எப்போதும் போலத்தான்
அப்பொழுதும் புலர்ந்தது
விண்ணிறைந்த வெள்ளொளியில்
காவிக்கறை படியும் என
கணித்திருந்தால்
விடியாமலேயே
முடிந்திருக்கும் அந்நாள்
தொழுகைக்கான இடம் அழித்து
வேதனையால்
அழுகைக்கான வழி வகுத்தநாள்
அன்று
பதுங்கிப் பாய்ந்தன
நயவஞ்சக நரிகள்
பின்னாலிருந்து
பிடரியில் தாக்கின
கடப்பாரைகள் கொண்டு
கரசேவை செய்தனர்
தடுப்பாரைக் கொன்று
தரைமட்டம் ஆக்கினர்
இந்தியாவின்
மதச் சார்பின்மைக்கு
சாவுமணி அடித்து
இறையாண்மைக்கு
இழவு தினம் அனுசரிக்கப்பட்டது
அன்று முதல்தான்
இறையில்லம் தகர்க்கப்பட்டு
வரலாறு திரிக்கப்பட்டு
இந்தியா
இளித்துக் கொண்டே
இயலாமையை
ஒளித்துக் கொண்டே
குரங்கு பங்கு வைத்த ஆப்பத்தைப்போல்
நீதியைப் பிய்த்துப்பிய்த்து
மீதியைத் தந்தது
களவுபோனப் பொருள்
கைக்குக் கிடைத்தது...
கால் பங்கிற்கு அரைப் பங்கு
கமிஷன் போக!
நிலுவையில் நின்றது
நிலத்தகறாரல்ல...
நிர்பந்தத் திற்குட்பட்டு
நீதி சொல்ல!
யுத்தமும் ரத்தமும்
என - இன்று
மொத்தமும் பறிபோய்...
சத்தமில்லாமல்
சகித்துக் கிடக்கிறது
என் சமூகம்!
காலைக் காட்சியின்
சுவரொட்டியை விட
கேவலமாகிப் போனது
சட்டமும் நீதியும்!
பாரத மாதாவின்
பாதம் பூசிக்கும்
படித்தவர்களே...
மானம் போகுதைய்யா-
காவிகள்
பிய்த்துப்போட்ட
மாதாவின் மாராப்பைத்
தைத்துப் போடுவதெப்போ?
-சபீர்
Source : http://www.satyamargam.com
No comments:
Post a Comment