ராமேஸ்வரம் ராஃபி —
இலங்கை இஸ்லாமியர்களின் சமையலில் இடம்பெறும் இனிப்பு வகை உணவுகளில் தொதல் மிகவும் முக்கியமான உணவு. இது பச்சரிசி, தேங்காய், சீனி, முந்திரி, ஏலக்காய் உட்பட்ட பொருட்களைப் பயன்படுத்திச் செய்யப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் இப்பலகாரம் சர்க்கரைக் கழி என்று அழைக்கப்படுகிறது.
தென்மாவட்டங்களில் குறிப்பாக கீழக்கரை, மரைக்காயர் பட்டிணம், காயல்பட்டிணம், அதிராமப்பட்டிணம் ஆகிய ஊர்களில் வாழும் இஸ்லாமியர்கள் வர்த்தக ரீதியாக இலங்கைக்குச் சென்று வந்ததன் வழியாக அங்கு இருந்த பலவகையான உணவு வகைகள் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளது. அதில் தொதல் முக்கியமான பண்டமாகும்.
இன்று ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சுற்றி தென்னந்தோப்புகள் அதிகம். இதனால் கீழக்கரையில் 50க்கும் மேற்பட்டவர்கள் குடிசைத் தொழிலாகத் தொதலை செய்து சிங்கப்பூர், மலேசியா, வளைகுடா நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறார்கள். இங்குச் செய்யப்படும் தொதல் ஒரு மாதம் ஆனாலும் கெடாமல் இருக்கிறது. ஒரு கிலோ தொதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.. 250 வரையிலும் விற்கப்படுகின்றது.
செய்முறை
பச்சரிசி 1 கோப்பை, 5 தேங்காய், சர்க்கரை 1 கிலோ, பனை வெல்லம் 250 கிராம், 4 மேசைக் கரண்டி ஜவ்வரிசி (அல்லது அதே அளவு வறுத்த பாசிப்பருப்பு) ஏலக்காய் தேவையான அளவு பச்சரிசியை ஊறவைத்து இடித்து அரித்து மாவாக எடுத்துக் கொள்ள வேண்டும். தேங்காயைத் துருவி அதன் பாலைத் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அகன்ற சட்டியில் பச்சரிசி மாவு, தேங்காய்ப் பால் (6 டம்ளர்), சீனி, பனை வெள்ளம், பாசிப்பருப்பு இவற்றை ஒன்றாக ஊற்றி இரண்டு மணி நேரம் கிளர வேண்டும்.
பின்னர் 2 டம்ளர் தேங்காய்ப் பாலை ஊற்றிக் கலவை திரண்டு அல்வா போன்ற வடிவம் வரும் வரையிலும் கிண்ட வேண்டும். பின்னர் ஏலக்காயைப் பொடியாக்கித் தூவ வேண்டும். பின்னர் தேவைப்பட்டால் முந்திரிப் பருப்பை மேலே தூவலாம்.
அல்வா வடிவத்தில் கையில் ஒட்டாத பதம் வந்ததும் சட்டியை அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்கவும். நன்றாக ஆறிய பின்னர் கேக்குகள் போன்று வெட்டிப் பரிமாறலாம்.
Keywords: கீழக்கரை தொதல், செய்முறை, ஏற்றுமதி, ராமநாதபுரம், தென்மாவட்டங்கள், சிலோன் தொதல், இலங்கை தொதல், சர்க்கரைக் கழி
நன்றி
Source: http://tamil.thehindu.com/
No comments:
Post a Comment