பத்து வருஷம் இருக்கும்னு நினைக்கிறேன். ஆனா.. நேத்து மாதிரி இருக்கு.
நான் " பெட்டகம் " , " அண்ணலே யா ரசூலல்லாஹ் " நூல்களை எழுதி முடித்த கால கட்டம் அது. பத்திரிகைகளில் வெளிவந்த நூல் விமர்சனங்களைப் படித்துவிட்டு ஏராளமானவர்கள் கடிதம் எழுதினார்கள். அவர்களில் முக்கியமானவர்கள்... கம்பம் முஹம்மதலி அண்ணன் அவர்கள் நாகூர் கவிஞர் ஜாபர் முஹைதீன் அண்ணன் அவர்கள் . அவர்களுக்கும் நூல்கள் அனுப்பிக் கொடுத்தேன். அதன் பிறகு இருவருமே எனக்கு நல்ல நண்பர்களாக ஆகிவிட்டார்கள். அடிக்கடி கடிதங்கள் எழுதுவோம் போனில் நீண்ட நேரம் பேசுவோம்.
பேசுவதெல்லாம் ...அன்பு..அன்பு..அன்பைத்தவிர வேறு எதுவுமேயில்லாத அன்பு மட்டுமே ! எனக்கு அவர்களின் முகமே தெரியாது.. முகம் தெரியாத அந்த மேதைகளின் அகம் மட்டுமே பார்த்தேன். அது ...அழகு..அத்தனை அழகாயிருந்தது. அந்த சூழ்நிலையில்தான் மயிலாடுதுரைக்குச் சென்றேன். அங்கே... என் மனதில் வாழ்ந்துகொண்டிருந்த என் அன்பு நண்பர்களைக் கண்டேன்.. ஆரத்தழுவினேன்.. ஆனந்தம் கொண்டேன். அவர்களும் அப்படியே... அவர்களோடு மேலும் பல நண்பர்கள் அங்கே எனக்கு அறிமுகமானார்கள். அவர்களில் ... டாக்டர் ஹிமானா செய்யத் அவர்களும் ( நர்கிஸ் பத்திரிகையின் ஆசிரியர் ) அதிரை அருட் கவிஞர் தாஹா அவர்களும்
அருமை அண்ணன் வழக்கறிஞர் நீடூர் செய்யது அவர்களும் ( நீடூர் முகமதலி அவர்களின் அண்ணார் ) பேராசிரியர் சாயிபு மரைக்காயர் அவர்களும் முக்கியமானவர்கள் ! மாநாடு முடிந்து பிரிய மனமில்லாமல் அந்த நண்பர்களைப் பிரிந்து வந்தேன். அதன்பிறகு ... " உத்தம நபிகளின் உண்மைத் தோழர்கள் " நூலை எழுதினேன் .
அதற்கு என் நெஞ்சில் வாழும் நல்லார் ஜாபர் முஹைதீன் அண்ணன் அவர்களும் அணிந்துரை எழுதினார்கள். அது நான் பெற்ற பெரும் பேறு. அப்போதே உடல் நலமில்லாதிருந்த அண்ணன் அவர்கள் அதன் பிறகு மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டார்கள். போனில் பேசும்போதெல்லாம்... " மாத்திரையில் நடக்குது யாத்திரை " என்று சொல்வார்கள்.
அதன் பிறகு சென்னையில் சிகிச்சை பெற்று வந்த அண்ணன் அவர்கள் ஒரு நாள் சொல்லாமலே இறைவனிடம் சென்று விட்டார்கள்... மனம் உடைந்து போனேன்... இப்படி ஒரு இதயத்தை ... அன்பால் மட்டுமே நெய்யப்பட்ட ஒரு மனிதத்தை ... நேசிக்க மட்டுமே தெரிந்த ஒரு அன்பை... மீண்டும் பெற முடியுமா என்று எண்ணி வருந்தி கண்ணீர் விட்டேன் .
அதன்பிறகு அண்ணன் நீடூர் செய்யது அவர்களும் ஒரு சில வருடங்களில் அண்ணன் கம்பம் முகமதலி அவர்களும் இறைவனளவில் சேர்ந்து விட்டார்கள்.
எந்த முஸ்லிமும் செய்யாத சாதனைகளை செய்தவர்
முகமதலி . அத்தனை இஸ்லாமிய நூல்களையும் சேகரித்து மிகப்பெரிய நூலகத்தை நிர்மாணித்து வைத்திருப்பவர் அண்ணன் முகமதலி. மரணிக்கும் காலம் வரை அன்பில் தொடர்பில் இருந்தவர்கள் இவர்கள். இப்போதும் இவர்களை நான் நினைக்கிறேன்... அவர்கள் அன்பில் நனைகிறேன்..
மாபெரும் கருணையாளனாகிய அல்லாஹ் ... அந்த நல்லவர்களுக்கு மகத்தான நல்வாழ்வை சுவனத்தின் சுக வாழ்வை தந்தருள வேண்டும் என்ற பிரார்த்தனையோடு
....... அபு ஹாஷிமா
மயிலாடுதுறையில் நடந்த " இஸ்லாமிய இலக்கித் தமிழ் மாநாட்டில் " எடுத்த படம் இது.
படத்தில் .. இடமிருந்து வலமாக அண்ணன் முகமதலி ,கவிஞர் தாஹா, மதனி டாக்டர் ஹிமானா செய்யத், கவிஞர் ஜாபர் முஹைதீன், நான்(அபு ஹாஷிமா)
Abu Haashima Vaver
தகவல் Dr.Himana Syed s
No comments:
Post a Comment