இன்றைய அவசர உலகில் மனிதன் மிக வேகமாக பயணித்து கொண்டிருக்கின்றான். எவ்வாறு இந்த உலகம் நம்மை அவசரமாக இழுத்துச் செல்கின்றதோ அதே போன்று இந்த உலக வாழ்க்கையிலிருந்து நாம் பிரியும் தருணமும் நம்மை நோக்கி மிக வேகமாக வந்து கொண்டிருக்கின்றது.
நாம் வரலாறுகளை புரட்டும்போது நபி நூஹ் (அலை) இதே பூமியில் 950 வருடங்கள் வாழ்ந்ததாக இறைவேதம் திருக்குர்ஆன் பேசுகின்றது. நம் முன்னோர்கள் 100 வயது, 110 வயது, அதையும் தாண்டி திடகாத்திரமாக, உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்ததாக நாம் இன்றும் பெருமையாக பேசிக் கொள்கிறோம்.
ஆனால் இன்றைய நிலை நம்முடன் ஒன்றாக இரவு உணவை முடித்துக்கொண்டு நாளை காலை சந்திப்போம் என்று நம்மிடம் இருந்து விடை பெற்றுச் செல்லும் நண்பன் அடுத்த நாள் ஜனாஸாவாக உருமாற்றம் பெறுகின்றான். நமது வாழ்க்கையின் அவகாசமும், நேரமும் மிகக் குறுகியதாக சுருங்கிகொண்டிருக்கிறது.
தீடீர் மரணங்களும், அகால மரணங்களும் இளம் வயதில் நம் கண் முன் நிழலாடுகின்றன. மரணம் ஒவ்வொரு மனிதனுக்கும் உறுதி செய்யப்பட்டதுதான். மாற்றுக் கருத்து மனிதர்களுக்கு இல்லை.
மனிதர்களில் பெரும்பாலோர் மரணத்தை மறந்தவர்களாக வாழ்கின்றனர். ஒரு முஸ்லிம் மரணத்தை அதிகமாக நினைப்பதும் அதற்காக தம்மை தயார்படுத்திக் கொள்வதும் மிக மிக அவசியமாகும். எனவே ஒரு முஸ்லிம் நிரந்தரமற்ற இவ்வுலகில் தமக்கு மரணம் வருவதற்கு முன்னர் நற்செயல்களை அதிகமதிகம் செய்து நிரந்தர மறுமைக்கு தம்மை சித்தப்படுத்திக் கொள்வது அவசியமாகும்.
ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே!
“ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் – இறுதித் தீர்ப்பு நாளில்தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்; எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டு சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை” (அல் குர்ஆன் 3:185)
அந்த மரணம் இன்று இரவு நம்மை விழுங்கிவிட்டால் நம் நிலையென்ன?
இந்த உலகத்திற்காக ஓடி ஓடி உழைக்கும் நமக்கு உண்பதற்கு நேரமுண்டு, உறங்குவதற்கு காலமுண்டு, மனைவி மக்களோடு தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்கு அவகாசமுண்டு. ஆனால் நாளை நான் ஜனாஸாவகிப் போனால் என்னைப் படைத்த இரட்சகனிடம் சொல்வதற்கு என் கையின் என்ன உண்டு?
உலக வாழ்க்கைக்கு உதரணமாக இந்தக் கதையைப் பார்க்கலாம். ஒரு மனிதன் ஒரு சிங்கத்திடம் அகப்பட்டுக் கொள்கிறான். எப்படியாவது அந்தச் சிங்கத்திடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள எடுத்து பிடித்தான் ஓட்டத்தை. சிங்கமும் விடவில்லை. விரட்டி வந்தது. ஒரு வழியாக ஒரு பெரிய ஆலமரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டான்.
தப்பித்து விட்டோம் என்று நினைத்து பெருமூச்சு விட்டு தான் இருக்கும் மரக் கொப்பைப் பார்க்கிறான். கருப்பு, வெள்ளை நிறம் கொண்ட கரையான் அந்தக் கொப்பை அரித்துக் கொண்டிருக்கிறது. கெட்டியாகப் பிடித்திருந்த பிடி தளர்ந்து அடுத்த கொப்பிற்கு தாவலாம் என்று பார்க்கும்போது அவனுக்கு மிக அருகில் ஒரு கருநாகப் பாம்பு வாயைப் பிளந்துகொண்டு அவன் வருகையை எதிர்பார்த்து காத்திருப்பது போல் சுருண்டு நெளிந்து கொண்டிருந்தது.
வேறு வழியில்லை. கீழே குதித்து விடலாம் என்று கீழே பார்த்தான். துரத்தி வந்த சிங்கம் விருந்துக்கு வந்த VIP-யைப் போல் மரத்தடியில் உட்கார்ந்துகொண்டு அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் தன் தலைக்கு மேல் பார்த்தான். அழகான தேன்கூடு. அந்தத் தேன்கூட்டிலிருந்து ஒரு சொட்டு தேன் அவனது வாயில் விழுந்தது. அவ்வளவுதான். அந்தத் தேனின் சுவையில் தன்னைச் சுற்றி இருக்கும் ஆபத்துகளை மறந்து கையை உயர்த்தினான்.
அவனது நிலை என்ன ஆகியிருக்கும் என்று உங்களுக்குப் புரிந்திருக்கும். இதுதான் இன்றைய மனிதர்களின் நிலை.
நான் மேலே குறிப்பிட்டது போல சிங்கம் என்ற மரணம் நம்மை அழைத்துகொள்ள நாம் எங்கு சென்றாலும் நம் பின்னால் துரத்தி வருகிறது. மரக் கொப்பை கரையான் அரிப்பது போல் நம் வாழ்நாட்களை இரவு, பகல் மாறி மாறி அரித்துக் கொண்டிருக்கிறது. கருநாகப் பாம்பைப் போல் கப்று நம்மை விழுங்குவதற்கு தாயார் படுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இத்தனை ஆபத்துகள் இருந்தும் ஒரு சொட்டு தேனைப் போன்ற உலகத்திற்காக உருண்டோடும் நமது வாழ்க்கையை மாற்றும் தருணம் எப்போது என்று சிந்தியுங்கள்.
இவ்வுலகில் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு செல்வம் சேர்ப்பதில் மும்முரமாக ஈடுபடுகிறார்கள். அதனைக் கொண்டு பெருமிதம் அடைகின்ற நாம் இவ்வுலக வாழ்வு என்பது நிரந்தரமற்ற தற்காலிக வாழ்வு என்பதை ஏனோ மறந்து விடுகிறோம். இவ்வுலகில் எந்த மனிதருக்கும் நிரந்தர வாழ்வு என்பது கிடையாது.
அல்லாஹ் கூறுகிறான்: “(நபியே!) உமக்கு முன்னர் எந்த மனிதனுக்கும் (அவன்) என்றென்றும் இருக்கக்கூடிய நித்திய வாழ்வை நாம் (இங்கு) கொடுக்கவில்லை.” (அல் குர்ஆன் 21:34)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஐந்து நிலைமைகள் ஏற்படுவதற்கு முன் ஐந்து நிலைமைகளைப் பேணிக்கொள்ளுங்கள்: 1. மரணத்திற்கு முன் வாழ்வையும், 2. நோய் வரும் முன் ஆரோக்கியத்தையும், 3. வேலை வரும் முன் ஓய்வையும், 4. வயோதிகத்திற்கு முன் வாலிபத்தையும், 5. ஏழ்மைக்கு முன் செல்வ நிலையையும் பேணிக் கொள்ளுங்கள்.’ (ஆதாரம் : அஹ்மத்)
மரணம் என்பது ஒருவருக்கு எப்போது வேண்டுமானாலும், எந்த இடத்திலும், எந்த வயதிலும் ஏற்படலாம். எனவே மரணம் வந்து விட்டால் அதைத் தடுக்கவோ அல்லது அனைப் பிற்படுத்தவோ அல்லது அதை விட்டு தப்பிக்கவோ இயலாது.
அல்லாஹ் கூறுகிறான்: “ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் (வாழ்வுக்கும், வீழ்வுக்கும்) ஒரு காலக்கெடு உண்டு. அவர்களுடைய கெடு வந்து விட்டால் அவர்கள் ஒரு கணப் பொழுதேனும் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்.” (அல் குர்ஆன் 7:34)
இறைக் கட்டளைகளைப் பேணி வாழ்ந்து வரும் ஒரு முஃமினுக்கு மரண வேளை வந்து விட்டால் அவருடைய உயிரை வானவர்கள் கைப்பற்றும்போது நிகழ்கின்ற நிகழ்வை அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்:
“நிச்சயமாக எவர்கள் ‘எங்கள் இறைவன் அல்லாஹ்தான்’ என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, நிச்சயமாக அவர்கள் பால் மலக்குகள் வந்து, ‘நீங்கள் பயப்படாதீர்கள்; கவலையும் பட வேண்டாம் – உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்” (எனக் கூறியவாறு) இறங்குவார்கள்.” (அல் குர்ஆன் 41:30)
அநியாயக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும்போது நீங்கள் அவர்களைப் பார்த்தால், மலக்குகள் தம் கைகளை நீட்டி (இவர்களிடம்) ‘உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள்; இன்றைய தினம் நீங்கள் இழிவு தரும் வேதனையைக் கூலியாகக் கொடுக்கப்படுவீர்கள். ஏனெனில், நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது கூறிக் கொண்டிருந்தீர்கள்; இன்னும், அவனுடைய வசனங்களை (நம்பாது நிராகரித்துப்) பெருமையடித்துக் கொண்டிருந்தீர்கள்’ (என்று கூறுவதை நீர் காண்பீர்).” (அல் குர்ஆன் 6:93)
ஒருவருடைய மரண வேளையில் அவரது நிலை அவருக்கு தெளிவாகி விடும். உண்மையை உணர்ந்த பின் தாம் வாழும்போது வீணடித்த நேரங்களில் ஒரு வினாடி இப்போது கிடைக்காதா என்று அங்கலாய்ப்பான். விட்டு வந்த நல்ல காரியங்களைச் செய்வதற்காக அவன் தமக்கு சிறிது அவகாசம் அளிக்குமாறு வேண்டுவான். ஆனால் காலம் கடந்து கைசேதப்பட்டு என்ன பயன்?
அல்லாஹ் கூறுகிறான்: ‘இன்னும் எவரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ அதற்குப் பின் அவருக்குப் பாதுகாவலர் எவருமில்லை. அநியாயம் செய்தவர்கள் வேதனையைக் காணும் போது, (இதிலிருந்து) தப்பித்து மீள்வதற்கு ஏதாகிலும் வழியுண்டா?’ என்று கூறும் நிலையை நீர் காண்பீர்.’ (அல் குர்ஆன் 42:44)
அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: ‘என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!’ என்று கூறுவான். ‘நான் விட்டு வந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக’ (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை). அவர்கள் எழுப்பப்படும் நாள் வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது.” (அல் குர்ஆன் 23:99-100)
உலக வாழ்க்கை என்பது ஒரு முறைதான். இது காத்திருக்கும் ஒரு இடமல்ல. காத்திருந்தாலும் இழந்தால் மீண்டும் கிடைப்பதில்லை.
இம்மை என்பது ஒரு பயணம். தாமதிக்காமல் நம்மை மறுமையின் வாசலில் கொண்டு சேர்த்து விடும். எனவே இந்தப் பயணத்தில் கண்மூடித்தனமாய் காலத்தைக் கழிக்காமல், திட்டமிட்டு நாம் நம்மை வளப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதைச் சிந்தித்து வாழ்க்கையை நகர்த்தினால் மரணத்திற்கு மரணம் கொடுக்கப்படும் மறுமையில் மகிழ்வோடு வாழலாம்.
வலசை ஃபைஸல்
Source : http://www.thoothuonline.com/
No comments:
Post a Comment