Sunday, March 30, 2014

தூதுஆன்லைன் இணைய தளத்தின் புதிய வடிவ துவக்க விழா!

கடந்த 28.03.2014 வெள்ளியன்று துபையில் தூதுஆன்லைன் இணையதளத்தின் புதிய வடிவ துவக்க விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. துபை காயல் நல மன்றத் தலைவரும், ஈடிஏ நிறுவனத்தின் ஜீனத் பிரிவின் எக்ஸக்யூட்டிவ் டைரக்டருமான ஜே.எஸ்.ஏ. புகாரீ அவர்கள் புதிய வடிவத்தைத் துவக்கி வைத்தார்.

துபையில் வசந்த பவன் அரங்கில் மாலை 7.30 மணிக்கு நிகழ்ச்சிகள் ஆரம்பித்தன. தூதுஆன்லைன் இணையதளத்தின் முதன்மை ஆசிரியர் பொறியாளர் அப்துல் கஃபூர் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.



தூதுவின் ஆசிரியர்களில் ஒருவரும், பொறியாளருமான எம்.எஸ். அப்துல் ஹமீது அவர்கள் தூதுவின் வரலாறு குறித்து உரை நிகழ்த்தினார். 1998ல் ''தோற்றுவாய்" என்ற கையெழுத்துப் பிரதியில் ஆரம்பித்து, "தமிழ் மலர்" என்ற அச்சுப் பிரதியாக மாறி, "செய்திச் சேவை" என்ற பெயரில் பின்னர் வலம் வந்து, 2007 இறுதியில் "பாலைவனத்தூது" என்ற பெயரில் அச்சுப் பிரதியாக பரிணமித்து, பின்னர் 2009 துவக்கத்தில் "பாலைவனத்தூது வலைப்பூவாக" வலம் வந்து, 2011 துவக்கத்தில் "தூதுஆன்லைன் இணையதளமாக" மாறி இனிமையான சேவையை தொடர்ந்து செய்து வரும் தூதுவின் வரலாறை அவர் தன்னுரையில் எடுத்துரைத்தார்.


பின்னர் விழாவின் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட பத்திரிகைத் துறை நிபுணர்கள் சிறப்புரைகள் ஆற்றினர். அமீரகத்தில் வெளிவரும் தி நேஷன்  ஆங்கில நாளிதழில் பணி புரியும் பத்திரிகையாளர் யாசீன் கக்கன்டே, நியூ இந்தியா டிவி இணையதளத்தின் நிர்வாக இயக்குனரும், பொறியாளருமான முஹம்மத் இஸ்மாயீல், அமெரிக்காவைச் சார்ந்த சர்வதேச பத்திரிகையாளரும், கட்டுரையாளருமான மரியம் இஸ்மாயீல்,  அமீரகத்திலிருந்து வெளிவரும் குட் ஹெல்த் ஆங்கிலப் பத்திரிகையின் வினியோக மேலாளரும், அமீரகத் தமிழ் மன்றத் துணைத் தலைவருமான எழுத்தாளர் ஜஸீலா ஆகிய சிறப்பு அழைப்பாளர்கள் ஊடகத்துறையைப் பற்றி உரையாற்றினார்கள்.

சிறப்பு விருந்தினர் ஜே.எஸ்.ஏ. புகாரீ அவர்கள் தனது சிறப்புரையில், Communication என்ற தகவல் தொடர்பின் அவசியம்  குறித்தும், அதன் நவீன வளர்ச்சி குறித்தும் கருத்தாழமிக்க கருத்துகளை தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் எடுத்துரைத்தார்.

முன்னதாக தூதுஆன்லைன்.காமின் புதிய அனிமேஷன் வெளியிடப்பட்டது. பின்னர் விடியல் வெள்ளி  மாத இதழின் தலைமை ஆசிரியர் முஹம்மது இஸ்மாயீல் அவர்களும், எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி அவர்களும் தூதுவுக்கு அனுப்பியிருந்த வாழ்த்துச் செய்திகளின் காணொளிகள் ஒளிபரப்பப்பட்டன.

சிறப்பு விருந்தினர் ஜே.எஸ்.ஏ. புகாரீ அவர்களுக்கும், சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்ட பத்திரிகையாளர்களுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

மொத்த நிகழ்ச்சியையும் தூதுவின் கட்டுரையாளர் வலசை ஃபைஸல் அவர்கள் சிறப்புற நெறிப்படுத்தி, தொகுத்து வழங்கினார். இறுதியாக தூதுவின் செய்தியாளர் கவிஞர் பத்ருஸ் ஸமான் அவர்கள் நன்றியுரை நவில விழா இனிதே நிறைவுற்றது.

புதுப் பொலிவுடனும், அதீத உத்வேகத்துடனும் பயணிக்கும் தூது ஆன்லைன் (http://www.thoothuonline.com/) இணைய தளத்திற்கு, சத்தியமார்க்கம்.காம் இணைய தளக்குழு தமது வாசகர்களுடன் இணைந்து வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறது.
Source : http://www.satyamargam.com/

2 comments:

Anonymous said...

மாஷா அல்லாஹ், தூது மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.. உங்களுடைய இந்த தகவலுக்கும் நன்றி..

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

தூது ஆன்லைன் வெற்றிப் பயணத்திற்கு நமது நல்வாழ்த்துக்கள்!

LinkWithin

Related Posts with Thumbnails