அஸ்ஸலாமு அலைக்கும்,
இந்தியாவிலேயே டச் பண்ண முடியாத ஒரு தொகுதி உண்டென்றால் அது ஹைதராபாத் தொகுதியாகவே இருக்க முடியும் என்கின்றது சமீபத்திய தி ஹிந்து இதழ். காரணம் அசாதுத்தீன் உவைசி. கல்வி, விவேகம், வேகம், சாதுர்யம் இவை தான் இவரின் அடையாளங்கள். இவை நிச்சயம் மிகைப்படுத்தப்பட்ட வார்த்தைகள் கிடையாது. பாரிஸ்டர் பட்டம் பெற்ற அசாதுத்தீன் உவைசியின் உரையை அல்லது விவாதத்தை நீங்கள் பார்த்திருந்தால் எளிதாக இந்த முடிவுக்கு தான் வருவீர்கள். 1984-ஆம் ஆண்டிலிருந்து இத்தொகுதியை உவைசி சகோதரர்களின் MIM கட்சியே தக்க வைத்துக்கொண்டிருக்கின்றது. மற்ற தொகுதிகளில், எனக்கு சீட் கொடுக்கவில்லை அவருக்கு சீட் கொடுக்கவில்லை என்று சண்டைகள் நடந்துக்கொண்டிருக்க, இங்கேயோ உவைசியை யார் எதிர்ப்பது என்ற தயக்கமே மிஞ்சுவதாக தி ஹிந்து சொல்கின்றது.
அசாதுத்தீன் உவைசி, அக்பருதீன் உவைசி, புர்ஹானுதீன் உவைசி ஆகிய இந்த சகோதரர்களில் அசாதுத்தீன் உவைசி ஹைதராபாத் எம்பி-யாகவும், அக்பருதீன் உவைசி சட்டமன்ற உறுப்பினராகவும், இச்சகோதரர்களால் நடத்தப்படும் உர்து பத்திரிக்கைக்கு புர்ஹானுதீன் உவைசி ஆசிரியராகவும் இருக்கின்றார். அசாதுத்தீன் உவைசி மீதிருக்கும் ஓர் மதிப்பிற்குரிய பார்வை அக்பருதீன் உவைசி மீது எனக்கு கிடையாது. அதற்கு காரணம் அப்பப்போது வெளிப்படும் அவருடைய வெறுப்பு பேச்சுக்கள்.
பாராளுமன்றத்தில் சிறப்பாக செயல்படுபவருக்கு கொடுக்கப்படும் சன்சாத் ரத்னா விருதிற்கு இவ்வருடம் அசாதுத்தீன் உவைசி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இத்தருணத்தில் இந்த தேர்தலும் அவருக்கு கேக் வாக்காக தான் இருக்க போகின்றது என்பது ஊடகங்களின் யூகம். இறைவன் நாடினாலன்றி உவைசியின் வெற்றியை யாரும் தடுக்கக்கூடிய சூழல் தற்போதைக்கு இல்லை என்பதே நிசர்சனமான உண்மை...
வஸ்ஸலாம்,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
நன்றி தி இந்து
No comments:
Post a Comment