Sunday, December 22, 2013

இஸ்லாமும் நுகர்வோர் கலாச்சாரமும்


சம்ஷாத் அப்துல் ஹமீத்

நுகர்வோர் கலாச்சாரம் அதன் உச்சத்தில் இருக்கிறது. ஒரு பக்கத்தில் கடுமையான ஏழ்மை –அடிப்படை தேவைகள் கூட கிடைப்பதில்லை. மறுபக்கத்தில் எல்லாமே அபரிமிதமாக இருக்கிறது. மக்கள் ஒரே வகை உணவு உண்பது அலுத்துப்போய் பல்வேறு விதமான உணவகங்களுக்குச் சென்று உண்ணுகிறார்கள். இன்னும் பலர் சலிக்கும் வரை பொருட்களை வாங்கிக் குவிக்கிறார்கள். அத்தனை பொருட்களை வைத்து மக்கள் என்ன தான் செய்வார்கள்?

ஆடை வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள் –பொதுவாக நாம் கேட்கக் கூடியது, “நான் மீண்டும் மீண்டும் உடுத்தியதையேவா உடுத்திக்கொள்ள முடியும்? ஒரு விருந்தில் அணிந்த ஆடையை என் தோழிகள் எல்லோரும் பார்த்து விட்டார்கள். அதையே அடுத்த விருந்துக்கும் அணிய முடியாது.”


இதே போல் தான் நகைகளுக்கும் –“போட்ட நகையையே திரும்பத் திரும்ப எப்படி போடுவது?” என்ற வாதம். இன்னும் செருப்பு வகைகள், குளிர் கண்ணாடிகள், கைப்பைகள், போன்ற அன்றாடம் பயன்படுத்தக்கூடியவைகளிலிருந்து, பாத்திரங்கள், அறைகலன்கள், திரைச் சீலைகள், அலங்காரப்பொருட்கள், வாகனங்கள் வரை இப்படித்தான் நியாயப் படுத்துகிறார்கள். சிலர் கை பேசிகள்மற்றும் பல மின்னணு சாதனங்கள் என்றுபுதிதாக சந்தையில் வருவதை உடனே வாங்குபவர்களாக இருக்கிறார்கள்!

நான்கு நபர்கள் மட்டும் உள்ள ஒரு குடும்பத்தில் வீடே பிதுங்கும் அளவுக்கு கண்ணாடிப் பாத்திரங்கள், பீங்கான் பாத்திரங்கள் என அக்குடும்பத்தலைவி வாங்கிக் குவித்திருக்கிறார்கள். ஏன் இத்தனை என கேட்கும்போது, அவருடைய பதில், “என்னுடைய விருந்தாளிகளுக்கு ஒரு முறை பரிமாறிய பீங்கான்களையே மறுமுறையும் எப்படி பயன்படுத்துவது? வாழ்க்கைக்கு சுவை கூட்டுவதே ‘பல வேறுபட்ட பொருட்கள் தானே!”

இந்தச் சாக்கில் மக்கள் ஊதாரித்தனமாக செலவழிப்பதிலும், சாமான்களைக் குவிப்பதிலும் ஈடுபடுகிறார்கள். பொருட்கள் வாங்குவது இதற்கு முன்னால் இத்தனை எளிதாக இல்லை. வீட்டில் உட்கார்ந்தபடியே இணையத்தின் மூலம் பொருட்கள் வாங்கலாம்!

துரதிர்ஷ்டவசமாக, இவ்வியாதி முஸ்லிம்களிடமும் பரவி விட்டது!

நீங்கள் பொருட்களை வாங்கிக்குவிக்கும் பழக்கத்திற்கு அடிமையானவராக இருந்தால், அதை எப்படி மாற்றுவது?

குர்ஆன் வசனத்தை நினைவு படுத்திக்கொள்ளுங்கள்

நம் அனைவருக்கும் அல்லாஹ்வின் நேசத்தைப் பெற விருப்பம் அல்லவா? சூரத்துல் அஹ்ஸாபில் அல்லாஹ் (சுபஹ்) சில மனிதர்களை தான் நேசிப்பதில்லை என கூறுகிறான். அவர்கள் யார்? “ஆதமுடைய மக்களே, ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழும்போது உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள். எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.”[அல் குர்’ஆன்7:31]

உங்களுக்கு அவனுடைய அதிருப்தியைப் பெற விருப்பமா? நிச்சயமாக இல்லை அல்லவா?! அப்படியானால், எப்போதும் இந்த வசனத்தை நினைவில் வைத்திருங்கள்! வெறும் இந்த ஒரு வசனம் போதும் நம்மை வீண் விரயத்திலிருந்து காப்பதற்கு. உங்களுடைய குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும், அவர்கள் ஊதாரித்தனமாக தேவையில்லாதவைகளை ஆடம்பரத்திற்க்காக வாங்கும்போது இவ்வசனத்தை நினைவு படுத்துங்கள்.

மக்களைக் கவருவது உங்களுடைய வாழ்வின் நோக்கமாக இருக்க வேண்டாம்

ஒரு விருந்தில் மக்கள் உங்கள் ஆடையைப் புகழ்ந்தால், நீங்கள் வானில் பறப்பது போல் உணர்கிறீர்கள். ஒரு வினாடி யோசித்துப்பாருங்கள் –நீங்கள் அந்த ஆடையை வடிவமைத்தீர்களா? அந்த துணியை நெய்தீர்களா? அல்லது அதைத் தைத்தீர்களா? ஒன்றுமேயில்லை –அப்படியிருக்க உங்களுக்கு என்ன பெருமை அதில்? நீங்கள் செய்ததெல்லாம் உடையை தேர்ந்தெடுத்து பணம் கொடுத்தது தான். நீங்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளைப்பற்றியும் இப்படி நினைத்துப் பார்த்தால், எப்போதும் மக்களிடம் காட்டிக்கொள்வதற்க்காகவோ, வீண் பெருமைக்காகவோ பொருட்கள் வாங்குவதைத் தவிர்க்க முடியும்.

அல்லாஹ்வைக் கவர முயற்சி செய்யுங்கள், மக்களை அல்ல

அல்லாஹ் (சுபஹ்) சூரா முல்கில் கூறுகிறான் “உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும், வாழ்வையும் படைத்தான்.. [அல் குர்’ஆன்67:2].

அல்லாஹ் (சுபஹ்)வின் வார்த்தைகள் ஆழமானவை, அர்த்தமுள்ளவை. அவன் மனிதர்களை அவர்களின் தோல்களின் நிறங்களின் அடிப்படையிலோ, சமூக, பொருளாதார நிலையின் அடிப்படையிலோ, அவர்கள் அணியும் ஆடையின் அடிப்படையிலோ மதிப்பிடுவதில்லை. அவன் அவர்களுடைய ‘செயல்களின்’ அடிப்படையில் மதிப்பிடுகிறான். அதனால், இயன்றவரை நற்செயல்கள் புரிய முயலுங்கள். இப்பூமியில் நாம் ஒரு முறை தான் நடக்கிறோம்; அதனால் நம்மைப் படைத்தவனுக்கு சேவை செய்வதன் மூலமும், நம்முடைய கடமைகளை ஆற்றுவதன் மூலமும், அவனுடைய படைப்புகளின் முன்னேற்றத்துக்காக பாடுபடுவதன் மூலமும் ஆழமான சுவடுகளை விட்டுச் செல்வோம்.

மார்க்கத்தைப் பயிலுவதில் ‘பல்வேறு வகை’ கொள்கையைப் பின்பற்றுவோம்.

உலகக் காரியங்களில் மூழ்கியிருக்கும் நாம் ஐவேளைத் தொழுகையில் மட்டும் திருப்தியடைகிறோம். அன்றாட வேலைகளுக்கிடையே, தஃப்ஸீர் (குர்’ஆன் விளக்கம்), தஜ்வீத் (சரியான அரபி உச்சரிப்பு), ஹதீஸ்கள் (முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்கள்), இறைதூதர்கள், நல்லோர்கள் வரலாறுகள் இவைகளைக் கற்க நேரம் ஒதுக்கலாம். இறைவசனங்களைப் புரிந்து, வாழ்வில் கடைபிடிப்பதோடு மற்றவர்களுடனும் வலைப்பதிவு, மின்னஞ்சல் மூலம் பகிர்ந்து கொள்வோம். நல்ல பேச்சாற்றல் இருந்தால், வாரம் ஒரு முறை அல்லது இரு முறை உங்கள் பகுதியில் உள்ளவர்களிடையே மார்க்க அறிவைப் போதிக்கலாம்.

குர்’ஆன் வசனங்களை மனனம் செய்வதற்கு நேரம் ஒதுக்குங்கள்

நாம் சிறு வயதில் பத்து சிறிய சூராக்களை மனப்பாடம் செய்திருந்தால், பல வருடங்களாக அவற்றையே மீண்டும் மீண்டும் தொழுகையில் ஓதிக் கொண்டிருக்கிறோம். புதிய அத்தியாயங்களை மனனம் செய்ய எந்த முயற்சியும் எடுப்பதில்லை. நாம் போகும் விருந்துகளுக்கு ஒரு முறை உடுத்த ஆடையை அல்லது நகைகளை மறுமுறை பயன்படுத்த வெட்கப்படும்போது, சிறுவயதில் மனப்பாடம் செய்த சூராக்களைத் தவிர வேறெதுவும் மனனம் செய்யாமல், வளர்ந்த பின்னும் தொழுகையில் அவற்றையே ஓதிக்கொண்டிருப்பதில் வெட்கப்படுவதில்லையே?!

பல்வேறு சூராக்களைத் தேர்ந்தெடுத்து மனனம் செய்து அவற்றை தொழுகையில் ஓதி நாமும் மகிழ்ந்து, நம்மைப் படைத்தவனையும் மகிழ்வுறச்செய்வோம். இது நமக்கு எத்தனை மன திருப்தியைத் தரும்! அது மட்டுமல்ல, இதற்க்காக மறுமையில் நமக்குக் கிடைக்கப்போக்கும் வெகுமதிகளுக்கு இணையாக வேறெதுவும் இல்லை. நம் அருமை நபி (ஸல்) அவர்கள் குர்’ஆனை மனனம் செய்த ஒரு விசுவாசியின் தரத்தைப்பற்றி என்ன கூறிகிறார்கள் என்று பார்ப்போம்.

இப்னு அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘குர்’ஆனை ஓதியவரிடம் அவர் சொர்க்கத்தில் நுழைந்தபின் சொல்லப்படும், ‘ஓதுங்கள், உயருங்கள்’ என்று. அவர் மனப்பாடம் செய்திருந்தது முழுவதையும் ஓதி முடிக்கும் வரை அவர் ஓதும் ஒவ்வொரு வசனத்திற்கும் (சுவனத்தில்) ஒரு தரம் உயர்த்தப்படுவார். [அபு தாவூது].

அபு ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘மறுமை நாளன்று குர்’ஆன் கொண்டு வரப்படும். அது, “யா ரப், இவரை (குர்’ஆனை ஓதி அதன்படி நடந்தவர்) அலங்கரி” என்று கூறும். அவருக்கு புகழ் மற்றும் கௌரவத்திற்க்கான மகுடம் அணியப்படும். பிறகு அது, ‘யா ரப், இதை அதிகப்படுத்து’ என்று கூறும். அவருக்கு புகழ் மற்றும் கௌரவத்திற்க்கான ஆடை உடுத்தப்படும். பிறகு அது, ‘யா ரப், இவரைக்குறித்து திருப்தி அடைவாயாக!’ என்று கூறும். அல்லாஹ்வும் அவரிடம் திருப்தி கொள்வான். “ஓதிக்கொண்டே உயருங்கள்” என்று கூறப்படும். அவர் ஓதும் ஒவ்வொரு வசனமும் அவருக்கு ஒரு நற்செயலை அருளும்.” [திர்மிதி]

ஓதுபவர் மட்டுமல்ல, அவருடைய பெற்றோரும் கௌரவிக்கப்படுவார்கள். முஆத் அல் ஜுஹானி, அறிவிக்கிறார்கள், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,”குர்ஆனை ஓதி அதன்படி நடப்பவருடைய பெற்றோருக்கு மறுமை நாளன்று ஒரு கிரீடம் கொடுக்கப்படும். அதன் பிரகாசம் சூரிய ஒளியை விட அதிகமாக இருக்கும்.” “அப்படியானால் குர்’ஆனை மனனம் செய்த ஹாஃபிஸுக்கு என்ன கிடைக்கும் என நினைக்கிறீர்கள்?” என்று அவர்கள் கேட்டார்கள். [மிஷ்காத் பகுதிI.]

புரைதா (ரலி) அறிவிக்கிறார்கள், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘எவர் குர்’ஆனை ஓதி, கற்று, அதன்படி நடக்கிறாரோ, அவருடைய பெற்றோருக்கு மறுமை நாளன்று சூரிய ஒளியை ஒத்த பிரகாசத்துடனுள்ள கிரீடம் அளிக்கப்படும். அவர்களுக்கு இவ்வுலகத்தில் உள்ள எந்த ஆடையையும் விட மிகச் சிறந்த ஆடை அணிவிக்கப்படும். அவர்கள் கேட்பார்கள், ‘எங்களுக்கு ஏன் இது கொடுக்கப்பட்டுள்ளது?’. “உங்கள் பிள்ளை குர்’ஆன் படித்ததால்.” என்று அவர்களிடம் கூறப்படும். [அல் ஹாகிம், 1/756]

சுபஹானல்லாஹ்! அத்தகைய அச்சம் நிறைந்த நாளில் வெகுமதிகளும், கௌரவமும் பெற யாருக்குத்தான் ஆசையிருக்காது?! அல்லாஹ் (சுபஹ்) நம்மையும் குர்’ஆனை மனனம் செய்து அதன்படி நடந்த அதிர்ஷ்டசாலிகளைப் போல் ஆக்குவானாக. ஆமீன்.

அன்பு வாசகரே, ‘வாழ்க்கைக்கு சுவை கூட்டுவதே ‘பல வேறுபட்ட பொருட்கள்’ தான்‘ – இந்தச் சொற்றொடர் இப்போது உங்களுக்கு ஒரு புதிய அர்த்தத்தைத் தருகிறதா?

நீங்கள் இதன் மூலம் பயன் பெற பிரார்த்திக்கிறேன். ஆமீன்.
Source : http://kulasaisulthan.wordpress.com

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails