Saturday, March 8, 2014

திருமாவளவன்

திருமாவளவன் முஸ்லிம்களின் உரிமைக் குரலாய் ஒலிக்கிறார்.

தமது கடந்தகால செயல்பாடுகளின் மூலம் முஸ்லிம்களின் நம்பிக்கைக்குரியவராகவும், தமது நிகழ்கால நடவடிக்கைகளின் மூலம் முஸ்லிம்களின் பேரன்பைப் பெற்றவராகவும், தமது எதிர்கால இலக்குகளின் மூலம் முஸ்லிம்களின் எதிர்பார்ப்புக்குரியவராகவும் திருமா காட்சியளிக்கிறார்.

1999 ஆம் ஆண்டுதான் திருமாவளவன் தேர்தல் பாதைக்கு வந்தார். ஆனால், 1990 களிலிருந்தே சமூக அமைப்பாக இயங்கிக்கொண்டிருந்த காலம் தொட்டே அவர் முஸ்லிம்களுக்காக குரல் எழுப்பி வருகின்றார்.
1992, டிசம்பர் 6 அன்று பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டபோது மதுரை வீதிகளில் களமிறங்கி உடனடியாக தமது எதிர்ப்பை பதிவு செய்தவர் அவர்.

“எரிபடும் சேரிகளில், இடிப்படும் மசூதிகளில் புறப்படும் விடுதலைச் சூறாவளி” என்னும் முழக்கத்தை முன்வைத்து முஸ்லிம்களை ஈர்த்தவர். ஈழத்தை ஆதரிப்பதுபோலவே பாலஸ்தீனத்தையும் ஆதரித்து வருபவர். சதாம் ஹுஸைனின் தீரத்தால் ஈர்க்கப்பட்டவர். தீவிர ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்.

தமிழக முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டு கோரிக்கையைச் சட்டப் பேரவையில் முழங்கியவர். அதை வலியுறுத்தி தனியொரு மாநாட்டை நடத்தியவர். முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலைக்காகப் போராடியவர். எல்லா முஸ்லிம் அமைப்புகளோடும் தோழமை போற்றுபவர்.

“மக்களே மசூதியைக் கட்டி எழுப்புவோம்” என்று சொல்லி பாபர் மஸ்ஜித் மீட்புப் போராட்டத்தை முன்னெடுத்தார். வேலூர் கோட்டை பள்ளிவாசலுக்குள் தொழுகை நடத்த உரிமை கோரி மசூதி நுழைவுப் போராட்டத்தை நடத்தினார்.

முஸ்லிம்களின் செலவில் ஏற்பாடு செய்யப்படும் இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்று விருந்துண்டு செல்லும் பிற அரசியல்வாதிகளைப் போலல்லாமல், முஸ்லிம்களை அழைத்து இப்தார் விருந்து கொடுத்து அசத்தினார்.

முஸ்லிம்களைப் போல் தாமும் நோன்பிருந்து ஒரு நோன்பாளியாக இப்தாரை மேற்கொண்டார். மேலும் தம்மைப் போலவே தமது தொன்டர்களையும் நோன்பு நோற்கச் செய்தார்.

தலைவர்களின் பெயரால் தமிழக அரசு வழங்கிவரும் விருதுகளில் காயிதே மில்லத் பெயரில் ஏன் ஒரு விருது இல்லை எனக் கேள்வி எழுப்பினார்.

அரசுக்கு உறைக்கும் வண்ணம் தமது கட்சியின் சார்பில், காயிதே மில்லத் பெயரில் விருது அறிவித்து அதை அப்துல் நாசர் மதானிக்கும், குணங்குடி ஹனீபாவுக்கும், முஸ்லிம் சமூக ஆளுமைகள் பலருக்கும் கொடுத்து அனைவரையும் அதிர வைத்தார்.

தமது கட்சியின் பொருளாளர் பொறுப்பை , துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பை முஸ்லிம்களுக்கு வழங்கினார். மேலும் பல நிர்வாகப் பொறுப்புகளில் ஏராளமான முஸ்லிம்களை நியமித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் தனது முதல் கன்னிப் பேச்சிலேயே முஸ்லிம்களின் பல்வேறு பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தார்.

பெரியார்தாசன் இஸ்லாத்தைத் தழுவியபோது பொதுவெளியில் பலரும் அவரை கடுமையாக விமர்சித்த வேளையில், பெரியார்தாசனை ஆரத்தழுவி வாழ்த்தினார்.

புரட்சியாளர் அம்பேத்கரின் பெரரைச் சொல்லி அரசியல் களத்திற்கு வந்த பலரையும் இந்துத்துவம் மென்று விழுங்கிவிட்ட நிலையில், இந்துத்துவத்தை வேரறுக்கும் வலிமைகொண்ட ஒரே ஆளுமையாக திருமாவளவன் களமாடுகின்றார்..

முஸ்லிம்களை கருவறுக்கும் கொள்கையுடைய பாரதீய ஜனதா கட்சியுடன் தமிழகத்தின் பெரிய கட்சிகள் முதல், சிறிய கட்சிகள் வரை எல்லா கட்சிகளும் கூட்டணி வைத்துவிட்ட நிலையில் பா.ஜ.கவுடன் அணி சேராத ஒரே தலைவராக திருமாவளவன் மட்டுமே உயர்ந்து நிற்கிறார். மோடி எதிர்ப்பை முழங்கும் தேசிய முகமாகவும் அவர் முன் நிற்கிறார்.

தாழ்த்தப்பட்ட தலித் மக்களை கருவிகளாக்கி, ஒடுக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிராக அவர்களைத் தூண்டிவிடும் இந்துத்துவ சூழ்ச்சியை முறியடித்த மாபெரும் தலைவராக திருமாவளவன் திகழ்கிறார். தலித்துகளுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே சண்டைகள் மூண்டதும், மண்டைகள் உடைந்ததும் இப்போது பழங்கதையாகி விட்டது. தலித்துகளும் முஸ்லிம்களும் 'தொப்புள்கொடி உறவுகள்' எனும் கருத்தை விதைத்து, இரு சமூகங்களுக்கும் இடையே சகோதரத்துவத்தை வளர்த்திருக்கிறார் திருமாவளவன்.

'பாபர் மசூதி இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்றும், மசூதி இடம் ராமர் கோவிலுக்குச் சொந்தமானது என்றும்' அலகாபாத் உயர்நீதி மன்றம் ஒரு அநீதியான தீர்ப்பைத் தந்தபோது, எல்லா அரசியல் வாதிகளும் அந்தத் தீர்ப்பை வரவேற்று அறிக்கை விட்டனர். முஸ்லிம்களின் மனநிலைக்கு எதிராக அனைத்துத் தலைவர்களும் கருத்து கூறினர். தீர்ப்பு திருப்தியளிப்பதாகக் கூறி முஸ்லிம்களின் நெஞ்சில் வேல் பாய்ச்சினர். அந்தத் துயர வேளையில் முஸ்லிம்களின் பக்கம் நின்று, நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகக் கொந்தளித்தார் திருமாவளவன். 'தீர்ப்பைத் திருத்துவோம்; மீண்டும் மசூதியைக் கட்டுவோம்' என வீதியெங்கும் அவர் முழங்கினார். அந்தக் கருத்தை வலுயுறுத்தி கருத்தரங்குகளை நடத்தினார். ஆபத்தான வேளைகளில் முஸ்லிம்களின் பக்கம் நிற்கும் சரியான நண்பன் தான் மட்டும்தான் என்பதை மீண்டும் ஒருமுறை நீருபித்தார்.

காஷ்மீர் பிரச்சனையில் இந்திய அரசு மேற்கொண்டுவரும் தவறான அணுகுமுறைகளை சுட்டிக் காட்டவும், இந்திய ராணுவத்தின் அத்துமீறல்களை கண்டிக்கவும், அரசியல் தலைவர்கள் பலர் தயங்கிய நிலையில், 'காஷ்மீர் காஷ்மீரிகளுக்கே சொந்தம்' என்று துணிந்து கருத்துரைத்தவர் திருமாவளவன். இந்திய அரசின் சார்பில் அமைக்கப்பட்ட குழுவில் இடம்பெற்று காஷ்மீருக்கு நேரில் சென்று ஆய்வு செய்த அவர், அம்மக்களின் துயரங்களையும், வேதனைகளையும் அப்பட்டமாக வெளிப்படுத்தினார். காஷ்மீர் மக்களின் குரலாக ஒலித்த எழுத்தாளர் அருந்ததி ராய் மீது இந்திய அரசு அடக்குமுறைகளை ஏவ முயன்ற போது, அருந்ததி ராயிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார் திருமாவளவன்.

நாடு முழுவதும் வாக்குகளைத் தீர்மானிக்கும் சக்திகளாகவும், மக்கள் தொகை அடிப்படையில் ஒருங்கிணைந்த மிகப்பெரும் சமூகங்களாகவும், இந்துத்துவத்தின் நேரடித் தாக்குதல்களுக்கு இலக்காகின்ற இரட்டைச் சமூகங்களாகவும் இருக்கின்ற தலித்துகளையும், முஸ்லிம்களையும் ஒருங்கிணைத்து மிகப்பெரும் அரசியல் சக்தியாய் உருமாற்றுவதற்கு திட்டமிட்டு களப்பணியாற்றி வருகிறார் திருமாவளவன்.

தலித்துகள் மற்றும் முஸ்லிம்களிடம் காலம் காலமாக உழைப்பை உறுஞ்சிய அரசியல் கட்சிகள், அறுவடையில் ஒரு சிறு பங்கைக் கூட அந்தச் சமூகங்களுக்குத் தராமல், முழுவதையும் அபகரித்து வரும் நிலையில், அந்த அவல நிலையை மாற்றி ஒரு புதிய விடியலை ஏற்படுத்த உழைத்து வருகிறார் திருமாவளவன்.

'2016 தலித் - இஸ்லாமியர் ஆண்டு' என்று அறிவித்து, அதற்காக களம் அமைத்து, அந்த இலக்கை அடைவதற்கான செயல் திட்டங்களை வகுத்து பயணித்து வருகிறார் திருமாவளவன்.

2011 தேர்தலில் தி.மு.க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பத்து தொகுதிகளில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கக் கூடிய ஒரு பொதுத்தொகுதி கூட கிடைக்காத கையறு நிலையிலும் பத்தில் ஒன்றை முஸ்லிமுக்கு ஒதுக்கி, முஸ்லிம்களுக்கான உரிய இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்திக் காட்டியிருக்கிறார் திருமாவளவன். அந்த வகையில் அவர் உண்மையான சமூகநீதிப் போராளியாகவும், சமூகநீதிக் காவலர் தந்தைப் பெரியாரின் ஒப்பற்ற வாரிசாகவும் உயர்ந்து நிற்கிறார்.

ஆளுமைப் பண்பும், போர்க்குணமும், தலைமைத்துவமும், பன்முக ஆற்றலும், பகுத்தறியும் பக்குவமும் உடைய திருமாவளவன்அவர்கள் , தனது ஒவ்வொரு செயல்பாடுகளின் மூலமும் முஸ்லிம்களின் நம்பிக்கையைப் பெற்று வருகிறார்.

நன்றி
வெளியீடு: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

( கட்டுரை முழுமையாக தரவில்லை .
சில பகுதிகள் மட்டும் இங்கு .
தேர்தல் அடிப்படையாக இல்லாமல் திருமாவளவன் அவர்களின் மனதை கவர்ந்த மனிதர் என்ற உயர்ந்த நோக்கத்தை மனதில் கொண்டு தரப்பட்டுள்ளது )

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails