் ஒரு மனு உண்டு
உன்னிடம் தர...
எல்லாத் தந்தையர் சார்பாகவும்...
உலகக் கல்வியின்
உல்லாசம் தவிர்
மார்க்கக் கல்வியில்
வாழ்கையைப் படி!
புறத்து ஆணின்
பார்வையைத் தவிர் -அது
கழுத்துச் சுருக்கின்
முடிச்சென உணர்!
தோழிகள் மத்தியில்
வாழ்வியல் விவாதி
திரைப்பட, தொலைக்காட்சி
தூண்டல்கள் ஒழி!
இறைமறை வேதம்
பலமுறை ஓது
நபிவழி பயின்று
நன்னெறி போற்று!
படிக்கும் காலத்தில்
பெற்றோர் சொல் கேள் -மண
முடிக்கும் காலத்தில்
கணவனைப் படி!
அன்னையாய் நீயும்
உன்னையே காண்கையில்
கற்றவை அனைத்தையும்
பாலோடு புகட்டு!
ஒழுக்கக் கோட்பாடு
கொண்டு
தாலாட்டுப் பாடு!
கதைப்பாட்டில்கூட
கண்ணியம் கற்பி!
மனுவின் வேண்டுகோள்
மனதினில் கொள்
உன்னைப் பார்த்தே
உன் இளையவர் வளர்வர்
ஏனெனில்...
முதல் மகளே
நீ
மூத்த பெண்ணாவாய்!
- சபீர்
Source : http://www.satyamargam.com/
No comments:
Post a Comment