wபோராடும் காங்கிரஸ் பேரியக்கத்தின் பொருளாதார ஆதாரங்களுக்காக நிதி திரட்டும் முயற்சியில் காங்கிரஸ் கமிட்டி முனைந்தது. 1921 மார்ச் 31 - ஆம் தேதி விஜயவாடாவில் கூடிய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டுவது என்றும், அந்நிதிக்கு திலகர் நினைவு சுயராஜ் நிதி என்றும் பெயரிட்டனர்.
அந்த நிதியில் 60 லட்சத்தை பம்பாயிலும் மீதமுள்ள 40 லட்சத்தைப் பிற நகரங்களிலும் வசூல் செய்ய வேண்டுமென்று காந்திஜி அறிவித்தார். பம்பாயின் மிகப் பெரிய தொழில் அதிபர்களான ஏ.பி. காட்ரெஜ் மூன்று லட்சமும், ஜெயநாராயணன் இந்து மல்தானி ஐந்து லட்சமும், ஆனந்திலால் இரண்டு லட்சமும் நிதி வழங்கினர்.
லட்சக்கணக்கில் நிதி திரண்டுகொண்டிருந்த அந்நேரத்தில் பம்பாயின் மிகப் பெரிய பஞ்சாலையின் அதிபரான உமர் சுப்ஹானி என்ற இஸ்லாமியர் காந்திஜியிடம் நேரில் சென்று, திலகர் நினைவு சுயராஜ்ய நிதிக்காக ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
காசோலையை கையில் வாங்கிய காந்திஜியின் கண்கள் அதில் நிரப்பப்பட்டிருந்த தொகையை வாசித்தபோது ஆச்சரியத்தால் விரிந்தது. காங்கிரஸ் கமிட்டியின் நிதி திரட்டும் திட்டத்தை ஒருவரே நிறைவேற்றித் தருகிறாரே என்ற மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், சுதந்திரப்போராட்ட நிதி என்பதால் அதில் பலரது பங்களிப்பும் இருந்தால்தான் அது சிறப்புடையதாக அமையும் என்று காந்திஜி கருதினார். எனவே அக்காசேரலையை உமர் சுப்ஹானியிடமே திருப்பிக் கொடுத்து, சில லட்சங்கள் மட்டும் வழங்குங்கள்என்கிறார். காந்திஜியின் விருப்பப்படி சில லட்சங்களை உமர் சுப்ஹானி வழங்கினார். ஒரு கோடி ரூபாயை திலகர் நினைவு சுயராஜ்ய நிதிக்கு உமர் சுப்ஹானி வழங்க முன்வந்த செய்தி ஆங்கில அரசுக்கு எட்டுகிறது. பம்பாய் மாகாண வைஸ்ராய் உடனடியாக உமர் சுப்ஹானியின் தொழிலை முடக்குவதற்கான நடவடிக்கைகளில் இறங்குகிறார்.
உமர் சுப்ஹானியின் பஞ்சாலையில் உற்பத்தியாகும் பஞ்சை அரசே விற்றுத்தரும் என்று நிர்ப்பந்தப்படுத்தி வாங்கி, மிகக் குறைந்த விலையில் விற்றது. இதனால் உமர் சுபஹானிக்கு ஏற்பட்ட நஷ்டம் மூன்று கோடியே அறுபத்து நான்கு லட்சம். இதனை அவரது சகோதரி பாத்திமா இஸ்மாயில் ஒரு பத்திரிகைப் பேட்டியில் குறிப்பட்டுள்ளார்.*அந்நியத் துணி பகிஷ்கரிப்புப் போராட்டம் முனைப்புடன் நடந்து கொண்டிருந்த போது, "அந்நியத் துணிகளை உங்கள் பஞ்சாலைகளில் வைத்து எரியூட்டலாமா?'' - என்று காந்திஜி கேட்டார். அதற்கு "என் பஞ்சாலை இதைவிட வேறு ஒரு நல்ல காரியத்திற்குப் பயன்படவாப் போகிறது'' - என்று உமர் சுப்ஹானி பதிலளித்திருக்கிறார்.
அந்நியத் துணிகளைத் தீயின் நாவுக்குத் தின்னக் கொடுக்கும் எழுச்சிமிக்க நிகழ்ச்சி காந்திஜி தலைமையில் உமர் சுப்ஹானியின் பஞ்சாலையில் நடைபெற்றது. ஆங்கில அரசால் தனது தொழிலுக்கு மேலும் இடைஞ்சல்கள் வரும் எனத்தெரிந்தும், தன் பஞ்சாலையை அந்நியத் துணிகளை எரியூட்டும் களமாக அமைத்துக் கொடுத்ததோடு, 30 ஆயிரம் மதிப்புள்ள அந்நியத் துணிகளையும் எரியூட்ட வழங்கினார். 1921 அக்டோபர் 9 - ஆம் தேதியும் அந்நியத் துணிகளை எரியூட்டும் மற்றொரு நிகழ்ச்சி உமர் சுப்ஹானியின் பஞ்சாலையில் நடைபெற்றது.
அந்நியத் துணி பகிஷ்கரிப்பு போராட்டத்திற்கு களம் அமைத்துக் கொடுத்ததற்காக உமர் சுப்ஹானிக்கு பிரிட்டீஷ் அரசு கொடுத்த இன்னல்கள் ஏராளம்! தேச விடுதலைக்காக கொடுத்தும் இழந்தும் பொருளாதார தியாகங்களைச் செய்த உமர் சுப்ஹானியின் பெயரை இனியாவது இந்திய விடுதலை வரலாறு உச்சரிக்குமா?(* நிஜாமுத்தீன் ஜமாலி, 'ஒரு துணி வியாபாரியின் கதை,' சிந்தனைச்சரம் நவம்பர் 1997., பக்கம்32-33.)
வ.உ.சி - யின் நேசர்
உத்தமபாளையத்திலிருந்து போடிநாயக்கனூருக்கு செல்லும் வழியில் உள்ள ஓர் அழகிய கிராமம் கோம்பை. மலையடிவாரத்தில் அமைந்துள்ளதால் கோம்பை எனப்பெயர் பெற்றது. இயற்கையின் அடிவாரமாக மட்டுமல்லாமல், தேசிய விடுதலை எழுச்சியின் அடிநாதமாகவும் இவ்வூர் திகழந்திருந்தது. வ.உ.சி - யைப் பற்றிப்பேசும் போதெல்லாம் உச்சரிக்கப்பட வேண்டிய பெயருக்குச் சொந்தக்காரர் இவ்வூரில் வாழ்ந்த உ.ம.சே முஹைதீன் பிள்ளை சாஹிப்வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமண்ய சிவா, சர்க்கரைச்செட்டியா, மகாகவி சுப்பிரமண்ய பாரதி போன்ற சுதந்திரப் போராளிகளின் உற்ற நண்பராக விளங்கியவர்.
1905 - இல் சுதேசிக் கப்பல் கம்பெனிக்காக பங்குதாரர்களைச் சேர்க்க வந்த வ.உ.சி., சுப்பிரமண்ய சிவா, சர்க்கரை செட்டியா ஆகியோரைத் தனது இல்லத்தில் பல நாட்கள் தங்க வைத்து உபசரித்தார். சுதேசிக் கப்பல் கம்பெனி பங்குகளைத் தான் வாங்கியதோடு உத்தமபாளையம், கம்பம், சுற்றுவட்டாரங்களில் வாழ்ந்த தனவந்தர்கள் பலரைப் பங்குதாரர்களாக்கிக் கொடுத்தார்.
1907 - இல் சூரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்கு வ.உ.சி., சுப்பிரமண்ய சிவா, சர்க்கரைச் செட்டியார் ஆகியோரைத் தன் சொந்ச் செலவில் அழைத்துச் சென்றார்.
1908 - இல் பிரிட்டீஷ் அரசு தனது அடக்கு முறைகளை கட்டவிழ்த்து விட்டது.தேசியத்தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பல தலைவர்கள் தலைமறைவு வாழ்க்கை நடத்தினர். வ.உ.சி., சுப்பிமண்ய சிவாவோடு தலைமறைவுக்கு பாதுகாப்பு தேடி முஹைதீன் பிள்ளையை நாடி வந்த போதுதான் கைது செய்யப்பட்டு கோயம்பத்தூர் சிறையில் அடைக்கப்பட்டார். கோவை சிறையில்தான் அவர் செக்கிழுத்த கொடுமை நடைபெற்றது. இந்த வெஞ்சிறைக் கொடுமையைக் கேள்விப்பட்ட பாரதியார்,
மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதும்நூலோர்கள் சேக்கடியில் நோவுவதும் காண்கிலேயோ!
- என்ற பாடல் வரிகளை முஹைதீன் பிள்ளைக்கு எழுதிய கடிதத்தில் தீட்டி தன் வருத்தத்தைப்பகிர்ந்திருக்கிறார்.
1908 - இல் வ.உ.சி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நெல்லையில் மிகப்பெரிய எழுச்சிப் போராட்டம் நடைபெற்றது. அந்த மறியல் போராட்டத்தில் பங்கேற்று ஏகாதிபத்தியத்தின் துப்பாக்கித் தோட்டாக்களுக்கு பலியான பலரில்... முதல் நபர் முகம்மது யாசின் என்ற இளைஞராவார். - தனது 'சுயசரிதை' யில் வ.உ.சி. வ.உ.சி. விடுதலையான பின் முஹைதீன் பிள்ளையின் இல்லத்தில் பலமுறை வந்து தங்கியுள்ளார். அப்போதுதான் அவர் திருக்குறளுக்கு உரை எழுதினார். ஆந்த நூலை உத்தமபாளையம் ஆனந்தா அச்சுக் கூடத்தில் பதிப்பித்துக் கொடுத்தவர் உத்தமபாளையம் கே.எம்.அகமது மீரான்.* முஹைதீன் பிள்ளை, அஹமது மீரான் ஆகியோர் செய்த உதவிகளுக்காக வ.உ.சி அவர்களக்கு எழுதிய கடிதங்கள் பல.
(* மதிநா, டிசம்பர் 1986., ஜனவரி 1987)
சுதேசி ஸ்டீம் நேவிகேசன்
இந்திய சுதேசி வர்க்ககத்தின் லட்சியக் கனவான 'சுதேசி ஸ்டீம் நேவிகேசன்' - என்ற சுதேசிக் கப்பல் கம்பெனியை வ.உ சிதம்பரம் பிள்ளை 16-10-1906 - இல் நிறுவினார். இந்நிறுவனத்திற்கு பங்குதாரர்களைச் சேர்க்கும் முயற்சியில் அவர் இறங்கியபோது அவருக்கு நம்பிக்கைக் கரம் நீட்டியவர் ஹாஜி ஏ.ஆர். பக்கீர் முகம்மது ராவுத்தர் சேட் ஆவார்.
ரூபாய் இரண்டு லட்சம் மதிப்புள்ள 8000 பங்குகளை அவர் தனது கம்பெனி சார்பாக வாங்கினார். அதிக பங்குகளை வாங்கிய காரணத்தினால் சுதேசி ஸ்டீம் நேவிகேசன் கம்பெனியின் செயலாளராக நியமிக்கப்பட்டார். இதனை பாரதியார் 'இந்தியா' பத்திரிகையில் இந்த கம்பெனியின் பிரசிடென்ட் மிஸ்டர் பாண்டித்தேவர்(பாலவனந்தம் ஜமீன்தார்), மெஸர்ஸ் ஹாஜி. பக்கீர் முகம்மது சேட் கம்பெனியாரே செக்ரடெரிகள், அஸிஸ்டெண்ட் செக்ரடெரியாக தூத்துக்குடி வக்கீல் மிஸ்டர் சிதம்பரம் பிள்ளை நியமிக்கப்பட்டிருக்கிறார்.
- என்று 20-10-1906 - இல் எழுதியதை சீனிவிஸ்வநாதன் தனது 'சுதேசியத்தின் வெற்றி' நூலில்எடுத்தாண்டுள்ளார்.*
இவ்வாறு வ.உ.சியின் இமாலய முயற்சிக்கு அடித்தாங்கல்களாக பல முஸ்லிம் பெருமக்கள் இருந்துள்ளனர். வ.உ.சியின் முயற்சியை - தியாகத்தை மதிக்கும் நம் ஆதங்கமெல்லாம், கப்பல் ஓட்டிய தமிழனின் புகழைப் பேசும் போதெல்லாம் 'கப்பல் வாங்கித்தந்த தமிழன்'ஹாஜி. பக்கீர் முகம்மது சேட்டையும் கொஞ்சம் சேர்த்துப் பேசுங்களேன் என்பதுதான். (* செ.திவான், விடுதலைப்போரில் தமிழக முஸ்லிம்கள்,பக்கம் 78.)
இறுதி வார்த்தைகள்...
1920 - இல் ஈரோட்டில் நடைபெற்ற மஜ்லிசுல் உலமாவின் மூன்றாவது மாநாட்டிற்கு வருகை தந்த மௌலானா முகம்மது அலி - க்கு வரவேற்பு அளித்த ஈ.வே.ரா பெரியார், அவ்வரவேற்புரையின் போது :
காந்திஜிக்குள் இந்த தேசம் இருக்கிறது. ஆனால் அந்த காந்தியோ மௌலானா முகம்மது அலியின் ஜேப்பிற்குள் இருக்கிறார்! என்றார். அந்த அளவிற்கு தனது தேசிய நடவடிக்கைகளால் மிகப்பெரும் தாக்கத்தை இந்த மண்ணில் ஏற்படுத்தியவர் மௌலானா முகம்மது அலி.
1930 - இல் லண்டனில் நடந்த வட்டமேசை மாநாட்டில் பங்கேற்க காந்திஜியுடன் செல்கிறார். அப்போது அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். மாநாட்டில் பேச அவருக்கு ஐந்து நிமிடங்களே அனுமதிக்கப்பட்டிருந்தது. தேச நலனுக்காக தேக நலனையும் பொருட்படுத்தாமல் பேசுகிறார். கால அவகாசத்தை மறந்து இரண்டு மணி நேரம் ஆங்கில ஏகாதிபத்திய அரங்கு அவரது உரையைக் கேட்டது. மௌலானா ஆற்றிய அவ்வுரையின் இறுதி வார்த்தைகள் :
என் தேசத்திற்கு நான் திரும்ப விரும்புகிறேன். (என்று உரத்த குரலில் கூறியவர்) அவ்வாறு என் தேசத்திற்கு நான் திரும்புவது, எங்கள் தேசத்தின் சுதந்திரத்திற்கான உத்தரவை நீங்கள் என் கையில் கொடுத்தால் மட்டுமே சாத்தியமாகும். ஏனென்றால் ஒரு அடிமை நாட்டிற்கு இனி திரும்புவதை நான் விரும்பவில்லை. நான் இந்த அந்நிய மண்ணில் மரணிப்பதை விரும்புகிறேன். ஏனென்றால் இது சுதந்திர மண். எனவே எங்கள் தேசத்திற்கு சுதந்திரம் கொடுங்கள்! இல்லையேல் உங்கள் மண்ணில் நான் அடக்கமாக ஒரு கல்லறை கொடுங்கள் !** ''I Want to go back to my country''. He said in a loud voice. ''If I can go back with the substance of Freedom in my hand. Otherwise Iwill not go back to a slave country. Iwill even prefer to die in a foreign country so long as it is a Free Country,and if you do not give us Freedom in India, You will have to give me a grave here.''- Shan Muhammad, Freedom Movement in India- The Role of Ali Brothres, P.231.
லண்டன் வட்டமேசை மாநாட்டில் மௌலானா முஹம்மது அலி பேசிய படி அங்கேயே 04-01-1931- இல் காலமானார். அவர் எண்ணம் போல் ஒரு சுதந்திர மண்ணில் மரணம் நிகழ்ந்தாலும், அவரது ஜனாஸாவை (இறந்த உடலை) லண்டனில் அடக்கம் செய்ய முஸ்லிம் நாடுகள் சம்மதிக்கவில்லை. எங்கள் மண்ணில் நல்லடக்கம் செய்கிறோம் என்று 22 நாடுகள் அவரது ஜனாஸாவை வேண்டி நின்றன. இறுதியாக பைத்துள் முகத்தஸின்(ஜெருசலம்) பொறுப்பாளர் அமீருல் ஹுஸைனி கிலாபத் கமிட்டியை வேண்டிக் கொண்டதற்கிணங்க, மௌலானாவின் ஜனாஸா பைத்துல் முகத்தஸில் 'அல்-அக்ஸா' பள்ளிவாசல் அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது.மௌலானா முகம்மது அலி அவர்கள் புனித ஹஜ் பயணம் சென்றபோது, புனித கஃபா ஆலயத்தின் திரைசீரையைப் பிடித்து கண்ணீர் மல்கியவாறு கேட்ட பிரார்த்தனை :இறைவா...என் இந்திய தேசத்திற்கு சுதந்திரத்தைத் தா !சுதந்திரம் பெற்ற இந்தியாவில்இஸ்லாத்திற்கு வாழ்வைத் தா !
மௌலானா முகம்மது அலியின் பிரார்த்தனையான 'சுதந்திர இந்தியா' மலர்ந்து விட்டது. ஆனால் தேசத்தின்விடியலுக்காய் பல்வேறு துறை சார்ந்த அர்ப்பணிப்புகளை - தியாகங்களைச் செய்த இஸ்லாமிய சமுதாயத்தை இன்று அந்நியப்படுத்தும் போக்குகள் இம்மண்ணில் வேர்பரப்பும் வேதனை வளர்ந்து வருகிறது. எனவே மௌலானா கேட்ட ''சுதந்திர இந்தியாவில் இஸ்லாத்ததிற்கு வாழ்வைத் தா'' ! என்ற பிரார்த்தனை... மீண்டும் மீண்டும் கேட்கப்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இன்று பொன்விழா காணும் சுதந்திர இந்தியாவில் வாழும் ஒவ்வொரு முஸ்லிமின் பிரார்த்தனையும் - ஜீவத் துடிப்பும் :எங்கள் சுதந்திர தேசம்பாருக்குள்ளே திலகமாய் திகழ வேண்டும்.அதன் வசந்த விடியல்களுக்காய்இஸ்லாமியரின் அர்ப்பணிப்புகள் தொடர வேண்டும்அதோடு இந்த மண்ணில்இஸ்லாமியர் அமைதியாக வாழவிடப்பட வேண்டும் ... என்பதே !
இன்றைக்கு சுதந்திரம் என்ற பெயர் கேட்டாலே அனைவருக்கும் நினைவில் வருவது மகாத்மா எனும் தேசப்பிதாதான். அந்த மகாத்மாவை தேசப்பிதாவாக மாற்றியவர்கள் யார் என்ற உண்மையை எல்லா வரலாற்றாசிரியர்களும் சாமர்த்தியமாக மறைத்து விட்டனர். ஆனால் மகாத்மா காந்தி தனது சுய சரிதையில் தனக்கு விடுதலை உணர்வை ஊட்டியவர்கள் யார் என்பதை மறக்காமல் குறிப்பிட்டுள்ளார். அவர்களைப் பற்றிய ஒரு சிறு அறிமுகத்தை இப் பதிவில் பார்ப்போமா!
அப்துல்லாஹ் ஆதம் ஜவேரி, அப்துல் கரீம் ஆதம் ஜவேரி ஆகிய இருவரும் சகோதரர்கள். குஜராத்தில் போர்பந்தரில் பிறந்த இவர்கள் பல நாடுகளுக்குச் சென்று பெயர் சொல்லும் அளவுக்கு கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கினார்கள். 1865ம் ஆண்டு 'தாதா அப்துல்லாஹ் கம்பெனி' என்ற பெயரில் 50 சரக்கு கப்பல்களையும் 4 பயணிகள் கப்பல்களையும் கொண்ட மிகப் பெரிய நிறுவனத்தை இவர்கள் நிறுவினார்கள்.
இவர்களின் கம்பெனி அலுவலக வேலைகளை முறையாகச் செய்ய சட்டம் தெரிந்த ஒரு நபரை வேலைக்கு அமர்த்த வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் அப்துல் கரீம் ஆதம் ஜவேரி அவர்கள் போர்பந்தரில் தனது வீட்டிற்க்கு அருகாமையில் இருந்த சட்டம் படித்து முடித்த இளைஞர் காந்தி அவர்களை அலுவலகப் பணிக்காக தனது சகோதரர்களுடன் கலந்து ஆலோசித்து 105 பவுண்டு சம்பளத்திற்க்கு வேலைக்கு அமர்த்தினார்கள்.
காந்தி என்ற அந்த இளைஞர் தேசப்பிதாவாக உருவாக்க விதை விதைத்த நேரம் இதுதான்.
ஜாவேரி குடும்பமும் காந்தியும் சுதந்திர போராட்டமும்!.
மதுரை: சுதந்திர போராட்டத்தில் காந்திக்கு உதவியதால் கடலில் மூழ்கடிக்கப்பட்ட முஸ்லிம் சகோதரர்களின் கப்பலை மீட்டு, தமிழகத்தில் அருங்காட்சியகத்தில் வைக்க அவர்களது பேரன் கோரிக்கை வைத்துள்ளார்..
மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டத்திற்கும், அவரது தென் ஆப்ரிக்கா பயணத்தின் போதும் உதவியவர்கள் குஜராத் மாநிலம் போர்பந்தரைச் சேர்ந்த வியாபார சகோதரர்கள் அப்துல்லா ஆதம் ஜவேரி மற்றும் அப்துல் கரீம் ஆதம் ஜவேரி. இவர்களது பேரன் அப்துல்கரீம் அப்துல்லா ஜவேரி மதுரையில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டத்தில் எங்கள் தாத்தாக்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. காந்திக்கு உதவியாக இருந்ததுடன், சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதால் எங்கள் குடும்பத்திற்கு சொந்தமான நான்கு கப்பல்கள் 1906ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் மூழ்கடிக்கப்பட்டது. அதில், ஒரு கப்பல் போர்பந்தர் கடலில் மூழ்கிய நிலையில் இருக்கிறது. இந்த கப்பலையும், போர்பந்தரிலுள்ள எங்கள் குடும்ப சொத்துக்களையும் அபகரிக்க இருவர் முயற்சித்தனர். அவர்கள் காந்தியின் வாழ்க்கை வரலாறு ஆவணங்களை திருத்தி மோசடியில் ஈடுபட்டனர். இவற்றை கோர்ட் மூலம் முறியடித்துள்ளேன். அந்த இருவர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க குஜராத் அரசிடமும், கோர்ட் மூலமும் கோரிக்கை வைத்துள்ளேன். இந்த நடவடிக்கையை நிறைவேற்ற காங்., தலைவர் சோனியா, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோருக்கு கோரிக்கை வைத்துள்ளேன். அத்துடன் போர்பந்தரில் மூழ்கியுள்ள ரூ.10 கோடி மதிப்புடைய கப்பலை மீட்டு, தமிழகத்திலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் வைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அப்துல் கரீம் அப்துல்லா ஜவேரி கூறினார்.
அணுசக்தியால் இயங்கும் அமெரிக்க போர்க் கப்பல் நிமிட்ஸ், சென்னை துறைமுகத்துக்கு அருகே நங்கூரம் பாய்ச்சி நிற்க, அதையொட்டி ஆயிரம் சர்ச்சைகள்.. அமெரிக்காவின் கொடூரமான போர்முகத்தின் அடையாளம்தான் நிமிட்ஸ் கப்பல் எனக்கூறி, சில அரசியல் கட்சிகள் அதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், போர்பந்தர் துறைமுகத்தில் 1897_ம் ஆண்டில் ஆங்கிலேயரால் மூழ்கடிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு கப்பலை மீட்க சத்தமில்லாமல் போராடி வருகிறது, போர்பந்தரை பூர்வீகமாகக் கொண்ட ஜவேரி என்கிற குடும்பம்.
வரலாற்றுப் பொக்கிஷங்களோடு மூழ்கிக் கிடக்கும் அந்தக் கப்பலை அரசும் கண்டுகொள்ளாமல் இருக்கிறதே என்ற வருத்தமும் ஜவேரி குடும்பத்தாருக்கு உள்ளது.
போர்பந்தர்! ‘பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதில்லே’ என்றெல்லாம் நாம் வசனம் பேச முடியாது. இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தி அவதரித்த அமைதியான இடம். குஜராத் மாநிலத்தில் உள்ள இந்தத் துறைமுக நகரம்தான், ஜவேரி குடும்பத்தாரின் பிறப்பிடம்.
இந்த ஜவேரி குடும்பத்தாரின் வழிவந்த அப்துல்கரீம் என்பவர், மதுரையில் மொத்த துணி வியாபாரம் செய்து வருகிறார். போர்பந்தரில் மூழ்கிக் கிடக்கும் தங்கள் குடும்பச் சொத்தான கப்பல் பற்றி பல அரிய தகவல்களை அவர் நம்மிடம் கொட்டினார்.
‘‘எனது கொள்ளுத் தாத்தா அப்துல்கரீம் ஹாஜி ஆதம் ஜவேரி. அவரது அண்ணன் அப்துல்லா ஹாஜி. இவர்கள் இருவரும் ‘அப்துல்லா அண்ட் கம்பெனி’ என்ற பெயரில் தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் கப்பல் கம்பெனி நடத்தினர். அவர்களிடமிருந்த மொத்த கப்பல்கள் ஐம்பத்து நான்கு. அதில் நான்கு பயணிகள் கப்பல்.
1893_ம் ஆண்டு என் கொள்ளுத்தாத்தா அப்துல்கரீம், அவரது அம்மாவைப் பார்ப்பதற்காக போர் பந்தர் வந்திருக்கிறார். வந்த இடத்தில் காந்தியைச் சந்தித்தார். மகாத்மா காந்தி அப்போது சட்டப்படிப்பு முடித்த இருபத்து நான்கு வயது இளைஞர். அவர பண்பு என் கொள்ளுத்தாத்தாவைக் கவர்ந்ததால், டர்பனில் உள்ள அவரது கப்பல் கம்பெனியின் சட்டக்குழுவில் காந்தியைச் சேர்த்துக் கொள்ள விரும்பினார். காந்திக்கு சம்பளம் அப்போது நூற்று ஐந்து பவுன்.
அதே ஆண்டு அப்துல் கரீமுடன் காந்தி கப்பலில் புறப்பட்டு டர்பன் துறைமுகத்க்குப் போய்ச் சேர்ந்தார். மூத்தவர் அப்துல்லா ஹாஜி, காந்தியை துறைமுகத்துக்கு வந்து வரவேற்று இருக்கிறார். காந்தியின் அரசியல் வாழ்க்கைக்கு பிள்ளயார் சுழி போடுகிறோம் என்பது ஜவேரி சகோதரர்களான என் கொள்ளுத்தாத்தாக்களுக்கு அப்போது தெரியாது.
எங்கள் கம்பெனியின் வழக்கு தொடர்பாக டர்பனில் இருந்து பிரிட்டோரியா நகருக்கு காந்தி ரயிலில் சென்ற போதுதான், மாரிட்ஸ்பார்க் ரயில் நிலையத்தில் முதல் வகுப்புப் பெட்டியில் இருந்து ஒரு வெள்ளயரால் கீழே தள்ளப்பட்டார். பின்னாளில், இந்தியாவின் விடுதலைக்கே காரணமாக அமைந்தது, இந்தச் சம்பவம்.
1894_ம் ஆண்டு மே 22_ம் தேதி எங்கள் மூத்த கொள்ளுத் தாத்தா அப்துல்லா ஹாஜி ‘நேட்டால் இந்தியன் காங்கிரஸ்’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அது டர்பனில் உள்ள எங்கள் கொள்ளுத்தாத்தாக்களின் வீட்டில்தான் ஆரம்பிக்கப்பட்டது. அதன் முதல் தலைவராக அப்துல்லாவும், பொதுச்செயலாளராக காந்தியும் இருந்தார்கள். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன. 1896_ம் ஆண்டு அப்ல்கரீம் தலைவராகப் பொறுப்பேற்றார். காந்தி தொடர்ந்து செயலாளராகவே நீடித்து வந்தார்.
1897_ம் ஆண்டு காந்தி இந்தியாவுக்குத் திரும்பி, அவரது குடும்பத்தை எஸ்.எஸ். குர்லேன்ட் என்ற எங்கள் கப்பலின் மூலம் டர்பனுக்கு அழைத்து வந்தார். காந்தியின் மனவி கஸ்தூரிபாய் அம்மயார், இரண்டு மகன்கள், காந்தியின் சகோதரி மகன் ஆகியோர் அந்தக் கப்பலில் வந்தனர்.
காந்தி டர்பனுக்குள் நுழைவதை விரும்பாத பிரிட்டிஷ் அரசு, அவரை கப்பலில் இருந்து இறங்க அனுமதிக்கவில்ல. அவரைத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று ஜவேரி சகோதரர்களை பிரிட்டிஷ் அரசு நிர்ப்பந்தித்தது. அதற்காக நஷ்ட ஈடு தருவதாக ஆசை காட்டியது. ஆனால், ஜவேரி சகோதரர்கள் இணங்கவில்ல. ‘எங்கள் விருந்தாளியாக வந்திருக்கும் காந்தியையும், அவரது குடும்பத்தையும் அனுமதித்தே ஆகவேண்டும்’ என்று பிடிவாதம் பிடித்தனர்.
இருபத்து மூன்று நாட்கள் இழுபறிக்குப் பிறகு டர்பன் துறைமுகத்தில் கால்பதிக்க காந்தி அனுமதிக்கப்பட்டார். இந்தத் தாமதத்தால் கப்பல் கம்பெனி பெரும் நஷ்டமடந்தது.
‘நேட்டால் இந்தியன் காங்கிரஸ்’ சார்பில் எனது கொள்ளுத்தாத்தாக்கள் ‘இந்தியன் ஒபீனியன்’, என்ற பத்திரிகையை வெளியிட்டனர். அது தென்னாப்பிரிக்க இந்தியர்கள் மத்தியில் பிரபலமடந்தது. ‘யங் இந்தியா’ என்ற செய்தித்தாள, எஸ்.எஸ். கேதிவ் என்ற கப்பலில் வைத்து என முன்னோர் அச்சடித்து வெளியிட்டனர். அது இந்தியாவில் பல இடங்களிலும் பரவி வெள்ளயர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. நான் சொல்லும் தகவல்கள் அனைத்தும் காந்தியின் சுயசரிதயான சத்திய சோதனயிலும் உள்ளது. (அதையும் நம்மிடம் காண்பிக்கிறார்.)
அப்துல்லா கப்பல் கம்பெனிக்காக தென்னாப்பிரிக்க நீதிமன்றம் ஒன்றில் காந்தி ஒரு முறை தலைப்பாகை அணிந்தபடி வாதிட்டார். அது வெள்ளக்கார நீதிபதியின் கண்ண உறுத்தியது. ‘அதை அகற்ற வேண்டும்’ என்று நீதிபதி கூறினார். காந்தியும் கழற்றத் தயாரானார். ஆனால் அருகில் இருந்த அப்துல்லா, ‘தலைப்பாகையை கழற்றி வைப்பது நம்நாட்டு மானத்தைக் கீழே இறக்குவதைப் போன்றது. எனவே கழற்றாதீர்கள்’ என்று கூறிவிட்டார். ‘அந்த வழக்கில் நமக்குப் பாதகம் ஏற்பட்டாலும் பரவாயில்ல’ என்றார். இப்படி காந்தியின் சுதந்திர உணர்வுக்கு உறுதுணயாக இருந்தவர்கள் ஜவேரி சகோதரர்கள்.
1906_ம் ஆண்டு காந்தி இந்திய விடுதலையில் மும்முரமாக இறங்கினார். இவருக்குப் பின்பலம் யார் யார் என்று ஆங்கிலேயர்கள் ஆராயத் தொடங்கினார்கள். அப்போது அப்துல்லா கப்பல் கம்பெனிதான் காந்தியின் அஹிம்சை போராட்டத்துக்கு அடித்தளமாக இருக்கிறது என்பது ஆங்கிலேயர்களுக்குத் தெரியவந்தது. எனவே, அப்துல்லா கப்பல் கம்பெனியின் நான்கு பயணிகள் கப்பலை அங்கங்கே மூழ்கடித்துவிட ஆங்கிலேயர்கள் திட்டம் தீட்டினார்கள்.
அதன்படி எஸ்.எஸ். வர்க்கா கப்பல் மகாராஷ்டிரா மாநிலம் அலிபாகு துறைமுகத்திலும், எஸ்.எஸ். நாதிரி கப்பல் டர்பன் துறைமுகத்திலும், எஸ்.எஸ். குர்லேண்ட் கப்பல் கராச்சி துறைமுகத்திலும், எஸ்.எஸ். கேதிவ் கப்பல் போர்பந்தர் துறமுகத்திலும் 1897_ம் ஆண்டு மூழ்கடிக்கப்பட்டன. போர் பந்தர் துறமுகத்தில் சுமார் நாற்பதடி, ஐம்பதடி ஆழத்தில் எஸ்.எஸ்.கேதிவ் ஜல சமாதியானது. இன்றும் கூட அதன் புகைபோக்கி வெளியில் தெரிகிறது.
முக்குளிப்பதில் கைதேர்ந்த சிலரை உதவியுடன் இந்தக் கப்பலில் இருந்த முத்துக்கள், அலங்கார வேலப்பாடு கொண்ட பீங்கான் பாத்திரங்கள், வெள்ளி ஜாடி, உலக வரலாறு குறித்த புத்தகம் போன்ற சில பொருட்களை வெளியே எடுத்தோம். அந்தக் கப்பலை வெளியே எடுத்தால், காந்தியின் ‘யங் இந்தியா’ பத்திரிகை அச்சடித்த இயந்திரம் கூட கிடைக்கும். இந்த கேதிவ் கப்பல் எகிப்திய அரசர் முகமது கேதிவிடம் இருந்து என் பாட்டனார்கள் ஒரு லட்சத்துப் பதினாறாயிரம் பவுன்டுக்கு வாங்கிய கப்பல். இது தொடர்பாக நான் சொல்லும் தகவல்கள் அனைத்தும் லண்டன் லாயிட்ஸ் பதிவேடுகளில் இன்றைக்கும் உள்ளது.
சுதந்திரப் போர் தொடங்குவதற்கு முன்பே அதற்காக ஏராளமான சொத்துக்களை நாங்கள் இழந்து விட்டோம். இப்போது கூட காந்தியை முன்னிறுத்தி எந்த உதவியையும் நாங்கள் கேட்டதில்லை. இனி கேட்கப் போவதுமில்ல. எங்கள் முன்னோர் தொடங்கிய ஓர் உயர்நிலைப் பள்ளி போர்பந்தரில் இன்றும் செயல்படுகிறது. எங்கள் ஊரைச் சேர்ந்தவர்கள் மதுரையில் மொத்தத் துணி வியாபாரம் செய்து வந்ததால், என் தந்தையின் மறைவுக்குப் பின்னர், 1970_ல் என் தாயாருடன் இங்கே வந்து சேர்ந்தோம். மதுரைவாசியாக நான் மாறிவிட்டாலும் போர்பந்தரை மறக்கவில்லை. 1985_ல் என் சகோதரியை போர்பந்தரில் திருமணம் செய்து கொடுத்தபோது, அங்கு நான் போயிருந்த நேரம்தான் மூழ்கிக் கிடக்கும் எங்கள் கப்பலை வேறு சிலர் உரிமை கொண்டாடி அபகரிக்கத் திட்டமிடுவதைத் தெரிந்து கொண்டேன். அதற்காக வழக்குத் தொடர்ந்தேன்.
உலகில் எங்கு கப்பல் வாங்கினாலும், அதனை லண்டன் லாயிட்ஸ் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். அதன்படி, மூழ்கிய கப்பல் எங்களுக்குச் சொந்தமானது என அந்த நிறுவனம் சான்றிதழ் அளித்தது. (அதைக் காண்பிக்கிறார்) அதனடிப்படையில் வழக்கு வெற்றியடந்து கப்பல் எங்களுடையது என கோர்ட்டில் தீர்ப்பு வாங்கிவிட்டோம்.
இந்தக் கப்பல் கிட்டத்தட்ட ஐம்பதடி ஆழத்தில் இருப்பதால் இதிலுள்ள பொருட்களை மற்றவர்கள் அபகரிக்க வாய்ப்புள்ளது. எனவே அரசே இந்தக் கப்பலை வெளியே கொண்டு வந்து அதில் உள்ள பொருட்களை எடுத்து அருங்காட்சியகத்தில் வைத்துப் பாதுகாக்க வேண்டும். இது தொடர்பாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை நேரடியாகச் சந்தித்துப் பேசினேன். காந்திக்கு உதவியாக இருந்த காங்கிரஸ்காரர்களுக்கு நாம் ஏன் உதவ வேண்டும் என்று மோடி நினத்தாரோ என்னவோ, எதுவும் செய்யாமல் விட்டுவிட்டார்.
காங்கிரஸ் தலைவர்கள் சிலரிடமும் பேசினேன். அவர்கள் நான் காங்கிரஸில் சலுகைபெற முயல்வதாக தவறாகப் புரிந்து கொண்டார்கள். ஜனாதிபதி, பிரதமர், சோனியாகாந்தி என பலருக்கும் கடிதம் எழுதினேன். (கடித நகல்களக் காட்டுகிறார்) மூழ்கிய கப்பலை மீட்க வேண்டுமென்ற என போராட்டம் கடந்த ஒன்பது ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன் மதுரை காந்தி மியூசியத்தில் நடந்த புகைப்படக் கண்காட்சியில் கூட என் கொள்ளுத் தாத்தாக்கள் படம் இடம் பெற்றிருந்தது. எங்கள் குடும்பச் சொத்துக்கள் தொடர்பாக காந்திஜி கைப்பட எழுதிய உயில் மற்றும் சில கடிதங்கள்கூட இன்றும் என்னிடம் உள்ளது.
இந்தத் தகவல்கள எல்லாம் பி.பி.சி.யில் பேட்டியாக கொடுத்தேன். இங்கிலாந்து அரசு அதைத் தெரிந்து கொண்டு, என்னை அந்த நாட்டின் குடிமகனாக ஏற்றுக் கொள்ள விருப்பம் தெரிவித்தது. ஆனால், என் சொந்த நாடான இந்தியாவை விட்டு நான் எங்கேயும் போகத் தயாராக இல்லை. ஆனால், காந்தி தொடர்பான வரலாற்று ஆவணங்களைத் தேடும் விஷயத்தில் அரசு ஏன் அசிரத்தையாக இருக்கிறது என்பதுதான் தெரியவில்லை.
இந்தக் கப்பலை மீட்டு அதிலுள்ள பொருட்களை காட்சியகத்தில் வைத்தால், என்வசமுள்ள காந்தியின் கடிதம் போன்ற அரிய ஆவணங்களை அதற்குத்தர தயாராக இருக்கிறேன். எனக்கு எதுவும் வேண்டாம். காந்தியின் சுதந்திரப்போராட்டத்தில் என் முன்னோர்களின் பங்களிப்பும் இருக்கிறது என்ற பெயர் மட்டும் போதும்! என வேதனயுடன் சொல்லி முடித்தார் அப்துல் கரீம்.
இதற்கான முயற்சிகளில் அப்துல் கரீமுக்கு உதவி வரும், இந்திய யூனியன் முஸ்லிம்லீக்கின் மதுரை மாவட்ட பொதுச்செயலாளர் எம். அலி அக்பரிடம் பேசினோம்.
‘‘காந்தியின் அரசியல் வாழ்வுக்கு அடித்தளமிட்ட ஜவேரி சகோதரர்கள், அதற்காகவே சொத்துக்களை இழந்தவர்கள். அவர்களுக்கு தபால் தலை வெளியிட வேண்டும் என்று அப்போதைய மத்திய அமைச்சர் தயாநிதிமாறனிடமும், இப்போதைய அமைச்சர் ராஜாவிடமும் கோரிக்கை வைத்துள்ளோம்.
ஜவேரி சகோதரர்களின் வாரிசுகள் பற்றி காங்கிரஸ் பேரியக்கம் கூட கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையாக உள்ளது. இது தொடர்பாக வேலூர் எம்.பி. காஜாமொய்தீன், வெளியுறவுத்துறை அமைச்சர் அகமதுவிடம் பேசியிருக்கிறார். நம் கண் எதிரே கிடக்கும் ஒரு பொக்கிஷத்தை யாரும் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையாக உள்ளது’’ என்றார் அக்பர் அலி.
அரசியல்வாதிகளுக்கு ஆயிரம் வேலை இருக்கும். அதற்கிடையே மகாத்மா காந்தியை நினப்பதற்கெல்லாம் அவர்களுக்கு ஏது நேரம்!"KUMUDAM REPORTER" 12.07.07
இன்றைய மதிப்பின்படி கிட்டத்தட்ட 150 கோடி தொகையை ஜாவேரி சகோதரர்கள் இந்திய விடுதலைக்காக இழந்தனர். மூழ்கடிக்கப்பட்ட 4 பயணிகள் கப்பலில் ஒன்று எஸ்.எஸ். கேத்திவ் கப்பல் குஜராத் மாநிலம் போர்பந்தர் துறைமுகத்தில் மூழ்கடிக்கப்பட்டு இன்று வரை கடலுக்கடியில் இருக்கிறது.
நாட்டு சுதந்திரத்திற்க்காக தங்கள் நிறுவனத்தையும் பணம் பொருள் அனைத்தையும் இழந்த இந்த ஜாவேரி சகோதரர்களை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? ஒருக்கால் இவர்கள் இந்து மதத்தில் அதுவும் உயர் சாதியில் பிறந்திருந்தால் இன்று நமக்கெல்லாம் அறியப்பட்டவர்களாக ஆகியிருப்பார்கள். உண்மைதானே! பிற்சேர்க்கை :-இப்படியாக நாட்டு விடுதலைக்காக போராடிய முஸ்லிம்கள்... சுதந்திர நாட்டின் தேசிய கொடியையும் வடிவமைத்தார்கள்..! அது பற்றி எனது தனி இடுகையை... "இந்திய தேசிய கொடியை வடிவமைத்த பெண்" என்ற இப்பதிவில் சென்று வாசியுங்கள் சகோ..!ஆக்கம் : சகோ. மு.அப்துல் சமது, பேராசிரியர், தமிழ்த்துறை, ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி, உத்தமபாளையம்.
சகோ. முத்துப்பேட்டையார்
சகோ. சுவனப்பிரியன் சகோ.அப்துல்லா சகோ.யூசுப் கான்
துணை நின்றன...
1. Agarwal,R.C; Costitutional Development of India and National Movement, S.Chand & Company P. LTD; New Delhi,1986.2. Grover,B.L;Grover.S; A New Look at Modern Indian History, S.Chand & Company P.LTD, New Delhi, 1993.3. Kasim Rizwi: The Great Bahadur Sha Jaffer, Directprate of Advertising and Visual Publicity,Ministry of I & B Publication,1983.4. Pande,B.N; Islam and Indian Culture Part-I; Khuda Baksh Memorial Annual Lecture,Patna,1985.5. Rajjayyan K ;Sonth Indian Rebellion The First War of Indenpence 1800-1801, Rao & Raghavan Publishers,Mysore,1971.6. Rudrangshu Mukherjee, Awadh in Revolt 1857-1858- A study of Popular Resistence, Oxford University Prees,Delhi,1984.7. Shan Muhammad, Freedom Movement in India - The Role of Ali Brothers ; Associated Pubilshing House, New Delhi, 1979.8. Taunk, B.M ; Non - Co - operation Movement in Indian Politics 1919 - 1924 - A Historical Study, Oxford Univ Prees,Delhi,1978.9. Venkatesan, G; History of Freedom Struggle in India, Rainbow Publications, Coimbatore,1985.10. Howdh Mohidenn, M; Hajee Karutha Rowther - A study, 1990.11. அபுல்கலாம் ஆசாத், இந்திய விடுதலை வெற்றி (தமிழாக்கம் : ஏ.ஜி. வெங்கடாச்சாரி),ஓரியண்ட் வாங்மன்ஸ், சென்னை, 1961.12. அருணாசலம், கே., ஜெய்ஹிந்த், புத்தக நிலையம்,ராயவரம்,1946 .13. காஸிம் ரிஸ்வி, இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர் பகதுர்ஷா ஜஃபர், இந்திய தகவல் தொடர்புத் துறை வெளியீட, 1983.14. காமாட்சிபிள்ளை , ப: இந்து தேசாபிமானிகள் இனிய ரமணிய கீதம், சுதேசி வெளியீடு, மதுரை, 1926.15. செய்குத்தம்பி(பதிப்பாசிரியர்),சதாவதானி செய்குதம்பிப் பாவலர், பாவலர் பதிப்பகம், சென்னை 1987.
16. திலான், தி: விடுதலைப் போரில் தமிழக முஸ்லிம்கள், சுஹைனா பதிப்பகம், திருநெல்வேலி, 1994.17. முஹம்மது யூசப், ஏ.என்., இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள், நூருல் இஸ்லாம்
நன்றி:AALIM AHAMED SHAH
facebook id:
https://www.facebook.com/
தகவல் தந்தவர் ”கவியன்பன்” கலாம்,Kalam Kader
No comments:
Post a Comment